The secret of worshiping Krishna with butter 
ஆன்மிகம்

பகவான் கிருஷ்ணருக்கு வெண்ணெய் படைத்து வழிபடுவதன் ரகசியம் தெரியுமா?

கே.எஸ்.கிருஷ்ணவேனி

தெய்வங்களில் பகவான் கிருஷ்ணருக்கும், ஆஞ்சனேயருக்கும் மட்டும்தான் வெண்ணெய் படைத்து வழிபடுவது வழக்கம். அதிலும் கிருஷ்ணருக்கு வெண்ணெய் என்றால் கொள்ளை பிரியம். அவர் கோகுலத்தில் இருக்கும்போது எல்லா வீடுகளிலும் வெண்ணெய் திருடி உண்டதாக புராணங்கள் சொல்கின்றன. அதை நினைவுபடுத்தும் விதமாகத்தான் நாம் வருடம் தோறும் அவரது ஜன்மாஷ்டமி அன்று வெண்ணெய் படைத்து வழிபடுகிறோம். ஆனால், கண்ணன் வெண்ணை திருடி சாப்பிடுவதற்கும், அவருக்கு வெண்ணெய் மீது ஆசை இருப்பதற்கும் பின்னால் மிகப்பெரிய ஆன்மிக ரகசியம் அடங்கியுள்ளது.

குழந்தையாக இருந்த கண்ணனுக்கு யசோதா ஒரு நாளைக்கு 8 முறை உணவு கொடுப்பாளாம். கோகுலத்திற்கு தலைவனாக இருந்த நந்தகோபனிடம் பெரிய பசு கூட்டமே இருந்தது. அப்படி இருக்கையில் கண்ணன் எதற்காக கோகுலத்தில் உள்ள வீடுகள் ஒவ்வொன்றிற்கும் சென்று வெண்ணெய் திருடி சாப்பிட வேண்டும்?

பால் வாங்கியதும் அதனை காய்ச்சும்பொழுது பல அற்புதமான பொருட்கள் நமக்கு கிடைக்கும். உறைய விட்டு அதை உரியில் வைத்து அடுத்த நாள் காலையில் பார்த்தால் தயிராகி இருக்கும். தயிரும் அதன் மீது படிந்திருக்கும் ஆடையையும் மத்தால் கயிறு கொண்டு கடைந்தால் வெண்ணெய் கிடைக்கும்.

அதுபோல்தான் நமக்குள் இறை பக்தியை உறைய விட்டு, வைராக்கியம் என்னும் உரியிலே வைத்து பக்தியாகிய மத்தையும், ஞானமாகிய கயிறையும் கொண்டு கடைய, நமக்குள் மறைந்திருக்கும் இறைத்தன்மையாகிய வெண்ணெய் வெளிப்படும் என்பது ஐதீகம். மத்தில்தான் வெண்ணெய் படியும். கயிற்றில் வெண்ணெய் படியாது. அதுபோல் பக்தியில்தான் இறைவன் நிறைந்திருப்பான். வெறும் ஞானம் மட்டும் இருந்தால் போதாது.

பக்தியில் வெளிப்பட்ட இறைத்தன்மையாகிய வெண்ணையை உண்டு, கோபியர்களுக்கு அருள்புரிந்ததே இதற்கு பின்னால் ஒளிந்திருக்கும் மிகப்பெரிய தத்துவமாகும். வெண்ணெய் என்பது ஆன்மாவுடன் தொடர்புடையதாக கருதப்படுகிறது. ஆன்மாவில் ஒட்டி இருக்கும் கர்மாக்கள் நீக்கப்பட்டு சுத்தமான வெண்ணெய் வெளிப்படும். அந்த வெண்ணையை இறைவன் விரும்பி ஏற்றுக் கொள்வார் என்பதே இதன் தத்துவம்.

ஒவ்வொரு ஆன்மாவையும் இறைவன் விரும்பி ஏற்றுக்கொள்வதே கண்ணன் வெண்ணெய் திருடி சாப்பிட்டதற்கு பின்னால் இருக்கும் தத்துவமாகும். தன்னை வணங்குபவர்களை மட்டுமல்ல, வணங்காதவர்களின் ஆன்மாக்களையும் இறைவன் விருப்பமுடன் ஏற்றுக் கொள்வான். கண்ணன் நம்முடைய ஆன்மாவை ஏற்றுக்கொண்டு நமக்கு நன்மைகள் வழங்க வேண்டும் என்பதற்காகவும், நம்முடைய ஆன்மாவையே இறைவனுக்கு  சமர்ப்பணம் செய்து வழிபடுவதற்கு சமம் என்பதாலும் கண்ணனுக்கு வெண்ணையை படைத்து வழிபடுகிறோம்.

முள்ளங்கி ஜூஸின் ஆரோக்கிய பலன் தெரிஞ்சா குடிக்காம விடவே மாட்டீங்க!

அன்றாட சிறு சிறு உடல் பிரச்னைகளைப் போக்கும் எளிய உணவு மருத்துவம்!

இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்தால் இந்தியர்களுக்கு என்ன நன்மை? வாங்க தெரிஞ்சுக்கலாம்! 

உணவில் ருசிக்காக சேர்க்கப்படும் தக்காளியில் இத்தனை சத்துக்களா?

உலகிலேயே மிக பெரிய ரூபிக்ஸ் க்யூப் (Rubik’s Cube) எங்கு உள்ளது, அதன் எடை என்ன தெரியுமா?

SCROLL FOR NEXT