Do you know where is the temple of Hanuman with his son? https://www.patrika.com
ஆன்மிகம்

அனுமன் தனது மகனுடன் உள்ள கோயில் எங்குள்ளது தெரியுமா?

கே.எஸ்.கிருஷ்ணவேனி

துவாரகையில் இருந்து சுமார் 30 கி.மீ. தொலைவில் உள்ளது பேட் துவாரகை. இங்கிருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் தண்டியில் உள்ளது ஒரு அனுமன் கோயில். இது பெரிய கோயில் இல்லையென்றாலும் மிகவும் பிரசித்தி பெற்ற கோயிலாக விளங்குகிறது. அனுமன் தனது மகன் மகரத்துவாஜனுடன் இருக்கும் கோயில் இது. உலகிலேயே இங்கு மட்டும்தான் அனுமன் தனது மகனுடன் இருப்பதாகக் கூறப்படுகிறது. இங்கு அனுமன் ஆயுதம் எதுவும் ஏந்தாமல் மிகவும் மகிழ்ச்சியான நிலையில் கோயில் கொண்டிருக்கிறார்.

‘பிரம்மச்சாரியான அனுமனுக்கு குழந்தையா?’ என்று யோசிக்கத் தோன்றுகிறதா? அனுமன் இலங்கையை எரித்து விட்டு கடலில் நீராடும்போது அவர் உடலில் இருந்து வியர்வைத் துளி கடலில் இருந்த முதலையின் (மகரத்தின்) வாயில் விழுந்தது. இதனால் முதலை மகரத்துவாஜனை பெற்றெடுத்தது.

அனுமன் மகனான மகரத்துவாஜரின் மூர்த்தி இங்கு பெரியதாக உள்ளது. வலது கை அபய ஹஸ்தத்துடனும், இடது கை மார்பிலும், வால் தரையிலும் அமைந்துள்ளது. அவருக்கு அருகில் அமைந்துள்ள அனுமனின் சிலை ஒவ்வொரு ஆண்டும் தரைக்கு அடியில் செல்வதாகவும், அனுமனின் மூர்த்தி  முழுவதுமாக தரையில் இறங்கும்போது (பூமிக்கு அடியில் சென்றதும்) கலியுகம் முடிவடையும் என்றும் நம்பப்படுகிறது.

இக்கோயிலில் விநாயகர், காலபைரவர் சன்னிதியும் உள்ளன. பிரசாதமாக தேங்காய் பத்தையும், சீனி மிட்டாயும் வழங்கப்படுகின்றன. தண்டியில் ஸ்ரீ கிருஷ்ணன் அனுமனை பால்கியில் சந்திக்கிறார். தண்டியில் பழைய கட்டடங்கள்தான் நிறைய உள்ளன. தெருக்களும் குறுகலாக உள்ளன. காசியில் உள்ளது போல் நிறைய குறுகலான தெருக்களும், மாடுகளும் காணப்படுகின்றன.

தண்டி அனுமன் கோயில்

முக்தி தரும் திருத்தலங்களில் துவாரகையும் ஒன்று. 108 வைணவ திருத்தலங்களில் துவாரகையும் முக்கியமான தலமாகும். இங்குள்ள கிருஷ்ணருக்கு குழந்தையை போலவும் ராஜாவைப் போலவும் அலங்காரங்கள் நடக்கிறது. மகாபாரதத்தில் கிருஷ்ணரின் சரித்திரத்தை கூறும்போது இந்த துவாரகையை குறிப்பிடாமல் இருக்க முடியாது.

இக்கோயிலுக்குள் கேமரா, மொபைல் போன்கள் அனுமதி கிடையாது. எனவே, வெளியில் இருந்துதான் புகைப்படம் எடுக்கப்படுகிறது. உள்ளே சென்றவுடன் பழைய கால அரண்மனை போன்ற தோற்றத்துடன் கோயில் உள்ளது. கிருஷ்ணர் வளர்ந்து, வாழ்ந்த இடத்தில் நிற்கிறோம் என்பதே பரவசப்படுத்துவதாகும். கிருஷ்ணரின் லீலைகள் முழுவதும் இந்த ஆலயத்தின் (பேட் துவாரகை) சுவர்களில் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளன.

கோமதி நதியில் நீராடிய பிறகு துவாரகா கிருஷ்ணரை தரிசித்து 30 கிலோ மீட்டர் தொலைவில் கடல் நடுவே அமைந்துள்ள பேட் துவாரகாவில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணர் ஆலயத்தை தரிசித்து விட்டு அங்கிருந்து ஆட்டோவில் தண்டி அனுமன் கோயில், கிருஷ்ணரின் தங்கக் கோயில் செல்லலாம். ரிஷிகள், வெளிநாட்டு தூதுவர்கள், ராஜாக்கள் ஆகியோரை சந்திப்பதற்காக கட்டிய அரண்மனை இங்குள்ளது. இங்குதான் குசேலர், ஸ்ரீகிருஷ்ணரை சந்தித்து அவல் வழங்கினார் என்றும் கூறப்படுகிறது. இங்குள்ள எந்த ஹோட்டலுக்கு சென்றாலும் அவலில் செய்த உணவு வகைகள் நிறைய கிடைக்கின்றன. தண்டி அனுமன் கோயிலில் சுவர் முழுவதும் ஸ்ரீராமனின் தாரக மந்திரமான, ‘ராம் ராம்’ என எழுதப்பட்டுள்ளது.

மூங்கிலில் ஒளிந்திருக்கும் அற்புதங்கள்..!

ஊரின் சமவெளிகளில் நடத்தப்படும் கர்நாடக மாநில நாட்டுப்புறக் கலை 'பயலாட்டம்'

ஜப்பான் நாட்டுக் கதை - மனம் திருந்திய மன்னர்

இந்த மாதம் மீன்கள் உண்பதை தவிர்க்கவும்... எந்த மாதம்? ஏன்?

'என்னால் முடியும்' தம்பி! உன்னால்?

SCROLL FOR NEXT