Sri Kanchi Kamatchi amman 
ஆன்மிகம்

அபார ஞானத்தைப் பெற்றுத் தரும், ‘ஸ்ரீமூக பஞ்ச சதீ’ பாராயணம்!

ஆர்.வி.பதி

ம்பிகையைத் துதிக்க, ‘லலிதா சகஸ்ரநாமம்’ மற்றும் ‘மகிஷாசுர மர்த்தினி ஸ்லோகம்’ முதலானவை உள்ளன. இதுபோலவே காஞ்சி காமாட்சி அம்பாளைத் துதிக்க காஞ்சி காமகோடி மடத்தின் இருபதாவது பீடாதிபதியும் நான்காம் நூற்றாண்டில் வாழ்ந்தவருமான மூகர் இயற்றிய ஸ்லோக நூலே, ‘ஸ்ரீமூக பஞ்ச சதீ’ என்று அழைக்கப்படுகிறது.

‘ஆர்யா சதகம்’, ‘பாதாரவிந்த சதகம்’, ‘ஸ்துதி சதகம்’, ‘கடாக்ஷ சதகம்’, ‘மந்தஸ்மித சதகம்’ என ஐந்து பிரிவுகளில் ஒவ்வொரு பிரிவிலும் நூறு ஸ்லோகம் என மொத்தம் ஐநூறு ஸ்லோகங்களைக் கொண்ட அற்புதமான நூலே, ‘ஸ்ரீமூக பஞ்ச சதி’ என்று அழைக்கப்படுகிறது. மூகன் இயற்றிய ஐநூறு ஸ்லோகங்கள் என்பது இதன் பொருளாகும்.

மூகர் என்ற வடமொழி சொல்லுக்கு ஊமை என்பது பொருள்.  மூகர் இளம் வயது முதலே அன்னை காமாட்சி மீது அளவற்ற பக்தி கொண்டவராக விளங்கினார். எப்போதும் அம்பாளின் சன்னிதியிலே அமர்ந்திருப்பது அவருடைய வழக்கம். அம்பாளின் திருக்காட்சியைக் காண வேண்டி அம்பாள் உபாசகர் ஒருவரும் அம்பாளின் சன்னிதியில் அமர்ந்து தியானத்தில் மூழ்கியவண்ணம் இருப்பார்.

ஒரு நாள் அப்படி தியானத்தில் மூழ்கியிருந்தபோது அவருக்கு திருக்காட்சி தர திருவுளம் கொண்ட அன்னை காமாட்சி நேரில் தோன்றினாள். தியானத்தில் மூழ்கி இருந்த உபாசகர் இதை அறியவில்லை. ஆனால், மூகரோ வந்திருப்பது அம்பாள் என்பதை அறிந்து உணர்வு பெருக்கு மேலிட, பேச இயலாத காரணத்தினால் ‘பே… பே’ என்று சத்தமிட்டார். இந்த சத்தத்தால் தவம் கலைந்து கண் விழித்த அந்த உபாசகர் எதிரே நின்றிருந்த பெண்ணைப் பார்த்து அந்த பெண்தான் சத்தமிட்டுத் தனது தவத்தைக் கலைத்தாள் என்று நினைத்து பெண் உருவத்திலிருந்த அம்பாளை நோக்கி, ‘போ போ’ என்று கோபத்தோடு விரட்டினார். ஆனால், மூகரோ வந்திருப்பவள் அன்னை காமாட்சி என்பதை உணர்ந்து அவளைப் பணிந்து வணங்கினார். அன்னையும் தான் தரித்திருந்த தாம்பூலத்தை மூகருக்குத் தந்தாள். அதுவரை பேசும் திறன் இல்லாமல் இருந்த மூகர் அக்கணம் முதல் பேச்சு வரப்பெற்று கவிபாடும் ஆற்றலும் பெற்றார். அவர் அன்னையின் மீது அருளிய ஸ்லோகங்களே, ‘மூக பஞ்ச சதீ’ என்று அழைக்கப்படுகிறது. மூக பஞ்ச சதீயைப் பாராயணம் செய்து வந்தால் அபார ஞானம் கிடைக்கும் என்பது ஆன்றோர் வாக்கு.

காமாட்சி அம்பாளின் நாமத்தை உச்சரித்தாலே அவள் நம்மைக் காத்தருளுவாள்.  ‘ஆர்ய சதகம்’ அன்னை காமாட்சியின் நாம மகிமைகளைப் பற்றி எடுத்துரைக்கும் பகுதியாகும். ஆர்ய சதகத்தைப் பாராயணம் செய்து வந்தால் வாக்குவன்மை பெருகும் என்பது ஐதீகம். ஆர்ய சதகத்தில் உள்ள ‘வித்யே விதாத்ரு’ என்ற ஒரு ஸ்லோகத்தை மாணவர்கள் சொல்லி வர கல்வியும் ஞானமும் கைகூடும்.

‘பாதாரவிந்த சதகம்’ அம்பாளின் திருப்பாதங்களின் எழிலையும் பெருமைகளையும் அம்பாளை சரணடைவதன் மூலம் கிடைக்கும் பலன்களையும் எடுத்துரைக்கிறது. நவக்கிரகங்களால் ஏற்படும் பிரச்னைகளைக் களைய பாதாரவிந்த சதகத்தில் உள்ள, ‘ததாநோ பாஸ்வத்வாம்’ என்ற ஸ்லோகத்தை உச்சரித்து வந்தால் அனைத்து தோஷங்களும் அகலும்.

‘ஸ்துதி சதகம்’ ஸ்துதிக்கு உகந்த அம்பாளின் குணங்களைப் பற்றி எடுத்துரைக்கும் ஸ்லோகங்கள் உள்ள பகுதியாகும். ஸ்துதி சதகத்தில் உள்ள 74வது ஸ்லோகத்தைப் பாராயணம் செய்து வந்தால் வறுமை அகலும் என்று மகாபெரியவா கூறியுள்ளார். ‘கடாக்ஷ சதகம்’ அம்பாளின் கடாஷ வீசஷண்யத்தைப் பற்றி எடுத்துரைக்கும் ஸ்லோகங்கள் உள்ள பகுதியாகும்.  ‘மந்தஸ்மித சதகம்’ அம்பாளின் புன்னகையின் சிறப்பினை விவரிக்கிறது.  இதில், ‘இந்தானே பவ’ எனத் தொடங்கும் ஸ்லோகத்தை உச்சரித்து வந்தால் பலவிதமான நோய்களும் அகலும் என்பது ஐதீகம்.

மூக பஞ்ச சதீயை பாராயணம் செய்யுங்கள். அம்பாள் காமாட்சியின் அருளால் வாழ்வில் அனைத்து வளங்களையும் பெறுங்கள்.

திப்பு சுல்தானை ஆங்கிலேயரிடமிருந்து காத்த திண்டுக்கல் மலைக்கோட்டை பெருமை தெரியுமா?

இவள் இருட்டில் மட்டுமே வருவாள்! 

புரதம் நிறைந்த சோயா கீமா செய்யலாம் வாங்க! 

மாதச் சம்பளம் வாங்குபவர்கள் செய்யும் 6 நிதித் தவறுகள்! 

ஆரஞ்சு Vs சாத்துக்குடி: எது சிறந்தது?

SCROLL FOR NEXT