Bakthargalukkaga Ambal Irukkum Pachai Pattini Viratham
Bakthargalukkaga Ambal Irukkum Pachai Pattini Viratham https://www.madhimugam.com
ஆன்மிகம்

பக்தர்களுக்காக அம்பாள் இருக்கும் பச்சை பட்டினி விரதம்!

ஆர்.ஜெயலட்சுமி

மயபுரம் மாரியம்மன் உலக மக்களின் நன்மைக்காக பச்சை பட்டினி விரதம் இருப்பதாக ஐதீகம். மிகவும் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் ஆலயத்தில் மாசி மாதம் கடைசி ஞாயிறு அன்று நடைபெறும் பச்சை பட்டினி விரதம் மிகவும் சிறப்புக்குரியது. அன்றைய தினம் முதல் பங்குனி மாதத்தின் கடைசி ஞாயிறு வரை இந்த விரதத்தை அனுஷ்டித்து அம்மன் கடும் தவத்தில் இருப்பதாக ஐதீகம்.

இந்த விரதம் 28 நாட்கள் கொண்டது. இந்த விரத காலத்தில் அம்மனுக்கு தளிகை நெய்வேத்தியமாகப் படைக்கப்படாது. அதற்கு பதிலாக துள்ளுமாவு, திராட்சை, இளநீர், பானகம், ஆரஞ்சு பழம் போன்றவை அம்மனுக்கு நெய்வேத்தியமாக படைக்கப்படும். அம்மன் பச்சை பட்டினி விரதம் இருக்கும் நாட்களில் அம்மனை மனதில் கொண்டு அந்த ஊர் மக்களும் தங்கள் வீடுகளில் அம்மன் படத்தை வைத்து வழிபட்டு விரதம் கடைபிடிப்பது வழக்கம். அடுப்பு தீயில் தாளிக்காமல், காலில் செருப்பு அணியாமல் இளநீரும் நீர் மோரும் அருந்தி மஞ்சள் ஆடை உடுத்தி மகமாயியின் அருள் வேண்டி இருக்கும் விரதம் இது.

அம்மனின் பச்சை பட்டினி விரதம் இனிதே நடைபெற வேண்டும் என்பதற்காக கருவறையில் உள்ள அம்மனுக்கு பூக்கள் அபிஷேகம் செய்யப்படும். இதனை பூச்சொரிதல் என்பார்கள். இந்த ஆண்டு பூச்சொரிதல் விழா மார்ச் 10, 17, 24, 31 ஆகிய நாட்களில் நடைபெற உள்ளது.

சக்தி தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது சமயபுரம் மாரியம்மன் கோயில். ஸ்ரீரங்கம் கோயிலின் மூலவரைப் போன்று இக்கோயிலிலும் சுதையிலான சுயம்பு வடிவமாக 27 நட்சத்திரங்களின் ஆதிக்கங்களையும் தன்னுள் அடக்கி 27 எந்திரங்களாக திருமேனி பிரதிஷ்டை செய்து இத்தலத்தில் மகாமாரியம்மன் அருள் பாலிப்பது தனி சிறப்பாகும். சுயம்பு திருமேனியாக, நவகிரக ஆதிக்கத்தோடு அருளும் அம்மனை தரிசனம் செய்வதன் மூலம் பக்தர்களின் நவகிரக தோஷம் அகலும் என்பது ஐதீகம். இந்தத் தலத்தின் உத்ஸவர் திருமேனியில் ஆயிரம் கண்களும், அஷ்ட புஜங்களுடனும் விளங்குவது வேறு எந்த மாரியம்மன் கோயிலிலும் காணக் கிடையாது அரிய காட்சியாகும்.

தட்சனின் யாகத்துக்குச் சென்ற தாட்சாயணி வேள்வி குண்டத்தில் தனது உயிரை மாய்த்தபோது அந்த உடலை தூக்கி வைத்துக்கொண்டு சிவன் ருத்ர தாண்டவம் ஆடியதில் அம்மனின் திருக்கண் இப்பகுதியில் விழுந்ததால் சமயபுரத்திற்கு கண்ணனூர் என்ற பெயரும் உண்டு.

மும்மூர்த்திகளின் வேண்டுகோளை ஏற்று மாயாசுரணையும் அவனுடைய சகோதரர்களையும் வதம் செய்து தலைகளை தன் உடலில் ஒட்டியாணமாக அணிந்து மக்களை காப்பாற்றிய அம்பிகையின் சிறப்பு மிக்க கோயில் சமயபுரம் மாரியம்மன் கோயில் என்பது சிறப்பு. அசுரர்களை வதம் செய்த பாவத்தைப் போக்கவும் உலக நன்மைக்காகவும் அம்பிகை இத்தலத்தில் தவம் செய்து வருகிறார் என்பது பக்தர்களின் நம்பிக்கை. தன்னை வழிபடும் பக்தர்களின் நலனுக்காக பச்சை பட்டினி விரதம் இருக்கும் சமயபுர மாரியம்மனை வணங்கி அவளின் பேரருளைப் பெறுவோம்.

RCB Vs CSK: பெங்களூரு அணியே வெற்றிபெறும் – பிரையன் லாராவின் கணிப்பு!

உயர் இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்கும் 15 உணவுகள்!

சிறப்பான நாள் அமைவதற்கு காலையில் பின்பற்ற வேண்டிய 5 வழிமுறைகள்!

“கடன அடைக்கதா இந்த படம்” – ‘இங்கு நான் தான் கிங்கு’ படம் பற்றி சந்தானம்!

‘லுக்கிசம்’ - கொரியன் வெப்டூன் குழந்தைகளுக்குச் சொல்லும் மெசேஜ் என்ன?

SCROLL FOR NEXT