Do you know about the special features of Mudevi? 
ஆன்மிகம்

மூதேவியின் சிறப்புகள் பற்றி தெரியுமா?

ஆர்.வி.பதி

பாற்கடலைக் கடைந்தபோது முதலில் தோன்றியவள் ஜேஷ்டா தேவி. தேவர்களும் அசுரர்களும் பாற்கடலை அமிர்தம் வேண்டிக் கடைந்தபோது மந்தாரமரம், பாரிஜாதம், கற்பக விருட்சம், காமதேனு, லட்சுமி தேவி, சந்திரன், அமிர்தம், ஐராவதம், சங்க நிதி, பத்ம நிதி, தன்வந்திரி இவர்களுக்கு முன்னால் தோன்றியவள் ஜேஷ்டா தேவி என்பது ஐதீகம். இவள் கையில் துடைப்பத்தை ஏந்தி காட்சி தருவாள். இவளுக்குப் பின்னரே லட்சுமி தேவி தோன்றினாள்.

லட்சுமிக்கு முன்பு தோன்றியவள் என்பதால் மூத்த தேவி என்றும் மூத்தாள் என்றும் குறிப்பிடப்படுகிறாள். இப்பெயரே பிற்காலத்தில் மருவி, ‘மூதேவி’ என்றாயிற்று. ஜேஷ்டா தேவி என்பது வடமொழிச் சொல். ஜேஷ்டா என்றால் முதல் என்று பொருள். மேலும், பழையோள், காக்கைக் கொடியோள் என்றும் இவளை அழைக்கின்றனர். காகத்தைக் கொடியாகவும், கழுதையை வாகனமாகவும், துடைப்பத்தை ஆயுதமாகவும் கொண்டவள்.

அரையப்பாக்கம் ஜேஷ்டா தேவி

செல்வத்திற்கு அதிபதியான மகாலட்சுமியின் மூத்த சகோதரி ஜேஷ்டா தேவி. ‘தவ்வை’ என்றால் தமக்கை என்று பொருள். இதனால் இவள், ‘தவ்வை’ என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறாள். பெருத்த உடலுடன் மகன் மாந்தன், மகள் மாந்தி இருவருடன் அமர்ந்து காட்சி தருவாள். மகன் மாந்தனின் முகம் ரிஷப வடிவத்தில் அமைந்திருக்கும்.

பல்லவ மன்னர்களின் காலத்தில் சிறப்பாக இருந்த ஜேஷ்டா தேவி வழிபாடு பிற்கால சோழ மன்னர்கள் காலத்தில் குறையத் தொடங்கியது. முற்கால பாண்டிய மன்னர்களின் காலத்திலும் தவ்வை வழிபாடு வழக்கத்தில் இருந்துள்ளது. பல்லவ மன்னர்கள் செல்வச் செழிப்பிற்காக ஜேஷ்டா தேவி எனும் தவ்வையை வணங்கும் வழக்கத்தை வைத்திருந்தனர். சோழர்களின் காலத்தில் படையெடுப்பிற்குச் செல்லும் முன்னர் ஆயுதங்களை ஜேஷ்டா தேவியின் முன்பு வைத்து வணங்கிச் செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார்கள்.

ஆத்தூர் ஜேஷ்டா தேவி

தொண்டை மண்டலத்தில் அமைந்துள்ள பல்லவர் மற்றும் சோழர்களின் கால சிவன் தலங்களில் ஜேஷ்டா தேவியின் புடைப்புச் சிற்பங்கள் காணப்படுகின்றன. செங்கற்பட்டு மாவட்டத்தில் அமைந்த திருக்கழுக்குன்றத்திற்கும் மதுராந்தகத்திற்கும் இடையில் அமைந்த அரையப்பாக்கம் என்ற கிராமத்தில் உள்ள ஸ்ரீஅருணாதீஸ்வரர் கோயிலில் வடமேற்கு திசையில் ஜேஷ்டா தேவிக்கு ஒரு சன்னிதி அமைந்துள்ளது. புடைப்புச் சிற்ப வகையைச் சேர்ந்த இந்த சிற்பத்தின் இரு புறங்களிலும் சேடிப்பெண்கள் நின்ற கோலத்தில் காணப்படுகின்றனர். ஏர்க்கலப்பை ஒருபுறமும் கழுகுக் கொடி மற்றொரு புறமும் அமையப்பெற்றுள்ளன.

செங்கற்பட்டு மாவட்டத்தில் அமைந்துள்ள ஆனூர் என்ற சிற்றூரில் அமைந்துள்ள சிவன் கோயிலில் ஜேஷ்டா தேவியின் புடைப்புச் சிற்பம் காணப்படுகிறது. மேலும், செங்கற்பட்டிற்கு அருகில் ஆத்தூரில் அமைந்துள்ளது ஸ்ரீ தர்மசம்வர்தினி அம்பாள் சமேத ஸ்ரீ முக்தீஸ்வரர் ஆலயம். இக்கோயிலில் அருள்பாலிக்கும் ஜேஷ்டா தேவி விவசாயத்தின் காவல் தெய்வமாகவும், வளமைக்கு அதிபதியாகவும் திகழ்கிறாள். தன்னை வணங்குவோரை இவள் விபத்திலிருந்து காப்பாள் என்பது ஐதீகம்.

பத்தே நிமிடத்தில் சுடச்சுட வெஜ் கட்லெட்டும், சோயா கட்லெட்டும் செய்வோமா?

குழந்தைகளிடம் அடிக்கடி கேள்வி கேட்கும் பெற்றோரா நீங்க? அப்போ இதை நோட் பண்ணிக்கோங்க!

குறுநாவல்: 'அம்புஷ்' அத்தியாயம் - 5

நம் கைகளையும் கொஞ்சம் கவனிப்போமா?

சுவாமி ஐயப்பன் வேட்டையனாக காட்சித்தரும் இடம் எது தெரியுமா?

SCROLL FOR NEXT