Vinayaga peruman 
ஆன்மிகம்

விநாயகருக்கு மூஷிகன் வாகனமான கதை தெரியுமா?

ம.வசந்தி

முழுமுதற் கடவுளான விநாயகரின் வாகனம் மூஷிகன் (எலி) என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால், விநாயகப்பெருமான் ஏன் மூஷிகளை தனது வாகனமாகத் தேர்ந்தெடுத்தார் என்பது குறித்து வழங்கப்படும் ஒரு புராணக் கதையினை இந்தப் பதிவில் காண்போம்.

கந்தர்வர்களில் ஒருவனான கிரவுஞ்சன், விநாயகப்பெருமானின் தீவிர பக்தனாக இருந்தான். தினமும் விநாயகரை வணங்கி விட்டுத்தான் தனது பணிகளைத் தொடங்குவான். ஒரு நாள் அவன், இமயமலைப் பகுதியில் இயற்கை அழகை ரசித்தபடி வான்வழியே சென்று கொண்டிருந்தபோது, பூப்பறித்துக் கொண்டிருந்த ஒரு பெண்ணின் அழகில் மயங்கினான். அந்தப் பெண்ணை திருமணம் செய்ய நினைத்து தன்னுடைய விருப்பத்தைத் தெரிவித்தான். அந்தப் பெண், தான் சவுபரி முனிவரின் மனைவி மனோரமை என்று சொல்லி, அவனது எண்ணத்தை மாற்றிக் கொள்ளும்படி எச்சரித்தாள்.

இதனால் கோபமடைந்த கந்தர்வன், அவளைக் கவர்ந்து சென்று விடுவது என்று முடிவு செய்து மனோரமையை நெருங்கினான். அவனது எண்ணத்தை அறிந்த அவள், அவனிடமிருந்து தப்பிக்க ஆசிரமம் நோக்கி ஓடினாள்.  தொடர்ந்து வந்த கந்தர்வன்,  மனோரமையின் கையைப் பிடிக்க, இதை பார்த்த சவுபரி முனிவர் எச்சரித்தும் கையை விடாத மோக மயக்கத்தில் இருந்த கந்தர்வனுக்கு ‘நீ, மண்ணைத் தோண்டி வளையில் ஒளிந்து வாழும் எலியாக மாறி துன்பப்படுவாய்’ என்று சாபமிட்டார்.

சாபத்தைக் கேட்டு சுயநினைவுக்குத் திரும்பிய கந்தர்வன், தன்னுடைய செயலுக்காக வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்டு  சாபத்தை முழுமையாக ஏற்றுக்கொள்வதாகவும் தெரிவித்தான். இதனால் மனமிறங்கிய முனிவர், ‘‘கந்தர்வனே! தவறுக்கு மன்னிப்பு கேட்டதினால்  பிற்காலத்தில் உனக்கு இந்த எலி உருவத்திலேயே மிகப்பெரிய சிறப்பு கிடைக்கும்’’ என்றார்.

சில காலத்தில் வரேனியன் எனும் அரசனுக்கு, யானை முகமும், மனித உருவமுமாக விநாயகப்பெருமான் பிறந்தார். அந்தக் குழந்தையைக் கண்டு அரசன் அச்சமடைந்து, காட்டில் கொண்டு போய் விட்டு வரும்படி தன்னுடைய படை வீரர்களுக்குக் கட்டளையிட்டான். அவர்களும் அந்தக் குழந்தையை ஒரு குளக்கரையில் விட்டு வந்தனர். காட்டிற்குள் இருந்த குளத்திற்கு வந்த பராசர முனிவர், குழந்தையை தனது ஆசிரமத்தில் வைத்து வளர்க்கத் தொடங்கினார்.

ஆசிரமத்தில் வளர்ந்து வந்த விநாயகர், ஒரு மரத்தில் ஏறி  விளையாடியபோது, மரத்தின் அடியில் இருந்த எலியானது, வேர்களைக் கடித்து மரத்தைச் சரிக்க, இதற்குக் காரணம் பெரிய எலிதான் என்று விநாயகருக்கு தெரிய வந்ததும், அந்த எலியைக் கொல்வதற்காக, தன்னிடம் இருந்த பரசு ஆயுதத்தை எடுத்து எலியை நோக்கி வீசினார். ஆயுதத்தைப் பார்த்ததும் எலி வளைக்குள் புகுந்து ஓடியது. வளையைத் தோண்டியபடி பாதாளம் வரைச் சென்ற எலியை பரசு ஆயுதம்  விநாயகரின் முன்பு கொண்டு போய் நிறுத்தியது.

விநாயகப்பெருமானைக் கண்டதும், அந்த எலிக்கு தான் கந்தர்வனாக இருந்ததும், சவுபரி முனிவரிடம் சாபம் பெற்றதும் நினைவுக்கு வந்து, தனது முன் கதையைச் சொல்லி, தனது தவறை மன்னிக்கும்படி வேண்டியது. எலியின் கதையைக் கேட்ட விநாயகர், ‘’மூஷிகனே கவலைப்படாதே! முனிவரிடம், நீ பெற்ற சாபத்தை அப்படியே ஏற்றுக்கொள்வதாக கூறிவிட்டபடியால், சாப விமோசனம் வழங்க முடியாது. நீ கந்தர்வனாக இருந்தபோது, என் மேல் அதிக பக்தி கொண்டிருந்ததால் என் வாகனமாக உன்னை ஏற்றுக் கொள்கிறேன். இதன் மூலம் நான் இருக்கும் இடங்களிலெல்லாம் உனக்கும் மரியாதை கிடைக்கும்’’ என்று அருளினார்.

ஒருவர் தான் நினைப்பது நடந்தே தீர வேண்டும் என்கிற நோக்கத்தில் செயல்படும் போது, தவறுகள் அதிகமாக நடக்கின்றன. தவறைத் திருத்திக் கொள்பவர்களுக்கு அவர்கள் எதிர்பார்க்காத சிறப்புகளும் வந்து சேரும் என்பதையே இந்த சாப விமோசனக் கதை நமக்கு உணர்த்துகிறது.

5 நிமிட பாடலுக்கு கோடிகளில் செலவு தேவையா? இந்திய சினிமாவின் மாயாஜாலம்! 

உடல் சூட்டையும் வலியையும் தணிக்கும் 6 வகை எண்ணெய்கள்!

திருமண வாழ்வில் முதல் ஆறு மாதங்கள் ஏன் முக்கியமானது தெரியுமா?

ஆந்திரா ஸ்பெஷல் தக்காளி பருப்பு கடையல்! 

அருவியின் மேல் கட்டப்பட்ட அழகு கட்டிடம்! ஃபாலிங்வாட்டர் வீடு!

SCROLL FOR NEXT