Tippiramalai Sri Balakrishnan 
ஆன்மிகம்

ஆசியாவிலேயே இரண்டாவது பெரிய கிருஷ்ணர் சிலை உள்ள கோயில் தெரியுமா?

ஆர்.ஜெயலட்சுமி

ன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டம் என்ற இடத்தில் உள்ளது திப்பிறமலை பாலகிருஷ்ணன் திருக்கோயில். ஆசியாவிலேயே இரண்டாவது பெரிய சிலை உள்ள திருக்கோயில் இதுதான். இக்கோயிலில் 13 அடி உயரத்தில் ஸ்ரீ கிருஷ்ணர் அருள்பாலிக்கிறார். ஸ்ரீ கிருஷ்ணரின் லீலைகள் பற்றி பாகவதத்தில் பல நிகழ்ச்சிகள் கூறப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்று கண்ணன் சிறுவயதில் வெண்ணை திருடி உண்டதாகும்.

ஸ்ரீ கிருஷ்ணன் வெண்ணை திருடி உண்பதை அறிந்த தாயார் யசோதை கண்ணனை கண்டிக்கவும் தண்டிக்கவும் செய்கிறார். அப்போது குழந்தை கண்ணன் குழந்தையாகவே கையில் வெண்ணெயுடன் விஸ்வரூபம் எனப்படும் பேருருவம் எடுத்து அன்னை யசோதாவுக்குக் காட்சி தந்தார். திப்பிறமலை கிருஷ்ணன் கோயில் 800 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்டது. சேர நாட்டு கட்டடக்கலையில் கட்டப்பட்டுள்ளது. வட்ட வடிவத்தில் கோயிலும் ஓடு வேய்ந்த விமானமும் கொண்டுள்ளது. கூம்பு வடிவத்தில் கோபுரமும் காட்சியளிக்கிறது. இந்த திருக்கோயிலின் முன்பு பலிபீடம் அமைந்துள்ளது. இரணியல் என்ற ஊரைச் சேர்ந்த வைணவ பக்தர் ஒருவர் இக்கோயிலை உருவாக்கியதாக சொல்லப்படுகிறது.

13 அடி உயரத்தில் பேருருவத்தில் ஸ்ரீ கிருஷ்ணனின் திரு உருவம் அமைந்திருக்க வலது பக்கத்தில் தாய் யசோதா மகனின் காலடியில் நிற்கிறார். அன்னையின் வலது கையில் வெண்ணையும் இடது கையில் கரண்டியும் உள்ளது. இது ஒரு அற்புதமான திருக்கோலமாகும். இப்படி ஸ்ரீ கிருஷ்ணன் தாயாரோடு கோயில் கொண்டுள்ள அபூர்வ தலமாகத் திகழ்கிறது திப்பிறமலை கோயில். திப்பிறமலை கோயில் கருவறையில் 13 அடி உயரத்தில் ஸ்ரீ கிருஷ்ணனின் திருவுருவம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

Tippiramalai Sri Balakrishnan Temple

நான்கு திருக்கரங்களுடன் காட்சி அளிக்கிறார். மேலே உயர்த்திய கைகளில் சங்கு, சக்கரம் ஏந்தியும் கீழ்நோக்கி உள்ள கைகளில் வலது கையில் வெண்ணையும் இடது கையில் கதையும் ஏந்தி அருள்புரிகிறார். தாயின் வயிற்றில் இருந்தபடியே தந்தைக்குக் காட்சி அளித்ததால் கருமாணித்தாழ்வார் ஸ்ரீ கிருஷ்ணன் கோயில் என்றும் இது அழைக்கப்படுகிறது. திப்பிறமலையில் ஸ்ரீ கிருஷ்ணர் சிலையானது சுயம்புவாகத் தோன்றியது முதல் வளர்ந்து வருவதாகக் கூறப்படுகிறது. மேலும், அவரது வளர்ச்சிக்கு ஏற்ப இந்தக் கோயில் மூன்று முறை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கோயிலில் குடிகொண்டிருக்கும் பாலகிருஷ்ணனின் திருவுருவம்தான் ஆசியாவிலேயே மிகப்பெரிய சிலை என்று கூறப்படுகிறது.

இக்கோயிலின் அருகிலேயே கலிகண்ட மகாதேவர் சிவன் கோயில் ஒன்றும் அமைந்துள்ளது. சிவனை வழிபட்டு இங்குள்ள ஒன்பது கிளைகளுடன் உள்ள அரசு மரத்தை வலம் வந்தால் ஒன்பது கிரக தோஷங்களும் நீங்கி நிவர்த்தி பெறலாம் என்பது தொன்று தொட்டு இருந்து வரும் நம்பிக்கையாகும். குழந்தை வரம் இல்லாதோர் இக்கோயில் கிருஷ்ணரை வழிபட்டு பிரார்த்தனை செய்தால் விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பதும் பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது.

வெற்றி அடைய கனவு காணுங்கள்!

பொங்கி வரும் கோபத்தை புஸ்வானமாக்க சில யோசனைகள்!

கவனத்தை கவனத்தோடு கையாளுங்கள்!

உணவை நன்றாக மென்று சாப்பிட வேண்டியதன் அவசியத்தை அறிந்துக் கொள்வோம்!

பேச்சுத் திணறல் காரணங்களும் அவற்றை எதிர்கொள்ளும் விதங்களும்!

SCROLL FOR NEXT