Do you know where the emerald stone Murugan temple is? https://www.youtube.com
ஆன்மிகம்

மரகதக் கல் முருகப்பெருமான் அருளும் திருத்தலம் தெரியுமா?

ஆர்.ஜெயலட்சுமி

மேல்மருவத்தூருக்கு தெற்கே இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது நடுபழனி முருகப்பெருமான் திருக்கோயில். பொள்ளாச்சியை சேர்ந்த முத்துசாமி என்பவர் எழுபது ஆண்டுகளுக்கு முன்பு வட இந்திய யாத்திரையை முடித்துக்கொண்டு அச்சிறுப்பாக்கம் அருகே உள்ள பெரும்பேர் கண்டிகை என்ற தலத்திற்கு வந்தார். அங்கிருந்த மலை மீது சுமார் நான்கு ஆண்டுகள் முருகப்பெருமானை நோக்கி தவம் இருந்தார். அப்படி அவர் தவம் இருந்த காலத்தில் அவரது கனவில் குழந்தை வடிவத்தில் தோன்றிய முருகப்பெருமான், ‘பெருங்கரணையில் உள்ள மலையில் தனக்கு ஒரு கோயில் எழுப்ப வேண்டும்’ எனக் கேட்டுக்கொண்டார்.

அதன்படியே, பெருங்கரணை தலத்தில் உள்ள மலையை கண்டறிந்து அதன் உச்சியில் வேலாயுதத்தை நிறுவி வழிபாடு செய்யத் தொடங்கினார். செடிகள், பாறை கற்களை சரி செய்து அதன் பிறகு அங்கேயே முருகன் சிலையை வைத்து சிறிய கொட்டகை அமைத்து வழிபாட்டைத் தொடங்கினர். இதற்கு ஊர் மக்கள் பெரும் ஒத்துழைப்பு தந்தனர்.

ஒரு நாள் பெய்த பெருத்த மழையால் கீற்றுக் கொட்டகை விழுந்து விட, தனி ஆலயம் எழுப்ப தீர்மானித்து சிறிய ஆலயம் ஒன்றை எழுப்பினார். இந்த மலையை சீரமைக்க முத்துசாமி சித்தர் பெரும்பாடுபட்டுள்ளார். அருகில் உள்ள ஊர்களுக்கு காவடி எடுத்து ஆடி அவர்கள் தரும் அரிசி உள்ளிட்ட காணிக்கைகளைப் பெற்றார். அதனை கொண்டு மலையை சீரமைக்கும் பணியாட்களுக்கு சமைத்துத் தந்தார். பக்தர்கள் தரும் காணிக்கைகளை திருப்பணிக்கு பயன்படுத்தினார். எவரிடமும் கையேந்தி நன்கொடை கேட்டதில்லை. குறையோடு வருபவர்களுக்கு திருநீறு தந்து குணமாக்கும் வல்லமையும் முத்துசாமி சித்தருக்கு முருகன் திருவருளால் கிடைத்தது.

கோயில் தோற்றம்

இப்படி முத்துசாமி சித்தரின் 50 ஆண்டுகால உழைப்பில் உருவானதே நடுபழனி திருக்கோயில். இந்த சமயத்தில் காஞ்சி பெரியவர் ஒருமுறை இக்கோயிலுக்கு வருகை தந்தார். அவருக்கு இந்த ஆலயத்தில் உள்ள முருகப்பெருமான் பழனி பால தண்டாயுதபாணியாகவே காட்சி தர, இந்த தலத்தை அவர், ‘நடு பழனி’ என்று அழைத்தார். அதைத் தொடர்ந்து காஞ்சி பெரியவர் அக்கோயில் முருகப்பெருமான் மூலவர் சிலையை மரகத சிலையாக வடித்து புதிய தண்டாயுதபாணியாக பிரதிஷ்டை செய்து 1993ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

நடுபழனி மலை பசுமையான பெருங்கரணை கிராமத்தில் அமைந்துள்ளது. சுமார் 300 அடி உயரமுள்ள கனகமலையான நடுப்பழனி வடக்கில் 128 படிகள் கொண்டு மலை ஏற வசதியாக நேர்த்தியாக அமைக்கப்பட்டுள்ளது. மேற்கு புறம் வாகனங்கள் மலையேறும் சாலை வசதியும் இருக்கிறது. மலேசியாவின் பத்துமலை பகுதியில் உள்ள முருகப்பெருமான் சிலையை போலவே 45 அடி உயர முருகப்பெருமான் கம்பீரமாக மேற்கு நோக்கிக் காட்சி தருகிறார். இக்கோயில் உருவாகக் காரணமான முத்துசாமி சித்தரின் ஜீவ சமாதியும் மலை மீது உள்ளது. அவரது சமாதி, முன்மண்டபத்தோடு எழிலாக ஆலய வடிவில் அமைந்துள்ளது. சில படிகள் ஏறினால் நடுப்பழனி முருகன் ஆலயம் கிழக்கு முகமாகக் காட்சி தருகின்றது.

கருவறையில் நடுநாயகமாக மரகதக் கல்லால் ஆன தண்டாயுதபாணி கிழக்கு நோக்கிக் காட்சி தருகிறார். இவரின் திருவடிவம் பழனி மலையில் இருக்கும் பாலதண்டாயுதபாணி உருவத்தை நினைவுபடுத்துகிறது.

சேதமடைந்த மரப்பொருட்கள்... குப்பைகளாக உங்கள் வீட்டில் உள்ளதா? அச்சச்சோ தவறாச்சே...!

குரு நானக் அருளிய அற்புதமான நல் உரைகள்!

சிவகார்த்திகேயனின் தாத்தாக்கள் ஒருகாலத்தில் புகழ்பெற்ற இசைக் கலைஞர்களாம்!

கம்பவுன்டர்களை காணவே முடிவதில்லையே; யார் இவர்கள்? எங்கே போனார்கள்?

ஐயப்பன் தரிசனம் கார்த்திகை மாதத்தில் மட்டும்தானா?

SCROLL FOR NEXT