இயல்பாகவே நமக்கு நகைச்சுவை உணர்வு குறைவு. காரணம் சிரிப்பது மரியாதையற்ற செயல். பெரியவர்களுக்கு முன் சிரிக்கக்கூடாது. கடவுளுக்கு முன் சிரிக்க இயலாது. இங்கு நிறைய கூடாதுகள் நம்மிடம்.
மனிதன் மட்டும்தான் சிரிக்கமுடியும் என நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். சிம்பன்சி (குரங்கு)கள் சிரிக்கின்றன. நாம் ஹா ஹாஹாஹா... எனச் சிரிக்கிறோம். அவை ஹாஹோ... ஹாஹோ... எனச் சிரிக்கின்றன.
மற்ற விலங்குகளும் புன்னகைபுரிகின்றன. ஆனால் ஒரு நகைச்சுவையைப் பகிர்ந்துகொண்டு வாய்விட்டுச் சிரிப்பதும், திரும்பத் திரும்ப அவற்றை நினைவுகூர்ந்து மகிழ்வதும் நமக்கு மட்டும் சாத்தியம்.
மகிழ்ச்சியுடன் இருப்பவருக்கு இயற்கையே சிரிப்பது போலத்தான் தோன்றும். பூக்கள் செடிகளின் புன்னகைகளாகவும், அலைகள் கடலின் சிரிப்பலைகளாகவும் தென்படும். குயில் குதூகலத்தால் கூவுவதாகவும், மயில் மகிழ்ச்சியில் ஆடுவதாகவும் மனத்திற்குப்படும்.
சிரிப்பு நுண்ணறிவின் வெளிப்பாடு, உயர்ந்த அறிவு நிலையில் இருப்பவர்களால்தான் மற்றவர்களைச் சிரிக்கவைக்க இயலும், சிரிக்கும்போது மட்டும்தான் நாம் நிகழ்காலத்திலேயே நின்றிருக்கிறோம். அப்போது தியானத்திற்கு இணையாக அது இருக்கிறது.
சிரிப்பு நம்மைத் தளர்த்திக்கொள்ள உதவுகிறது. நம் நரம்புகளில் இருக்கும் இறுக்கம் குறைய சிரிப்பு மருந்தாகிறது. மந்திரமாகிறது.
அதனால்தான் அதிகாரத்தின் நெருக்கடியில் இருந்தவர்களுக் கெல்லாம் அவர்களைச் சிரிக்கவைக்க அருகில் அறிவாளிகள் இருந்தார்கள். அக்பருக்கு ஒரு பீர்பால் கிருஷ்ணதேவராயருக்கு ஒரு தெனாலி.
இன்றைய இளைஞர்களில் பலர் எதிர்காலக் கனவுகளிலும் நிகழ்கால நேரமின்மையினாலும் சிக்கி, சிரிக்கின்ற இயல்பை இழந்து இறுகிப்போன முகத்தோடு இருப்பதைப் பார்க்கிறோம் 'சிரிக்காமல் இருந்தால் நல்ல எதிர்காலம் உண்டு' என்று யாரும் உத்தரவாதம் தராமலேயே அவர்கள் அதைக் கடைப் பிடிக்கிறார்கள். கணினிக்கு முன் அமர்ந்து பலரும் கீ போர்டு ஆகிவிட்டார்கள். எதிரேயிருப்பவர்கள் சாஃப்டுவேருக்கு இணையான வேகத்தில் இயங்கவேண்டும் என எதிர்பார்த்துக் கோபப்பட ஆரம்பித்து விட்டார்கள்.
நகைச்சுவையாக இருப்பவர்கள் எல்லாம் செயல்படாதவர்கள் அல்லர். மாறாகத் தாங்கள் செயல்படுவதை சாதனையாகக் கருதாமல், பூதாகரமாக செயல்படுவதைச் ஆக்கிக்காட்டாமல் அவர்கள் பணியாற்றுபவர்கள். இயேசு கிறிஸ்துவுக்குக்கூட நகைச்சுவையுணர்வு இருந்ததாக sand and foam (மணலும் நுரையும்) நூலில் கலீல்கிப்ரான் குறிப்பிடுகிறார்.
மகாத்மாகாந்தி நகைச்சுவையுணர்வு உடையவராக இருந்ததாகக் குறிப்புகள் கூறுகின்றன. அதனால்தான் அவர் சென்ற இடங்கள் எல்லாம் நிறைய குழந்தைகள் சூழ்ந்துகொண்டனர்.
முகமது நபியும் நிறைய நகைச்சுவை உணர்வு நிறைந்தவர்தான்.
வயதான மூதாட்டி ஒருவர் அவரிடம் வந்து, "நான் சுவனபதிக்குச் செல்லமுடியுமா” என்று கேட்டார்.
சிறிது நேரம் யோசித்துவிட்டு 'வயதான மூதாட்டியால் முடியாது' என்றார்.
அந்த மூதாட்டி வருத்தமடைந்தபோது 'வயதான மூதாட்டி சுவனபதிக்குள் நுழையும்போது அழகான குமரியாகிவிடுவாள்' என்று சிரித்தபடி கூறினார்.
இப்படி ஆன்மீக நதியில் தழைத்தோங்கியவர்கள் யாருக்கும் சிரிப்பு பகையாக இருந்ததில்லை. அதனால்தான் தொல்காப்பியர் கூட "நகையே" என ஆரம்பித்து மெய்ப்பாடுகள் வரிசையில் சிரிப்புக்கு முதலிடம் தந்தார்.