பழநிமலை ஆண்டவனுக்கு பிரார்த்தனை செய்துகொண்டு காவடி எடுப்பது என்பது இன்றைக்கும் ஒரு பிரபலமான சடங்கு. சிவகிரி, சத்தியகிரி ஆகிய இரு மலைகளையும் அகத்திய முனிவரின் சீடனான இடும்பன் காவடியாகக் கட்டி கயிலையில் இருந்து எடுத்து வந்ததாக பழநி தல புராணம் கூறுகிறது.
பழநியில் உள்ள இந்த இரு மலைகளின் தலைவன் இடும்பன்தான். அவன் காவடி எடுத்து வந்ததை நினைவு கூறும் வகையில் இந்தப் பிரார்த்தனை வழக்கம் ஏற்பட்டதாகக் கூறுவர். காவடி எடுப்பதில் பால் காவடி, பன்னீர் காவடி, பஞ்சாமிர்த காவடி, சர்க்கரை காவடி, சந்தனக் காவடி, புஷ்பக் காவடி, சேவல் காவடி, சர்ப்பக் காவடி என பல வகை உண்டு. இவற்றில் அன்னக் காவடியும் அடக்கம். பழநி முருகனுக்கு அன்னக் காவடியும் எடுப்பார்கள். அந்த அன்னக் காவடிக்கு ஒரு சின்ன வரலாறு உண்டு அதைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
சென்னை, ராயபுரத்தில் சாமியப்ப கவிராயர் என்பவர் வாழ்ந்து வந்தார். அவரது பரம்பரையே கவி பாடுவதில் வல்லமை பெற்றது என்பதால் கவிராயர் பட்டம் அவரது குடும்ப சொத்தாக இருந்தது. அவரது தவப்புதல்வர்தான் பழநி மலை முருகனை நினைத்து நினைத்து உருகிய துரைசாமி கவிராயர். இளமையிலிருந்தே பழநி ஆண்டவரிடம் அளவில்லா அன்பு கொண்டிருந்தார். பழனி தண்டாயுதபாணியின் திருவுருவப்படத்துக்கு தினமும் தவறாமல் பக்தியுடன் மலர் மாலை சூட்டி அர்ச்சித்து வழிபாடு செய்வார்.
பழநி ஆண்டவர் மீது பல பாடல்களை இயற்றி அந்த பாமாலைகளையும் அவனுக்கு சூட்டி இன்புறுவார். நாள்தோறும் எவருக்காவது அன்னமிட்ட பிறகே தான் உண்ணும் நியதியை மேற்கொண்டார். இவ்வாறு அவர் வாழ்ந்து வரும் நாளில் அவரது வருமானம் குறைந்தது. ஒரு கட்டத்தில் கடன் தருவார் யாரும் இன்றி வருந்தினார். என்றாலும், தனது மனைவியின் திருமாங்கல்யத்தை விற்று அதனைக் கொண்டு அன்னதானத்தை விடாமல் செய்து வந்தார். அப்படி இருக்கையில்தான் முன்வினை பயன் காரணமாக அவரை நோய் வந்து வருத்தியது.
‘அப்பா பழனி ஆண்டவனே! இந்த குத்து வலி பொறுக்க முடியவில்லையே… இது முன் ஜன்ம பாவமா? இந்த ஏழை மீது கருணை காட்டக் கூடாதா? உன்னையே சதா சிந்தித்துக் கொண்டிருக்கும் எனக்கு உன் கருணை கிடையாதா? வறுமை கூட எனக்கு வேதனை இல்லை. ஆனால், இந்த குத்துவலி என்னை கொல்கிறதே! என்ன செய்வேன்’ என கண்ணீர் விட்டு கதறினார் துரைசாமி கவிராயர். நீண்ட நேரம் பழநி முருகனையே நினைத்து நினைத்து அரற்றிவிட்டு பின்பு மெதுவாக உறங்கிப்போனார்.
அப்போது ஒரு கனவு வந்தது. ஒரு அழகான இளைஞன் கந்தனை போன்று கவின்மிகு பேரொளியோடு அவர் முன் தோன்றினான். தனது கையில் இருந்த ஒரு தைலத்தை பஞ்சில் தோய்த்து அவரது உடலில் தடவினான். கவிராயர் பேச இயலாது கைகுவித்த போது, ‘அன்பரே! கவலையற்க! நாளை குணமாகிவிடும்’ என்று கூறி மறைந்தான். கவிராயர் திடுக்கிட்டு எழுந்தார். பழநி பரம்பொருளை எண்ணி கைகுவித்து ஆனந்தக் கண்ணீர் பெருக்கினார். பழநி மலை வேலன் அருளால் கவிராயரின் நோயின் கொடுமை இரண்டொரு நாளில் குறைந்தது.
பழநி மலை செவ்வேள் அவரது துன்பத்தை நீக்கி அருளினார். இந்த வகையில் துரைசாமி கவிராயர் பழநி முருகனுக்கு காவடி எடுத்து வருவதாக பிரார்த்தனை செய்து கொண்டார். என்ன வேண்டுதல் தெரியுமா? நோய் நீக்கி அருள்புரிந்த ஆறுமுகப் பெருமானுக்கு அன்னக்காவடி சமர்ப்பிப்பதுதான் சரியான நேர்த்திக்கடன் என்பது கவிராயரது எண்ணம். ரயில் வசதி கூட சரியாக இல்லாத அந்தக் காலத்தில் இத்தகைய பிரார்த்தனையை எப்படி செலுத்துவது? மிகக் கடினமாயிற்றே. எனினும், அன்னக் காவடி செலுத்துவதில் உறுதியுடன் இருந்து அதற்கு அருள முருகன் திருவருளை வேண்டி துதித்தார்.
துரைசாமி கவிராயரது இந்த எண்ணத்தை நிறைவேற்ற பழநி குமரன் திருவுளம் கொண்டான். அதையொட்டி கவிராயர் வீட்டருகில் வசித்த குயவர் ஒருவரது கனவில் தோன்றினான். ‘துரைசாமி கவிராயர் பழநிக்கு அன்னக் காவடி எடுக்க விரும்புகிறார். அவருக்கு சோறு வடிக்க பானை செய்து கொடு’ என்று உத்தரவிட்டு மறைந்தான். அதேபோல், அரிசி வியாபாரம் செய்யும் கந்தன் செட்டியார் கனவில் தோன்றி, கவிராயருக்கு அரிசி கொடுக்குமாறு கூறினான். ‘பானையும் அரிசியும் வரும். பெற்றுக்கொள்’ என்று கவிராயர் கனவிலும் அருளினான் முருகன். அவ்வாறே பானையும் அரிசியும் வந்து சேர்ந்தன.
சோறு வடித்து அதை இரு பானைகளிலும் (குடுவை) நிரப்பி அன்னக்காவடியாக கட்டினார் கவிராயர். பழநி முருகனை பிரார்த்தனை செய்துகொண்டு அன்னக் காவடியுடன் புறப்பட்டார். அவர் பழநி சென்று அடைய நாற்பத்தைந்து நாட்கள் ஆயிற்று.
‘துரைசாமி கவிராயர் அன்னக் காவடி சமர்ப்பிக்க வருகிறார். அவரை மேளதாளம் கோயில் மரியாதையுடன் நன்கு வரவேற்க ஆவன செய்க’ என்று கோயில் குருக்கள் மற்றும் அதிகாரிகள் கனவில் பழநி ஆண்டவர் கட்டளையிட்டார். அவர்களும் கவிராயரது வருகையை எதிர்பார்த்த வண்ணம் காத்திருந்தனர். பழநி மலை அடிவாரத்தை அடைந்தார் கவிராயர். முரசு முழங்கியது. நாதஸ்வரம், தவில் ஆகியன ஒலித்தன. மாலை மரியாதைகளுடன் துரைசாமி கவிராயரை வரவேற்றனர் கோயில் அதிகாரிகள். அன்னக்காவடியை சுமந்து கொண்டு படியேறி பழநி தண்டாயுதபாணியின் சன்னிதியை அடைந்தார் கவிராயர்.
‘பழநி பரமனே! கருணைக் கடலே. தயாள பிரபுவே! அன்னக்காவடி செலுத்த எளியேன் விண்ணப்பித்தபோது அதற்கு வேண்டிய அனைத்தையும் தந்து உதவிய உமது பேரருளை எப்படிப் புகழ்வது? எமது பிரார்த்தனையை நிறைவேற்றுவதில் உமக்கு இத்தனை இன்பமா? உனது கருணைக்கு என்னால் என்ன கைமாறு செய்ய இயலும்!’ என்று கூறி அன்ன கலயத்தை திறந்தார். ஆகா! என்ன அதிசயம்! ஒன்றரை மாதத்துக்கு முன்பு சமைத்துக் கட்டிய சோற்றில் இருந்து ஆவி மேலெழுந்தது. அப்போதுதான் சமைத்து அன்னம் போல் சூடாக இருந்தது. அதனைக் கண்ட அனைவரது உடலும் சிலிர்த்தது.
பழநி முருகனின் திருவிளையாடலை எண்ணி ஆனந்தக் கண்ணீர் வடித்தார் கவிராயர். முருகனின் பரிபூரண ஆசீர்வாதத்தை பெற்றவர்களால் மட்டுமே இதுவெல்லாம் சாத்தியமாகும். இப்படித்தான் அன்னைக் காவடிக்கு ஒரு வரலாறு ஏற்பட்டது.