புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமை இன்று. புரட்டாசி மாதம் பெருமாளின் அனுகிரகம் நிறைந்த மாதம். இந்த மாதத்தில் வரும் சனிக்கிழமைகள் பெருமாள் வழிபாடு மற்றும் விரதத்திற்கு உகந்தவை. புரட்டாசி மாதம் வரும் சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு விரதம் இருந்து வழிபட்டால் மிகவும் சிறப்பான வரங்களைத் தந்து வருடம் முழுவதும் நமது துன்பங்களை நீக்கி ஆனந்தம் தருவார் பெருமாள். அதிலும், ஏழரை சனியால் பீடிக்கப்பட்டவர்கள் விரதம் இருந்தால் சனியின் தொல்லை நிச்சயம் நீங்கும்.
ஒரு சமயம் கலியுகத்தில் சனி பகவானிடம், நாரத மகரிஷி “பூலோகத்தில் நீங்கள் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம். உங்கள் சக்தியின் மூலம் யாரை வேண்டுமானால் துன்பப்படுத்தலாம். ஆனால், திருமலை பக்கம் மட்டும் சென்று விடாதீர்கள்” என்று அவரைத் தூண்டி விடுவது போல கூறினார். அதைக் கேட்ட சனி பகவான் அலட்சியமாக, ‘என்னை யார் என்ன செய்ய முடியும்?’ என்று திருமலையின் மேல் தனது காலை வைத்தார்.
கால் வைத்த அடுத்த நொடி சனி பகவான் பயங்கரமாக தூக்கி வீசப்பட்டார். திருமலையில் யார் இருக்கிறார் எனத் தெரிந்தும் மற்றவரை துன்பப்படுத்தி இன்பம் காணும் சனி பகவானே துன்பப்பட்டு நடுநடுங்கி, தன்னையும் படைத்து வழிநடத்தும் மகாவிஷ்ணுவே இங்கு திருவேங்கடவனாக இருப்பதைக் கண்டு அவர் பாதம் பணிந்து மன்னிப்பு கேட்டார்.
கோபம் தணிந்த பெருமாள், சனி பகவானிடம் “என்னையே நினைத்து வாழும் என்னுடைய பக்தர்களுக்கு நீ எந்தத் துன்பமும் கொடுக்கக் கூடாது என்ற நிபந்தனையுடன் அவருக்கு மன்னிப்பு வழங்கினார். சனி பகவானும் பணிவுடன், “உங்களின் உண்மையான பக்தர்களை நான் என்றும் துன்பப்படுத்த மாட்டேன்” என்று கூறினார்.
பிறகு சனி பகவான் பெருமாளிடம், “மகாபிரபு! எனக்கு ஒரு வரம் தர வேண்டும். நான் பிறந்தது புரட்டாசி சனிக்கிழமை. ஆகையால், புரட்டாசி சனிக்கிழமைகளில் உங்களை வழிபடுபவர்களுக்கு வேண்டும் வரம் தந்து அருள்பாலிக்க வேண்டும்” என்று வேண்டிக் கேட்டுக்கொண்டார்.
பெருமாளும் சனி பகவான் கேட்டுக்கொண்டபடி வரம் தந்து, சனிக்கிழமைகளை தமக்கு உகந்த நாட்களாக ஏற்றுக்கொண்டார். அன்றிலிருந்து சனிக்கிழமைகள் பெருமாளுக்கு உகந்த வழிபாட்டு நாட்களாக விளங்கி வருகிறது. சனிக்கிழமைகளில் பெருமாள் வழிபாட்டை மேற்கொண்டு சனியின் பிடியில் இருப்பவர்கள் சந்தோஷத்தை அடைவோம்.