ஆன்மிகத்தில் பல அறிவியலை புகுத்திய நம் முன்னோர்கள், நம் வழிபாட்டிலும் பல அறிவியல்களை வைத்துள்ளனர். பக்தர்கள் கோயிலுக்குச் சென்று கடவுளை கும்பிட்டாலும் அவர்களுக்கு மனம் வேறு எங்கோ இருக்கும். அதுபோன்ற பிரச்னைகளை போக்கவும், மனதை ஒருநிலைப்படுத்தவும், எதிர்மறை எண்ணங்களை நீக்கவும்தான் கோயிலில் மணியை அமைத்தார்கள் நம் முன்னோர்கள்.
கோயில் மணி என்பது ஏதோ ஒரு உலோகத்தால் செய்யப்படுவது கிடையாது. அதில் கூட பலவகை உலோகக் கலவைகளை பயன்படுத்தியுள்ளார்கள் நம் முன்னோர்கள். தாமிரம், வெள்ளி, தங்கம், வெண்கலம், இரும்பு என பஞ்சபூதங்களை குறிக்கும் பஞ்சலோகத்தில்தான் மணிகள் தயாரிக்கப்பட்டன.
ஒவ்வொரு முறை கோயில் மணி அடிக்கும்போதும் நம் உடலில் பல மாற்றங்கள் ஏற்படுகின்றன. நம் மனதை ஒருநிலைப்படுத்த வேண்டும் என்றால், நம் மூளை நமது கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். மனித மூளை என்பது வலது, இடது என்று பிரிக்கப்பட்டுள்ளது. இரண்டும் இருவேறு ஆற்றல் செயல்கள் உடைய தன்மைக்கொண்டது. இந்த இரண்டையும் ஒன்றாக இணைக்கும் தன்மை கோயில் மணியில் இருந்து வரும் ஒலிகளுக்கு உண்டு. அதற்கு ஏற்றவாறே கோயில் மணி தயாரிக்கப்படுகிறது.
கோயில் மணி ஒலிக்கும்போது அதிலிருந்து வரும் ஓசையின் எதிரொலிகள் நம் காதுகளில் ஏழு விநாடிகள் வரை ஒலிக்கிறது. வெறும் ஏழு விநாடிகள் ஒலிக்கும் அந்த ஒலி மனித உடலில் உள்ள ஏழு சக்கரங்களையும் தாக்குகிறது. இந்த ஏழு விநாடி ஒலிக்கும் ஒலி ஏழு சக்கரங்களையும் ஆட்டிப்படைக்கிறது.
கோயில் மணியில் இருந்து வரும் ஓசையில், ‘ஓம்’ என்னும் மந்திரத்தை உணர முடியும். நீங்கள் நன்றாக கவனித்தால் கோயில் கர்ப்பக்கிரகத்தில் மணி வைத்திருப்பார்கள். இறைவனுக்கு தீபாராதனை காட்டும் போது, இறைவனுக்கு அபிஷேகம் நடக்கும்போது, இறைவனுக்கு உணவு படைக்கும் போது என ஒருசில நேரங்களில் மட்டும்தான் இந்த மணியை அடிப்பார்கள். இந்த மணியோசை நேர்மறை சக்தியை உருவாக்கக் கூடியது.
கோயிலுக்கு உள்ளே செல்லும்போதே மணியை கட்டி வைத்திருப்பார்கள். அதை அடித்துவிட்டு உள்ளே செல்வதன் காரணம், நம்முடைய ஆழ்மனதை விழிக்கச் செய்வதற்காகதான். தூங்கிக்கொண்டிருக்கும் மனிதனை எப்படி ஓசை மூலம் எழுப்புவோமோ, அதேபோலதான் தூங்கிக்கொண்டிருக்கும் மனதை இந்த மணியின் சத்தத்தினை கொண்டு எழுப்புவதற்காக வைத்தனர். இதனால் மனமும், உடலும் ஒருசேர விழித்தெழுகிறது. கோயில் மணியின் சத்தத்தை கேட்கும்போது உடலும், மனதும் புத்துணர்ச்சியடைகின்றன.
கோயில் மணியின் மூலம் உண்மையான தியானத்தை அடைய வேண்டும் என்றால், கட்டாயம் சிதம்பர நடராஜர் கோயிலுக்குச் செல்ல வேண்டும். ‘சிகண்டிபூரணம்’ என்று சித்தர்களால் அழைக்கப்படும் இந்த மணியில் இருந்து எழும் அந்த தெய்வீக ஒலி எளிதில் நம்மை ஆழ்நிலை தியானத்திற்குக் கொண்டுச் சென்றுவிடும்.