ஆன்மிகம்

நெற்றியில் விபூதி, குங்குமம் அணிவதன் நன்மைகளும் காரணங்களும்!

எஸ்.விஜயலட்சுமி

ன்றைய இளம் தலைமுறையினர் சிலர் நெற்றியில் திலகம், விபூதி, குங்குமம் வைப்பதை மூடநம்பிக்கையாகக் கருதுகிறார்கள். இளம்பெண்கள் கண்ணுக்கே தெரியாமல் மிகச்சிறிய புள்ளியாக பொட்டு வைத்துக் கொள்கின்றனர். ஆனால், இவற்றை நெற்றியில் அணிவதன் பின்னணியில் நிறைய ஆன்மிக மற்றும் அறிவியல் நன்மைகளும், காரணங்களும் உள்ளன.

ஆன்மிகக் காரணங்களும், நன்மைகளும்: இறைவனை பூஜித்ததன் அடையாளமாக நெற்றியில் குங்குமம், சந்தனம், விபூதி இட்டுக்கொள்வதை ஒரு புனிதமான செயல் என்கிறது ஆன்மிகம். புருவ மத்தியை மர்ம ஸ்தானம் அல்லது ஆக்ஞா சக்ரா என்று கூறுகிறார்கள். அங்கே குங்குமம், திலகம், விபூதி இடுவதால் பிறரால் நம்மை வசியம் செய்ய முடியாது. தீய எண்ணங்கள் நம்மை அணுகாது. அதோடு, முகத்திற்கு ஒரு அழகு தருகிறது. நெற்றியை குளுமையாக வைக்கிறது. மன அழுத்தத்தையும் மனச்சோர்வையும் நீக்குகிறது. உடலுக்கு நல்ல ஆற்றலையும் ஆரோக்கியத்தையும் தந்து, மனதில் உள்ள கெட்ட எதிர்மறை ஆற்றலையும் நீக்குகிறது. மேலும், நெற்றித் திலகம் என்பது அதிர்ஷ்டத்தையும் வளமையையும் கொண்டு வரும் என்கிறது ஆன்மிகம்.

அறிவியல் காரணங்களும், நன்மைகளும்: நெற்றியின் புருவ மத்தியில், மூளையின் பின்புறமாக பீனியல் என்னும் சுரப்பி அமைந்துள்ளது. இந்த சுரப்பி நமது உடல் செயல்பாட்டில் பெரும் பங்கு வகிக்கிறது. இந்த ஹார்மோன்தான் நல்ல உறக்கத்திற்கு வித்திடுகிறது. புருவ மத்தியில் நாம் திலகம் குங்குமம் அணிவதால் இந்த சுரப்பி தூண்டப்படுகிறது என்கிறது அறிவியல்.

திருநீறு, குங்குமத்தை நெற்றியில் எவ்வாறு இட வேண்டும்?: கோயில்களில் தரப்படும் குங்குமத்தை வலது உள்ளங்கையை நீட்டி பெற்றுக்கொண்டு, வலதுகை மோதிர விரலால் தொட்டு நெற்றியில் இட்டுக்கொள்ள வேண்டும். மற்ற விரல்களைப் பயன்படுத்தக் கூடாது.

விபூதியை நெற்றியில் எப்படி எடுத்துப் பூச வேண்டும் என்று சில சம்பிரதாயங்கள் உள்ளன. விபூதி அணிவதற்கு ஆள்காட்டி விரல், சுண்டு விரல் மற்றும் நடுவிரலை பயன்படுத்தக் கூடாது. ஆள்காட்டி விரலால் விபூதி பூசுவதால், பொருள் இழப்பும், நடு விரலால் விபூதி இட்டால் நிம்மதியின்மையும், சுண்டு விரலால் அணிவதால் கிரக தோஷங்களும் ஏற்படலாம் என்கிறது சாஸ்திரம்.

மோதிர விரலே ஏற்றது: விபூதியை அணிந்து கொள்வதற்கு மோதிர விரலே சரியானது. மோதிர விரல் மற்றும் கட்டை விரல் இரண்டையும் சேர்த்து விபூதியை எடுத்து, மோதிர விரலால் விபூதியை நெற்றியில் அணிந்து கொள்பவர்களுக்கு எண்ணிய காரியம் நிறைவேறும், முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்வார்கள் என்கிறது சாஸ்திரம். அதேபோல், விபூதியை கொடுப்பவர் கீழாகவும், வாங்குபவர் மேலாகவும் நின்று வாங்கக்கூடாது. திண்ணை, ஆசனம், பலகை, குதிரை, சிவிகை இவற்றின் மீது அமர்ந்து விபூதி வாங்கக்கூடாது. ஆலயங்களில் வாங்கிய திருநீற்றை தூண்களிலும் சிற்பங்களிலும் போடுவது கூடாது. கீழே சிந்தக் கூடாது. உரிய கிண்ணங்களில் போடுவதே முறை.

ஜப்பான் நாட்டுக் கதை - மனம் திருந்திய மன்னர்

இந்த மாதம் மீன்கள் உண்பதை தவிர்க்கவும்... எந்த மாதம்? ஏன்?

'என்னால் முடியும்' தம்பி! உன்னால்?

90-களில் இந்திய சினிமாவில் ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்கிய நடிகை! யார் யாருக்கு எத்தனை கோடி?

மஞ்சமாதா என்கிற மாளிகைபுரத்து அம்மன் வரலாறு தெரியுமா?

SCROLL FOR NEXT