அனுமன் கோயிலில் செந்தூரம் பிரசாதமாக வழங்கப்படுவதைப் பார்த்திருப்பீர்கள். இதற்கான காரணம் என்னவென்று தெரியுமா? அனுமனுக்கும் செந்தூரத்திற்குமான தொடர்பு என்னவென்பதை இந்தப் பதிவில் காண்போம்.
ஒரு நாள் சீதா பிராட்டி ஸ்ரீராமன் வீற்றிருக்கும் அரசவைக்குச் செல்லத் தயாராகிக் கொண்டிருந்தார். அப்போது செந்தூரத்தை எடுத்துத் தனது நெற்றியின் வகிட்டில் இட்டுக்கொண்டார். சீதையை அரசவைக்கு அழைத்துச் செல்ல ஸ்ரீராமன் சேவகனான அனுமன் அவ்விடத்திற்கு வந்தார். சீதா தேவி தனது நெற்றியில் வைத்துக்கொண்ட செந்தூரத்தை கவனித்த அனுமன், “தாயே! தங்களிடம் ஒரு கேள்வி கேட்கலாமா?” என்று கேட்டார். சீதா தேவியும், “என்ன தெரிய வேண்டும் கேளுங்கள்?” என்று கூறினாள்.
“நீங்கள் ஏன் தினமும் நெற்றி வகிட்டில் செந்தூரத்தை வைத்துக்கொள்கிறீர்கள்?” என்று அனுமன் கேட்டார். அதற்கு சீதையோ, “என் கணவர் நீண்ட ஆயுளுடன் நீடூழி வாழ வேண்டும் என்பதற்காக நெற்றி வகிட்டில் செந்தூரம் வைத்துக் கொள்கிறேன்” என்றார். பிறகு சீதா பிராட்டியை அனுமன் அரசவையில் விட்டுச் செல்கிறார்.
சில நிமிடங்கள் கழித்து தனது உடல் முழுவதும் செந்தூரத்தை பூசிக்கொண்டு அரசவைக்கு வருகிறார் அனுமன். இதை கவனித்த ஸ்ரீராமர், “ஆஞ்சனேயா! இது என்ன கோலம்?” என்று கேட்டார். அதற்கு அனுமனோ, “சீதா தேவி தாயார் தனது நெற்றியில் வைத்துக்கொண்ட சிறு செந்தூரம் தங்களின் நீண்ட ஆயுளுக்கு வழிவகுக்கும் என்றால், நான் தினமும் உங்கள் பரிபூரண ஆயுளுக்காக என் உடல் முழுவதும் செந்தூரத்தை பூசிக்கொள்கிறேன்” என்று கூறினார்.
இதைக் கேட்ட ஸ்ரீராமனின் கண்கள் கலங்கியது. அனுமனின் பக்தியைக் கண்டு வியப்படைந்து கலங்கிய கண்களோடு அனுமனைக் கட்டித் தழுவிக் கொண்டார்.
இந்தக் கதை அனுமன் ஸ்ரீராமனின் மீது வைத்திருக்கும் அன்பையும், பக்தியையும் தெளிவாக உணர்த்துகிறது. ஆரஞ்சு நிறத்திலிருக்கும் செந்தூரம் பலம், பாதுகாப்பு, சக்தியை குறிக்கிறது. ‘அனுமனுக்கு செந்தூரம் வைத்து வழிபடுபவர்களின் வாழ்க்கையில் ஏற்படும் இன்னல்களும், கஷ்டங்களும் விரைவில் சரியாகும்’ என்று ஸ்ரீராமர் வரமளித்தார் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.
இதனால்தான் அனுமன் கோயில்களில் நல்லெண்ணெய்யுடன் செந்தூரம் கலந்து அனுமன் மீது பூசப்படுகிறது. இதை பக்தர்கள் பிரசாதமாக சிறிது எடுத்துச் செல்வதுண்டு. செந்தூரம் வாங்கி அனுமன் கோயிலுக்குத் தருவதால் கணவன், மனைவி உறவு பலப்படும் என்று நம்பப்படுகிறது.