Do you know the story of temple Kodi maram? 
ஆன்மிகம்

கோயில் கொடிமரம் பிறந்த கதை தெரியுமா உங்களுக்கு?

பொ.பாலாஜிகணேஷ்

கோயிலுக்குச் சென்றால் முதலில் நாம் கண்டு வணங்குவது கொடிமரத்தைத்தான். கோயிலில் திருவிழாக்கள் தொடங்கும்பொழுது முதல் நிகழ்வாக கொடியேற்றும் வைபவம்தான் நடைபெறும். கொடிமரத்துக்கு அப்படி என்ன முக்கியத்துவம்? அதன் சிறப்புகள் என்ன என்பது பற்றி இந்தப் பதிவில் காண்போம்.

மகாபாரதப் போருக்குப் பிறகு தருமர் கேட்டவருக்கு கேட்டபடி நிறைய தானங்கள் வழங்கி தன்னை உலகிலேயே ஒரு சிறந்த நீதிமானாகக் காட்டிக் கொண்டார். ஸ்ரீகிருஷ்ணர் இந்த விஷயத்தில் தருமருக்கு ஒரு பாடம் புகட்ட எண்ணி, அவரை அசுவமேத யாகம் செய்யச் சொன்னார்.

தருமரும் யாகத்தைத் தொடங்கினார். அசுவமேத யாகக் குதிரை மற்ற பாண்டவர்களுடன் வலம் வரத் தொடங்கியது. பாண்டவர்களின் பராக்கிரமம் உலகறிந்த விஷயம் என்பதால் அனைத்து மன்னர்களும் தருமரின் அதிகாரத்தை ஏற்றுக்  கொண்டனர்.

குதிரை மணிப்பூர் ராஜ்ஜியத்தை அடைந்தது. அந்த ராஜ்ஜியத்து அரசன் மயூரத்வஜன் சிறந்த கிருஷ்ண பக்தன். அவனும் இந்தக் குதிரை ஸ்ரீகிருஷ்ணர் ஆதரிக்கும் பாண்டவர்களைச் சேர்ந்தது என்று தெரிந்து கொள்கிறான். ஆயினும், விட்டுக்கொடுக்க மனம் இல்லை. குதிரையை தடுத்து நிறுத்தி சிறை பிடிக்கிறான்.

செய்தி அறிந்து தருமர், ஸ்ரீகிருஷ்ணருடன் மணிப்பூர் விரைந்தார். ஸ்ரீகிருஷ்ணர், தருமரிடம், “உன்னால் மயூரத்வஜனை தோற்கடிக்க முடியாது. அதனால் நீ மாறுவேடத்தில் என்னுடன் வா” என்று சொல்லி இருவரும் செல்கின்றனர். ஸ்ரீகிருஷ்ணர் மயூரத்வஜனிடம், “என்னிடம் நீ வைத்திருக்கும் அன்பு உண்மையென்றால் உனது மகனின் உடலில் பாதியை தருவாயா? என்கிறார்.

அதற்கு மயூரத்வஜன், “பாதி என்ன முழுவதையுமே தருகிறோம்” என்கிறான்.

ஸ்ரீ கிருஷ்ணரோ, “எனக்கு முழு உடலும் வேண்டாம். பாதி உடல்தான் வேண்டும். அதுவும் உனது மகனை பாதியாக வெட்டி ஒரு பகுதியை மட்டும் எனக்குத் தர வேண்டும். அது மட்டுமின்றி, அவனது உடலை நீயும் உனது மனைவியும்தான் வெட்ட வேண்டும். அப்படி வெட்டும்போது உனது கண்ணிலிருந்தோ அல்லது உனது மனைவியின் கண்ணிலிருந்தோ ஒரு சொட்டு கண்ணீர் வரக் கூடாது. அதேபோல் உனது மகனின் உடலில் இருந்தும் ஒரு சொட்டு கண்ணீர் வரக் கூடாது” என்கிறார்.

அதற்கு மயூரத்வஜனும் சம்மதிக்கிறான். சொன்னபடி மனைவி மகனின் உடலை பிடித்துக்கொள்ள மயூரத்வஜன் மகனின் உடலை இரண்டாக வெட்ட முற்படுகிறான். அப்போது மகனின் ஒரு பகுதி கண்ணிலிருந்து ஒரு சொட்டு கண்ணீர் வெளிப்படுகிறது.

அதைக் கண்ட ஸ்ரீகிருஷ்ணர், “ உனது மகனின் கண்களிலிருந்து கண்ணீர் வருகிறது. கண்ணீரோடு தரப்படும் தானம் எனக்குத் தேவையில்லை” என்கிறார்.

உடனே மயூரத்வஜனின் மகன், “ஸ்வாமி எனது உடலின் புண்ணியம் செய்த ஒரு பகுதிதானே உங்களுக்குப் பயன்படப் போகிறது. இன்னொரு பகுதி என்ன பாவம் செய்ததோ என்பதை நினைத்துத்தான் அந்த உடல் பகுதி கண்ணீர் வடிக்கிறது” என்று கூறினான்.

இதை அருகில் இருந்து பார்த்த தருமருக்கு தானே மிகச் சிறந்த கொடையாளி என்ற கர்வம் அடங்கியது. அப்போது ஸ்ரீ கிருஷ்ணர், மயூரத்வஜனுக்கும் அவனது குடும்பத்துக்கும் விஸ்வரூப தரிசனம் தந்து ஆசி வழங்கினார். அது மட்டுமின்றி, “இறைவனை வணங்கும் கோயில்களில் நீங்கள் த்வஜஸ்தம்பமாக விளங்குவீர்கள். இறைவனை தரிசிக்க ஆலயத்துக்கு வருகை தருபவர்கள் இறைவனை தரிசிப்பதற்கு முன்பு உங்களை கண்டு தரிசிப்பார்கள்” என்று அவர்களுக்கு வரமருளினார்,

கொடிமரம் ஜீவதாறு (உயிர் உள்ள மரம்) என்று ஒரு மரத்தில் செய்யப்படுகிறது. அது தாமிரம் மற்றும் தங்கத் தகடுகளால் மறைக்கப்பட்டு அதில் புராண நிகழ்வுகள் செதுக்கப்படுகின்றன. மேலே மூன்று உலோக அடுக்குகள் அமைக்கப்படுகின்றன. அதன் பெயர் மேகலா. அது மூன்று உலகங்களை, அதாவது Bhur பூமி, bhuva அண்டம், suvaha சுவர்க்கம் ஆகியவற்றை குறிக்கும் அதில் பாலி என்ற சிறிய மணியும் இருக்கும். கொடி மரத்தின் மேலே மயூரத்வஜனை நினைவுகூறும் வகையில் ஆகாச தீபம் என்ற சிறிய விளக்கும் உள்ளது. அதில் எற்றப்படும் கொடி த்வஜபடம் என்று அழைக்கப்படுகிறது. அதில் நந்தி, கருடன் ஆகியோர் படங்களோ அல்லது திரிசூலம் போன்ற ஆயுதங்களோ பொறிக்கப்பட்டு இருக்கும். கொடி ஏற்றுவதை, ‘த்வஜ ஆரோகணா’ என்றும், இறக்குவதை ‘த்வஜ அவனத’ என்றும் கூறுவர். கொடிமரத்தை வணங்காது கோயில் பிரதட்சனம் நிறைவு பெறாது.

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

இவர்களைத் தெரியும்; இந்தத் தகவல்கள் தெரியுமா?

SCROLL FOR NEXT