செங்கற்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றத்தில் அமைந்துள்ளது அருள்மிகு ருத்ரகோட்டீஸ்வரி சமேத ஸ்ரீ ருத்ரகோட்டீஸ்வரர் திருக்கோயில். இது திருக்கழுக்குன்றத்தின் மிகவும் பழைமையான முதன்மைக் கோயிலாகக் கருதப்படுகிறது. கோடி ருத்திரர்கள் தனித்தனியே கோடி லிங்கங்களை பிரதிஷ்டை செய்து பூஜித்த பெருமை உடைய ஒரே தலம் இதுவாகும். ஒரு மனிதன் கோடி பாவங்களைச் செய்திருந்தாலும் இத்தல பெருமானிடம் தனது தவறுகளைச் சொல்லி வருந்தி வேண்டிக் கொள்வதன் மூலம் அனைத்து பாவங்களையும் ருத்திரகோட்டீஸ்வரர் போக்கி அருளுவார். காசி, சிதம்பரம், திருவாரூர், திருவண்ணாமலை, காஞ்சி, காளத்தி, மதுரை போன்ற தலங்கள் இறைவனின் உடலாகவும், கோடி உருத்திரர்கள் வழிபட்ட இந்தத் தலம் சிவபெருமானின் இதயப் பகுதியாகவும் விளங்குகிவதாக ஐதீகம்.
தேவர்கள் அமுதம் வேண்டி பாற்கடலைக் கடைவதற்கு மத்தாக மலையைப் பெயர்த்தனர். அதன் பாதாளத்திலிருநது அசுரர் கூட்டத்தினர் தோன்றி முனிவர்கள், தேவர்கள், மக்களைத் துன்புறுத்தி அழிக்கத் தொடங்கினர். இதை அறிந்த பிரம்மன், இந்திரன், தேவர்கள் முதலானோர் ஈசனை வேண்டித் தங்களைக் காத்தருளுமாறு பிரார்த்தித்தனர். அசுரர்களை அழிப்பதற்காக ஈசன் தனது திருமேனியிலிருந்து பலம் மிக்க கோடி உருத்திரர்களைத் தோற்றுவித்தார். உருத்திரர்கள் 32 ஆயுதங்களை ஏந்தியவர்கள். அவர்கள் ஈசனை வணங்கி நிற்க, அவரோ அசுரர்களை அழித்து இவ்வுலகத்தைக் காக்குமாறு ஆணையிட்டார். ஈசனின் கட்டளைப்படி கோடி உருத்திரர்களும் அசுரர்களை அடியோடு அழித்தனர்.
பின்னர், கோடி உருத்திரர்களும் அசுரர்களைக் கொன்ற பாவம் நீங்க, ஈசனிடம் வழி கேட்டனர். ‘ஒவ்வொருவரும் நித்தமும் எம்மை நினைத்து தவமியற்றி அர்ச்சனை செய்து பூஜித்தால் எத்தகைய கொடிய பாவங்களும் உங்களை விட்டு நீங்கிவிடும்’ என்று கூறி அருள்புரிந்தார். அதோடு, ‘வேதகிரிமலையே அதற்குத் தகுந்தத் தலம்’ என சிவபெருமான் கூற, கோடி உருத்திரர்களும் வேதமலையில் தவமியற்றி அர்ச்சனை செய்து பூஜித்ததன் பயனாக அவர்கள் அனைவருடைய பாவங்களும் நீங்கப் பெற்றதாக வரலாறு.
அதையடுத்து, கோடி உருத்திரர்களும் தங்கள் பெயரிலேயே இந்தத் தலமும் தீர்த்தமும் விளங்க வேண்டும் என்று ஈசனிடம் வேண்டிக் கொண்டனர். அதன்படியே இத்தலம் ருத்திரகோடித்தலம் என்றும், ஈசனுக்கு ருத்ரகோட்டீஸ்வரர் எனவும், அம்பாளுக்கு ருத்ரகோட்டீஸ்வரி எனவும், இத்தலத்தின் தீர்த்தத்துக்கு ருத்ரகோடி தீர்த்தம் என்ற பெயரும் உண்டாயிற்று.
நான்குநிலை இராஜகோபுரம் கம்பீரமாகக் காட்சி தருகிறது. கோயிலுக்கு வெளியே வலதுபுறத்தில் ருத்ரகோடித் தீர்த்தம் அமைந்துள்ளது. நுழைவாயிலின் இடதுபுறத்தின் மேற்கு பக்கத்தில் அதிகார நந்தி, சுயம்பிரபை தேவியுடன் அருளுகிறார். இது வேறெந்த தலத்திலும் காண இயலாத ஒரு அபூர்வமான சிற்பமாகும். கருவறையில் ஈசன் ருத்ரகோட்டீஸ்வரர் என்ற திருநாமம் தாங்கி லிங்க சொரூபத்தில் அருளுகிறார். இறைவன் சுயம்பு மூர்த்தி. அம்பாள் ருத்ரகோட்டீஸ்வரி என்ற திருநாமம் தாங்கி தெற்கு திசை நோக்கி நின்ற திருக்கோலத்தில் அருளுகிறார். வெளிச்சுற்றுப் பிராகாரத்தில் ஒரு மேடையின் மீது நாகர்கள் அமைந்துள்ளார்கள். வாழைமரம் இத்தலத்தின் தல விருட்சமாகும்.