நம் வீடுகளில் பல்லிகள் இருப்பது நமக்கு நன்மையையே தருகிறது என்பதே உண்மை. வீட்டில் உள்ள பூச்சிகளை சாப்பிட்டு வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்கிறது. அதுமட்டுமில்லாமல் நமக்கு வரப்போகும் பிரச்னைகளை பல்லிகள் மூலம் நாம் முன்கூட்டியே கணித்துவிட முடியும் என்று பஞ்சாங்கம் சொல்கிறது.
பல்லி சத்தமிடும் திசைக்கு கூட என்ன அர்த்தம் என்பது பஞ்சாங்க குறிப்புகளில் உள்ளது. நம்முடைய வீட்டின் தெற்கு பகுதியிலிருந்து பல்லி சத்தமிட்டால் ஏதோ எதிர்பாராத அதிர்ஷ்டம் வரப் போகிறது. நம் வீட்டில் சுபநிகழ்ச்சிகள் நடக்கப்போகிறது என்று அர்த்தம். நம் வீட்டின் தென்மேற்கு திசையிலிருந்து பல்லி சத்தமிட்டால் நம் உறவினர்களால் ஏதோ எதிர்பாராத நன்மைகள் வரப்போவதாக அர்த்தம். நம் வீட்டின் வடக்கு திசையில் பல்லிகள் சத்தம் எழுப்பினால், சுபநிகழ்ச்சிகள் நடக்கப் போகிறது என்று அர்த்தம். இதெல்லாம் பல்லி சத்தம் எழுப்புவதால் வரக்கூடிய நல்ல பலன்களாகும்.
இனி, பல்லி சத்தம் எழுப்புவதால் ஏற்படும் தீய பலன்கள் என்னவென்று பார்த்தால், நம் வீட்டில் தென்கிழக்கு பக்கத்திலிருந்து பல்லி அதிக சத்தம் எழுப்பினால் உறவினர்களால் கலகம் ஏற்படப் போகிறது என்று அர்த்தம். அல்லது ஏதாவது துக்க செய்திகள் வரலாம். வீட்டின் கிழக்கு பக்கத்திலிருந்து பல்லி சத்தமிட்டால் அந்த வீட்டில் உள்ள குடும்ப தலைவருக்கோ அல்லது தலைவிக்கோ இனம்புரியாத பயம் மனதில் வரப்போகிறது என்று பொருள். அதேபோல, தெற்கு மற்றும் வடக்கு திசையிலிருந்து தொடர்ந்து சத்தம் எழுப்புவது, இரண்டு பல்லிகளும் இந்த திசையிலிருந்து தொடர்ந்து சத்தம் எழுப்பி கொண்டேயிருக்கிறது என்றால், தேவையில்லாத பண விரயம், தொழில் நஷ்டம், உடல் அசௌகர்யம், குறிப்பாக ஆண்களுக்கு வருவதற்கு வாய்ப்புகள் அதிகம். இந்த பல்லி சொல்லும் பலன்கள் எத்தனை நாட்களுக்குள் நடக்கும் என்றால், கண்டிப்பாக 10 நாட்களுக்குள் நடக்கும் என்று பஞ்சாங்கத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.
சிலருக்கு பல்லி வீட்டில் இருப்பது பிடிக்காது. அலர்ஜி என்று கூட சொல்லலாம். ஆனால், பல்லி ஒரு வீட்டில் இருந்தால்தான் அந்த வீடு வாழக்கூடிய வீடாக கருதப்படும் என்று நம் முன்னோர்கள் சொல்வார்கள். பல்லி ஆண்களுக்கு வலதுப்பக்கத்திலும், பெண்களுக்கு இடதுப்பக்கத்திலும் விழுகிறது என்றால் ஏதோ அதிர்ஷ்டம் வரப் போகிறது என்று அர்த்தம். பல்லி நம் உடலில் விழக்கூடிய பாகத்திற்கு உண்டான பலன்களை பஞ்சாங்கத்தில் பார்த்து அதன் நன்மை, தீமைகளை தெரிந்து கொள்ளலாம்.
வீட்டில் ஏதேனும் நல்ல விஷயமோ அல்லது தீய விஷயமோ பேசும்போது பல்லி ஓசை எழுப்பும். அப்படி ஓசை எழுப்பினால் அந்த விஷயம் அப்படியே நடக்கும் என்று கூறுவார்கள். அதனால்தான் வீட்டில் எப்போதும் நல்ல விஷயங்களைப் பற்றியே பேச வேண்டும் என்று முன்னோர்கள் கூறியுள்ளார்கள். ஏனெனில், ‘ததாஸ்து’ என்று சொல்லப்படுவதற்கு இணையாக பல்லியின் சத்தத்தை குறிப்பிடுகிறார்கள்.