திருச்செந்தூர் முருகன் கோயிலில் பன்னீர் இலைகளில்தான் விபூதி பிரசாதம் தரப்படுகின்றது. பன்னீர் பூக்கள் ஆண்டு முழுவதும் பூக்கும். மாலையில் மலர்ந்து அடுத்த நாள் காலையில் உதிர்ந்து விடும். இந்த பன்னீர் மரம் சிவபெருமான் மற்றும் மகாவிஷ்ணுவுக்குரிய தெய்வீகமான மரமாகவும் விளங்குகிறது.
திருச்சோற்றுத்துறை, கீழை திருக்காட்டுப்பள்ளி, சீர்காழி, ஆரண்யேஸ்வரர் முதலிய கோயில்களில் பன்னீர் மரம் தல விருட்சமாக விளங்குகிறது. பன்னீர் மலர்கள் உள்ள இடத்தில் எதிர்மறை எண்ணங்கள் விலகி விடும். பன்னீர் புஷ்பங்கள் உடலுக்கும் மனதுக்கும் நேர்மறை சக்தியைக் கொடுக்கும்.
ஆஸ்துமா நோயை போக்க இதிலிருந்து மருந்து தயாரிக்கிறார்கள். இந்தப் பூக்களின் சாறுகளில் இருந்து தைலம் தயாரிக்கப்படுகிறது. இது மூட்டு எலும்புகள், முதுகு வலிகள் போன்ற அனைத்து வலிகளுக்கும் சிறந்த நிவாரணியாக உள்ளது.
இந்தப் பூவிலிருந்து தயாரிக்கப்படும் எண்ணெய் முகச்சுருக்கங்கள், கருமை நிறம், தழும்புகள் போன்ற சருமப் பிரச்னைகள் தீரவும் பயன்படுத்தப்படுகிறது.
காய்ந்த பன்னீர் மலர்களை சாம்பிராணி புகை போட்டு முகர, சுவாச பிரச்னை வராது. பன்னீர் புஷ்பங்களின் நறுமணம் மிகவும் சுகந்தமாக இருக்கும். தலைக்கு தேய்க்கும் எண்ணெயுடன் வாசனைக்காக இந்த பன்னீர் பூக்களை போட்டு வைத்துப் பயன்படுத்துகிறார்கள்.
தலைமுடிக்குப் பயன்படுத்தும் கருப்பு நிற சாயமும் இந்த இலைகளில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இதன் பழங்கள் கொத்துக்கொத்தாக காய்க்கும். பழங்களுக்கு காம்புகள் கிடையாது. உருண்டையான கோலி குண்டுகளைப் போல இருக்கும். ஒவ்வொரு பழத்திலும் நான்கு முதல் ஆறு விதைகள் இருக்கும். பழங்கள் மிகவும் மிருதுவாக இருக்கும்.
மரியானா என்னும் பெயருடைய பழ வவ்வால்கள் இந்தப் பழங்களை விரும்பி சாப்பிடும். இதன் விதைகள் பல்வேறு இடங்களிலும் பரவுவதற்கு முக்கியமான காரணமாக இருப்பவை இந்த வவ்வால்கள்தான். இவை பழங்களை சாப்பிட்டு விட்டு விதைகளை தங்கள் சாணத்தின் மூலம் பல பகுதிகளிலும் பரப்புகின்றன. இதனால் புதிய மரக்கன்றுகள் உருவாகின்றன.
திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு உரிய புனிதமான விருட்சம் இந்த பன்னீர் மரம். இந்த மரத்தின் அழகான வெண்மை நிற பூக்கள் அர்ச்சனைக்கு பயன்படுகின்றன.