ஜெயின் சமூகத்தில் துறவிகள் மற்றும் கன்னியாஸ்திரிகள் என இரு பிரிவினர் உள்ளனர். அது மட்டுமின்றி, ஜெயின் துறவிகளிலேயே திகம்பர மற்றும் ஸ்வேதாம்பரா என்று இரண்டு பிரிவுகள் உள்ளது. இந்த இரண்டு பிரிவுகளின் முக்கிய கொள்கைகளும் ஒரே மாதிரியாக இருந்தாலும் துறவற நடைமுறைகளில் வேறுபடுகின்றன.
திகம்பர ஆண் துறவிகளுக்கு, ‘முனி’ என்றும், பெண் துறவிகளுக்கு ‘ஆரிகா’ என்றும் பெயர். திகம்பர துறவிகள், ‘நிர்கிரந்தா’ என்றும் அழைக்கப்படுகிறார்கள். ஸ்வேதாம்பரா ஆண் துறவிகளுக்கு, ‘முனி’ என்றும், பெண் துறவிகளுக்கு, ‘சாத்விஸ்’ என்றும் பெயர்.
இரு பிரிவைச் சேர்ந்த சாதுக்களும் தீட்சை எடுத்த பிறகு கட்டுப்பாடான வாழ்க்கையை வாழ்கிறார்கள். இவர்கள் எந்தவிதமான ஆடம்பரப் பொருட்களையோ, வசதியான வளங்களையோ பயன்படுத்துவதில்லை.
திகம்பர துறவிகள் ஆடை அணிவதில்லை. கடும் பனிக் குளிரில் கூட எந்த சூழ்நிலையிலும் இவர்கள் ஆடை அணிவதில்லை. திகம்பர கன்னியாஸ்திரிகள் வெள்ளைப் புடைவைகளை அணிகிறார்கள். திகம்பர துறவிகள் தங்களுடன் மூன்று பொருட்களை மட்டுமே எடுத்துச் செல்கிறார்கள். மோர் - பிச்சி (மயிலிறகு துடைப்பம்), கமண்டலு (தண்ணீர் பானை) மற்றும் சாஸ்திரங்கள் (வேத புத்தகங்கள்).
ஸ்வேதாம்பர துறவிகள் வெண்மை நிற மெல்லிய பருத்தித் துணியை ஆடையாக அணிகிறார்கள். இவர்கள் மெல்லியதான ஒரு போர்வையை வைத்திருக்கிறார்கள். அதனை தூங்கும்போது மட்டுமே பயன்படுத்துவார்கள். இந்தத் துறவிகள் மற்றும் சன்னியாசிகள் அனைவரும் எல்லா காலத்திலும் தரையில் பாய் கொண்டு உறங்குகின்றனர். இந்த சாதுக்களுக்கு தூக்கம் மிகவும் குறைவு. ஸ்வேதாம்பராக்கள் தங்களுடன் வேதங்களையும், ரஜோஹரன் (கம்பளி விளக்குமாறு), தண்டேசன் (நீண்ட குச்சி) மற்றும் உணவுக்காக ஒரு கிண்ணத்தையும் வைத்திருக்கிறார்கள்.
ஜெயின் துறவிகள் மற்றும் கன்னியாஸ்திரிகள் தீட்சை எடுத்த பிறகு குளிக்கவே மாட்டார்கள். குளித்தால் நுண்ணுயிர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்பது அவர்களின் நம்பிக்கை. இவர்கள் எப்போதும் தங்கள் வாயில் ஒரு துணியை வைத்திருப்பார்கள். இதனால் எந்த நுண்ணுயிர்களும் வாய் வழியாக உடலை அடையாது என நம்புகின்றனர்.
சாதாரணமாக, மக்கள் தண்ணீரில் குளிப்பது வழக்கம். ஆனால், ஜெயின் துறவிகள் மற்றும் கன்னியாஸ்திரிகள் உள் குளியல் எடுக்கிறார்கள். அதாவது தியானத்தில் அமர்ந்து உள்குளியல் எடுப்பதன் மூலம் மனதையும், எண்ணங்களையும் தூய்மைப்படுத்துகிறார்கள். அவர்களைப் பொறுத்தவரை குளிப்பது என்பது உணர்ச்சிகளை தூய்மைப்படுத்துவதாகும். இதை அவர்கள் வாழ்நாள் முழுவதும் பின்பற்றுகிறார்கள்.
சில நாட்களுக்கு ஒரு முறை ஈரத்துணியைக் கொண்டு உடலை துடைத்துக் கொள்கின்றனர். இதன் மூலம் உடல் புத்துணர்ச்சியுடனும் தூய்மையுடனும் இருக்கும் என்கின்றனர். வெளிநாடுகளில் வாழும் சமணத் துறவிகள் கூட இதேபோன்ற கட்டுப்பாடான வாழ்க்கையைத்தான் வாழ்கின்றனர்.
ஜெயின் சமூகத்தால் இவர்களுக்கு தங்குமிடம் மற்றும் உணவு வழங்கப்படுகிறது. இல்லையெனில் சமணம் தொடர்புடைய கோயில்களுக்கு அருகில் உள்ள மடங்களில் இவர்கள் வாழ்கிறார்கள்.