Saluvan kuppam Murugan temple Image Credit: wikipedia
ஆன்மிகம்

சுனாமியால் கிடைத்த தமிழரின் பெருமையை கூறும் பொக்கிஷ கோவில்! எங்கிருக்கிறது தெரியுமா?

நான்சி மலர்

2004 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் ஏற்பட்ட சுனாமியால் பல உயிர் சேதங்களும், பொருள் சேதங்களும் மக்களுக்கு ஏற்பட்டது என்பது உண்மை தான். எனினும் தீமையிலும் ஒரு நன்மை என்பது போல அதே சுனாமியால் பல வருடக்காலம் மண்ணில் புதைந்திருந்த நம் தமிழர்களின் பெருமையை சொல்லும் கோவிலும் வெளிவந்தது என்பது எவ்வளவு ஆச்சர்யமான விஷயம். அந்த அதிசயமான பொக்கிஷ கோவிலை பற்றி தான் இன்று காண உள்ளோம்.

 இந்தியாவில் தமிழ்நாட்டில் உள்ள சலுவன்குப்பத்தில் உள்ள முருகன் கோவில் முருகப்பெருமானுக்காக அர்ப்பணிக்கப்பட்டது ஆகும். இந்த கோவிலின் பழமைத்தன்மையை ஆராயும் போது, கல்லால் ஆன அமைப்பு 3ஆம் நூற்றாண்டில் சங்ககாலத்தில் கட்டப்பட்டது என்றும் கருங்கல்லால் கட்டப்பட்ட அமைப்பு 8ஆம் நூற்றாண்டில் பல்லவர் காலத்தில் கட்டப்பட்டுள்ளது என்றும் கண்டுப்பிடித்தனர். இந்தியாவில் தொல்லியல் ஆய்வுக்குழு நடத்திய ஆராய்ச்சியில் கல்லால் கட்டப்பட்ட கோவில் மிகவும் பழமை வாய்ந்தது என்று கூறப்படுகிறது.

சுனாமி ஏற்பட்ட போது வெளிவந்த அமைப்பை வைத்து தொல்லியல் ஆய்வுக்குழு மேற்க்கொண்ட ஆராய்ச்சியின் போது முதலில் இந்த கோவிலை பல்லவர்கள் 8 ஆம் நூற்றாண்டில் கட்டினார்கள் என்று கண்டுப்பிடித்தனர். பின்பு அந்த கோவில் வேறொரு கல் கோவிலின் மீது கட்டப்பட்டிருப்பதை வைத்து ஆராய்ந்த போது தான் தெரிந்தது அது சங்ககாலத்தில் கட்டப்பட்ட கோவில்.

எல்லா கோவில்களையும் போல் இல்லாமல் இந்த கோவில் வடக்கு பக்கம் பார்த்தவாறு கட்டப்பட்டிருக்கிறது. தற்போது உள்ள கோவில்கள் கிழக்கு அல்லது மேற்கு பக்கம் பார்த்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. சங்ககால மற்றும் பல்லவக்கால கோவில்களின் கலைப்பொருட்கள் இங்கு கிடைத்துள்ளது. இந்த கோவிலே முருகனின் பழமையான கோவிலாக கருதப்படுகிறது. ஏழு பகோடா கோவில்களில் ஒன்றாக இந்த முருகன் கோவிலும் இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

கல்லால் ஆன சங்ககாலத்து கோவில் 2200 வருடம் பழமையானது என்று கூறப்படுகிறது. 2200 வருடத்திற்கு முன் ஏற்பட்ட புயல் அல்லது சுனாமியால் சங்ககால கோவில் அழிந்திருக்கும் என்றும் பல்லவ கோவில் அழியவும் சுனாமியே காரணமாக இருக்கும் இது 13 ஆம் நூற்றாண்டில் ஏற்பட்டிருக்கும் என்று அகழ்வாராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். புகார், உறையூர், மாங்குடி ஆகிய இடங்களில் இருந்த கற்களை பயன்படுத்தியிருக்கிறார்கள். இவ்விடத்தில் டெரக்கோட்டா சிலைகளும் கண்டுப்பிடித்துள்ளனர். இது முதல் நூற்றாண்டில் சிலப்பதிகாரத்தில் சொல்லப்படும் குரவைக்கூத்தை சித்தரிக்கக்கூடியதாக உள்ளது.

டெரக்கோட்டாவில் செய்யப்பட்ட நந்தி, பச்சை கற்களால் ஆன சிவலிங்கம், டெரக்கோட்டா விளக்கு போன்றவையும் கிடைத்துள்ளது. சோழர்களின் செம்பு காசுகளும் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழர்களின் பெருமையை பறைச்சாற்றுவதாய் இக்கோவிலின் கண்டுப்பிடிப்புகள் அமைந்துள்ளது. உண்மையிலேயே இக்கோவில் சுனாமியால் நமக்கு கிடைத்த பொக்கிஷமாகும்.

மூங்கிலில் ஒளிந்திருக்கும் அற்புதங்கள்..!

ஊரின் சமவெளிகளில் நடத்தப்படும் கர்நாடக மாநில நாட்டுப்புறக் கலை 'பயலாட்டம்'

ஜப்பான் நாட்டுக் கதை - மனம் திருந்திய மன்னர்

இந்த மாதம் மீன்கள் உண்பதை தவிர்க்கவும்... எந்த மாதம்? ஏன்?

'என்னால் முடியும்' தம்பி! உன்னால்?

SCROLL FOR NEXT