அரச மர வழிபாடு 
ஆன்மிகம்

அரச மர பிரதட்சணம் தரும் நன்மைகள்!

இந்திராணி தங்கவேல்

காலம் காலமாக அரச மரத்தை தெய்வமாக வழிபடுவது நமது மரபு. அதேபோல், அரச மரத்தை ஆணாகவும் வேம்புவை பெண்ணாகவும் போற்றி இரண்டையும் ஒன்றாக நட்டு வளர்த்து கல்யாணம் செய்து வழிபாடு செய்வோரும் உண்டு. சில இடங்களில் இதுபோல் இரண்டு மரத்தையும் கலந்து வளர்த்து வருவதைக் காணலாம். இப்படி வளர்ப்பதால் என்னென்ன நன்மைகள் என்பதை இந்தப் பதிவில் காண்போம்.

பெயர் காரணம்: ‘விருட்சங்களில் நான் அசுவத்த (அரச)  விருட்சமாக இருக்கிறேன்’ என்று பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் பகவத் கீதையில் கூறுகின்றார். ஸ்ரீமந் நாராயண மூர்த்தியின் வலது கண்ணில் இருந்து இந்த விருட்சம் பிறந்தது எனவும், சகல விருட்சங்களுக்கும் இது முதன்மையாக இருக்கும்படி அவர் அனுக்கிரகித்து அபிஷேகம் செய்து அரசு எனப் பெயரிட்டார் என்றும் திருமுட்ட புராணம் கூறுகிறது.

காற்று சொல்லும் விஞ்ஞான விளக்கம்: அரச மரத்தில் தாமிர சத்தும், மின்சாரமும் உள்ளது. ஆதலால் நோயினால் துன்பப்பட்டு சௌக்கியமடைந்து வருபவரும், சரீரமும் மனமும் குன்றிய நிலையில் இருப்போரும் காலையிலும் மாலையிலும் சுத்தமான நீரில் மூழ்கி, ஈர உடையுடன் அரச மரத்தை பிரதட்சணம் செய்து வந்தால் நாளுக்கு நாள் உடல் நலம் தேறி தெளிவடைந்து பூரண குணத்தைப் பெறலாம் என்பது அரச மரத்தின் சிறப்பு. இதைப் பெறுவதற்காகத்தான் நம் வீட்டு பெரியவர்கள் ஈர ஆடையுடன் நலிவடைந்தோரை இம்மரத்தை சுற்றிவரச் சொல்கிறார்கள்.

இதற்குக் காரணமாக சொல்லப்படுவது என்னவென்றால் இந்த விருட்சத்தின் காற்றின் மேன்மையான தன்மையே ஆகும். பொதுவாக, மின்சாரமானது ஈரமான பொருட்களில் மட்டுமே நன்கு பரவும் தன்மை உடையதாகும். ஆதலால், அரச மரத்தில் உள்ள மின்சாரமானது அரசிலையின் கூர்மையான நுனியின் வழியாக நனைந்த ஈரமான உடையுடன் வலம் வருகின்ற வியாதியஸ்தர்களில் சரீரத்தில் சிறிது சிறிதாக பரவி நாளுக்கு நாள் வலிமையைத் தந்து பூரண குணப்படுத்துகின்றது என்பதுதான் இதன் மகிமை.

வியாதி தீர: சரீரத்திலுள்ள வியாதி, விஷக்கடி, பேய் நீக்கும் தன்மை போன்றவை வேப்ப மரத்தின் காற்றுக்கே உண்டு. அரச மரத்தின் குச்சிகளின் புகையை முகர்ந்து பார்ப்பதால் சரீரத்தில் நரம்பு தளர்ச்சிகள் இருந்தால் அவை நீங்கி நரம்பு முறுக்கேறும் என்பது மருத்துவம். அதனால் மகரிஷிகளும் ஞானிகளும் நாள்தோறும் பல வகை மரக்குச்சிகளுடன் அரசங் குச்சியையும் சேர்த்து அக்னி காரியங்களை செய்து, சரீர வன்மையையும் ,மனத்தெளிவும் தீர்க்காயிலும் பெற்று நெடுங்காலம் வாழ்ந்திருந்தனர் என்பதை அறிய முடிகிறது. அதனால்தான் இப்பொழுதும் அரசங் குச்சியை யாகம் வளர்ப்பதற்குப் பயன்படுத்துகிறோம்.

அரச மரமாகப் பிறப்பவரும் புத்திரப்பேறும்: அரச மரத்தின் அடி – நடு -முடி என்னும் மூன்றிலும் முறையே பிரம்மா, விஷ்ணு, ருத்ரர் என்னும் மும்மூர்த்திகளும் இருந்து வாழ்கின்றனர். ஆதலால் இம்மரத்தை பிரதட்சணம் செய்பவர்கள் அம்மூவரையும் பிரதட்சணம் செய்து சகல நற்பெயர்களையும் பெற்று வாழ்வர்  என்று நம்புகின்றனர்.

பிரம்மச்சரிய விரதத்தை பிழைபடாமல் காத்து நல்லொழுக்கத்தில் சிறந்து விளங்கிய ஒரு ஆண்மகன் ஊழின் பயனால் உயிரிழப்பின் அவனே அரச மரமாக பிறக்கின்றானாம். இதன் காரணமாகவே இம்மரத்திற்கு இடது பக்கத்தில் நாகப்பிரதிஷ்டை செய்து வைத்து கல்யாணமும் செய்து வைத்தவர்களுக்கு மகப்பேறு உண்டாகும்  என்கின்றனர். அரசு ஆண் ஆகும். வேம்பு பெண். இவ்விரண்டையும் ஒன்றாக நட்டு வளர்த்து கல்யாணம் செய்து வழிபடுவோருக்கு அவசியம் புத்திரப்பேறு உண்டாகும் என்று ஸ்ருதி, ஸ்மிருதி புராண இதிகாசங்களில் ஆன்றோர் அருள்வாக்குக் கூறி இருக்கின்றனர்.

அசுவத்த பிரதட்சணம்: மும்மூர்த்திகளின் சொரூபமாக விளங்கும் புண்ணிய நதி தீரங்களில் உள்ள அரச மரத்திற்கு சோடசோபசார பூஜைகளும், அபிஷேக அலங்காரங்களும் செய்து வணங்கி108 பிரதட்சணம் வந்து விரதம் இருப்பதற்கு, ‘அசுவத்த பிரதட்சண விரதம்’ என்று பெயர். இவ்விரதம் அனுஷ்டிப்போர் கொடிய வியாதிகள் நீங்கப்பெற்று சுகபோக , பாக்கிய, புத்திர லாபங்களை அடைந்து வாழ்வார்கள் என்கிறது வேதம்!

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

இவர்களைத் தெரியும்; இந்தத் தகவல்கள் தெரியுமா?

SCROLL FOR NEXT