Do you know where is the ancient Ganesha temple that changes color? https://tamil.lifeberrys.com
ஆன்மிகம்

நிறம் மாறும் பழைமையான விநாயகர் கோயில் எங்கிருக்கிறது தெரியுமா?

நான்சி மலர்

த்தனையோ அதிசயமான கோயில்களைப் பார்த்திருப்போம். ஆனால், பெயரிலேயே அதிசயத்தை வைத்திருக்கும் அதிசய விநாயகர் கோயிலை பார்த்ததுண்டா? தமிழ்நாட்டில் நாகர்கோவில் மாவட்டத்தில் உள்ள கேரளபுரம் என்னும் ஊரில் இருக்கும் விநாயகர் கோயிலே அதிசய விநாயகர் கோயிலாகும். இக்கோயில் நாகர்கோவிலிலிருந்து 14 கிலோ மீட்டர் தொலைவிலும் கன்யாகுமரியிலிருந்து 40 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது. இங்குள்ள விநாயகர் எல்லா தடைகளையும் போக்கக் கூடியவராவார்.

இங்கிருக்கும் சிவன் மற்றும் விநாயகர் சிலைகள் மிகவும் பழைமையானதாகும். இக்கோயில் 12ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இங்குள்ள விநாயகர் சிலை 2300 வருடங்கள் பழைமையானது என்று கூறப்படுகிறது. இந்த சிலையை ஆகம விதிப்படி வைக்கப்படவில்லை. அப்படியே வைக்கப்பட்டிருக்கிறது என்று கூறுகிறார்கள்.

இங்கிருக்கும் விநாயகரின் சிலை ஆறு மாதத்திற்கு ஒருமுறை நிறம் மாறும் என்று கூறப்படுகிறது. உத்தராயண காலத்தில் (மார்ச் - ஜூன்) விநாயகர் சிலை கருப்பாகவும், தட்சிணாயண காலத்தில் (ஜூலை - பிப்ரவரி) இந்த சிலை வெள்ளை நிறமாகவும் மாறும். அதனாலேயே இக்கோயில் அதிசய விநாயகர் கோயில் என்று பெயர் பெற்றது.

கேரளபுரத்தை ஆண்ட அரசன் ரமேஸ்வரத்திற்கு புனித யாத்திரை சென்றபோது ராமேஸ்வர கடற்கரையில் மன்னன் மற்றும் அவர் உடனிருந்தோர் கால்களை கழுவிக்கொண்டிருந்தனர். அப்போது அந்தப் பக்கமாக அடித்து வரப்பட்டது இந்த பிள்ளையார் சிலை. அதை எடுத்து சென்று ராமேஸ்வரத்தை ஆண்ட மன்னனான சேது மன்னனிடம் பரிசாக கொடுத்தார். இதனால் மிகவும் மனம் மகிழ்ந்த சேது மன்னன், ‘அந்தப் பொருளை எடுத்தவரே வைத்துக்கொள்வதுதான் நியாயம்’ என்று அந்த விநாயகர் சிலையை கேரளபுரத்து அரசரிடமே திருப்பிக் கொடுத்து விட்டார். அதுமட்டுமில்லாமல், அவரைப் பாராட்டி அவருக்கு ஒரு மரகத விநாயகரையும் பரிசளித்தார். பின்பு கேரளபுரம் வரும் வழியில் கொள்ளையர்கள் மரகத விநாயகரை கொள்ளையடித்துச் சென்று விட்டனர். எனினும், ராமேஸ்வரத்திலிருந்து கிடைத்த விநாயகரை கொள்ளையர்களால் நகர்த்த முடியவில்லை என்று விட்டு விட்டுச் சென்று விட்டனர்.

திருமணம் ஆக வேண்டும் என்று வரன் தேடுபவர்கள், குழந்தை பேறு வேண்டுபவர்கள் இந்த விநாயகருக்கு தேங்காய் உடைத்து, கொழுக்கட்டை படைத்து வேண்டிகொள்கிறார்கள். அப்படிச் செய்தால் நினைத்தது நடக்கும் என்பது ஐதீகம். இக்கோயிலுக்கு நிறைய பக்தர்கள் நிறம் மாறும் அதிசய பிள்ளையாரை பார்ப்பதற்காகவே வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்னொரு அதிசயமும் இக்கோயிலில் நடைபெறுகிறது. இக்கோயிலில் இருக்கும் கிணற்றின் நீரும் ஆறு மாதத்திற்கு ஒருமுறை நிறம் மாறும். விநாயகர் வெள்ளை நிறமாக இருக்கும் போது, நீர் கருப்பு நிறமாகவும், விநாயகர் கருப்பு நிறமாக இருக்கும்போது நீர் வெள்ளை நிறமாகவும் மாறும் என்று கூறப்படுகிறது. இலையுதிர் காலம் தமிழ்நாடு மற்றும் கேரளாவில் கிடையாது எனினும் இங்கிருக்கும் ஆலமரத்தின் இலைகள் தட்சிணாயண காலத்தில் உதிர்ந்தும் பிறகு மார்ச் மாதத்தில் இலைகள் துளிர்விட ஆரம்பிக்கும். இதை ஒரு அதிசய நிகழ்வாக மக்கள் கருதுகிறார்கள்.

இக்கோயிலில் விநாயகர் சதூர்த்தி வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. அதை காண்பதற்காகவே ஆயிரக்கணக்கில் மக்கள் இக்கோயிலில் கூடுவர் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, அவசியம் இந்த அதிசய நிகழ்வை காணவும், விநாயகரின் அருளைப் பெறவும் இக்கோயிலுக்கு ஒருமுறையாவது செல்ல வேண்டியது அவசியமாகும்.

உளவியல் விஞ்ஞானிகளுக்கு ஆன்மிகத்தின் அதிசயத்தை உணர்த்திய ஸ்ரீ சத்ய சாயி பாபா!

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

SCROLL FOR NEXT