Did you know that there are nine types of temples? https://www.hindutamil.in
ஆன்மிகம்

கோயில்களில் ஒன்பது வகை உண்டு என்பது தெரியுமா?

ஆர்.ஜெயலட்சுமி

ழாம் நூற்றாண்டைச் சேர்ந்த சமயக்குரவர்களுள் ஒருவரான திருநாவுக்கரசர் தமது திருப்பாடல் ஒன்றில் கோயில்களை ஒன்பது வகையாகப் பிரித்து வகைப்படுத்தி உள்ளனர். அவை குறித்து இந்தப் பதிவில் பார்ப்போம்.

பெருங்கோயில்: இக்கோயிலில் விண்ணளாவிய விமானங்களும், விரிவான மண்டபங்களும், பெரிய திருச்சுற்றுகளும், திருமாளிகை பத்திகளும், மாடப் புரைகளையும் கொண்டு அனைத்து உறுப்புகளுடன் விளங்குகின்ற திருவாரூர், மதுரை, திருவானைக்கா, திருவண்ணாமலை முதலியவை பெருங்கோயில்கள் ஆகும்.

கரக்கோயில்: பெரிய மரங்களின் நிழலில் புல் கீற்று அல்லது ஓடு வைத்து அமைக்கப்படுவது இக்கோயில். சாலை, அர்த்தசாலை, கூடம் என இது மூவகையாக அமைக்கப்படும். தில்லை சிற்றம்பலம் இவ்வகையாகும். இவ்வகையான கோயில்கள் இன்றளவும் கேரளத்தில் மிகுதியாகக் காணப்படுகின்றன. தேர்ச்சக்கரம் போல் அமைந்த கோயில் என்றும் சிலர் இதைக் கூறுவர். கடம்பூர் கோயில் கரக்கோயில் என்று போற்றப்படுகிறது.

ஞாழற் கோயில்: பல சின்னச் சின்ன மரங்கள் சூழ்ந்த ஒரு கூடாரம் போன்ற இடத்தில் மரங்களின் நிழலில் அமைக்கப்படும் மேடைக் கோயில் இது. பெரும்பாலும் வேலி சூழ்ந்த காரணத்தில் அமைக்கப்படும் இவ்வகையான கோயில்களே பின்னாளில் நூறுகால் ஆயிரங்கால் மண்டபங்களுக்கு அடிப்படையாயிற்று எனலாம். முற்காலத்தில் இவ்வகை கோயில்களுக்கு மேற்கூரை இல்லை.

கொகுடி கோயில்: கொகுடி என்பது ஒரு வகை முல்லைச் செடி. நெருங்கி அடர்ந்து வளர்ந்த முல்லைக்கொடி பந்தர்ப்பரப்பின் இடையில் அமைக்கப்பட்ட கோயில் திருக்கருப்பறியில் என்னும் தளத்தின் கோயில் எனப் பெயர் பெற்றது.

இளங்கோயில்: இதை சில அறிஞர்கள் பாலாலயம் எனக் கூறுகின்றனர். ஒருசிலர் இளங்கோயில் என்பது திருவுண்ணாழி எனப்படும் கர்ப்பகிரகம் மட்டுமே அமைந்த கோயில் என்பார். மீயச்சூர் கோயில் இளங்கோயில் எனப் பெயர் பெற்றது.

மணிக்கோயில்: இது அழகிய வண்ணம் தீட்டிய சிற்பங்களுடன் கூடிய அழகிய சுதை வேலைப்பாடமைந்த கோயிலாகும். திருவதிகை கோயில் இதற்கு நல்லதோர் எடுத்துக்காட்டு. பெரிய கோயில்களில் உருத்திராட்சை போன்ற மணிகளால் அமைக்கப்படும் சிறு சன்னிதிகளே மணிக்கோயில் எனவும் சிலர் கூறுவது உண்டு. இதை திருமுறைக்கோயில் எனவும் அழைக்கலாம்.

ஆலக்கோயில்: நான்கு புறமும் நீர் சூழ்ந்துள்ள இடத்தில் அமையும் கோயில். தஞ்சை வல்லம் திருப்புகலூர் கோயில், ஆல கோயில் வகையைச் சேர்ந்தது. ஆலம் எனும் சொல்லுக்கு நீர் சூழ்ந்த இடம் என்று பொருள். ஒருசிலர் ஆல மரத்தைச் சார்ந்து அமைந்த கோயில் என்பார்.

மாடக்கோயில்: யானைகள் ஏற இயலாதவாறு படிகள் பல கொண்ட உயரமான இடத்தில் கருவறை அமைந்த கோயில்கள். கோச்செங்கணான் எனும் சோழப் பேரரசன் இவ்வாறான பல கோயில்களை கட்டுவித்தான் என்பது வரலாறு.

தூங்கானை மாடக்கோயில்: தூங்குகின்ற யானையின் பின்புறம் போன்ற அமைப்பில் கட்டப்பட்ட கோயில்கள். இதை கஜபிருஷ்டம் என்பர். திருப்பெண்ணாடகம் கோயில் தூங்கானை மாடக்கோயில் வகையைச் சேர்ந்தது என தேவாரம் குறிப்பிடுகிறது. திருவீழிமிழலைக் கோயில் விண்ணிழி கோயில் என்றும் குறிப்பு உள்ளது. மேற்கண்ட ஒன்பது வகை கோயில்கள் உள்ளதாக திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.

உளவியல் விஞ்ஞானிகளுக்கு ஆன்மிகத்தின் அதிசயத்தை உணர்த்திய ஸ்ரீ சத்ய சாயி பாபா!

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

SCROLL FOR NEXT