மணிமூர்த்தீஸ்வரம் உச்சிஷ்ட கணபதி ஆலயம் 
ஆன்மிகம்

ஆசியாவிலேயே மிகப்பெரிய விநாயகர் கோயில் எங்கிருக்கிறது தெரியுமா?

ரேவதி பாலு

லகம்  முழுவதும் சைவ, வைணவ ஆலயங்கள் எதுவாக இருந்தாலும் அங்கு விநாயகப்பெருமானுக்கு ஒரு சன்னிதி நிச்சயம் இருக்கும்.  முழுமுதற் கடவுளான விநாயகரை வழிபட்ட பின்பே கோயிலின் மூலவரை வழிபடுவது தொன்றுதொட்டு இருந்து வரும் வழக்கம். விநாயகருக்கென்றே அமைந்திருக்கும்  தனித்துவமான ஆலயங்களும் பல உள்ளன. அதில் திருநெல்வேலியில் தாமிரபரணி ஆற்றங்கரையில் மணீஸ்வரம் என்னும் இடத்தில் அமைந்துள்ள உச்சிஷ்ட கணபதி ஆலயம்தான் ஆசியாவிலேயே  பெரிய பிள்ளையார் கோயில். ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் திகழும் இந்த ஆலயத்தின் நீளம் சுமார் 80 மீட்டர், அகலம் 40 மீட்டர், மூன்று பிராகாரங்கள், எட்டு மண்டபங்கள் என்று பிரம்மாண்டமாகப் பரந்து விரிந்து காணப்படுகிறது. சுமார் 1000 ஆண்டுகள் பழைமையானது இந்த ஆலயம்.

முன்பெல்லாம் நெல்லை டவுனில் அமைந்திருக்கும் நெல்லையப்பர் கோயிலில் வழிபாடு நடக்கும்போது அங்குள்ள பிரம்மாண்ட மணி ஒலிக்கும். அதைக் கேட்டு இங்கும் மணியோசை எழுப்பி வழிபடும் வழக்கம் இருந்து வந்திருக்கிறது. அதனால் மூர்த்தீஸ்வரம் என்று அழைக்கப்பட்டு வந்த இந்த ஊர் பின்னர் மணிமூர்த்தீஸ்வரம் என்று அழைக்கப்படலாயிற்று.  விநாயகருக்கு மூர்த்தி விநாயகர் என்னும் பெயரும் ஏற்பட்டது.

விநாயகருக்குரிய முப்பத்திரண்டு வடிவங்களில் எட்டாவது திருவடிவம் உச்சிஷ்ட கணபதி. அவர் தனது தேவியான ஸ்ரீ வல்லபையை தன் இடது தொடையில் அமர வைத்தபடி இக்கோயிலில் காட்சியளிக்கிறார்.  இந்த உச்சிஷ்ட கணபதி திருக்கோலத்தில் கணபதிக்கு ஆறு கைகள் உள்ளன. இவற்றுள் ஐந்து கைகளில்  நீலோற்பலம், மாதுளம் பழம், வீணை, நெற்கதிர், அட்சமாலை என்பவற்றை ஏந்தியபடி அமர்ந்திருக்க, ஆறாவது கை தேவியை தழுவியிருக்கும். இங்கு லிங்க ரூபமாக சிவபெருமான், காந்திமதி அம்மன், 16 சோடஷ கணபதிகள், கன்னி மூல கணபதி, வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர், சொர்ண ஆகர்ஷண பைரவர் ஆகியோருக்கும் தனிச் சன்னிதிகள் உள்ளன.

இந்த ஆலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் 1, 2 மற்றும் 3 தேதிகளில் காலையில் சூரிய பகவான் தனது கிரணங்களால் விநாயகரைத் தழுவி வழிபாடு செய்யும் அற்புதத் திருக்கோல தரிசனம் நடைபெறும். அந்த நேரத்தில் தங்கம் போல் ஜொலிக்கும் கணபதியை தரிசித்து வழிபட சகல துன்பங்களும் நீங்கும் என்பது நம்பிக்கை.

புத்திர சந்தானத்திற்காக இக்கோயிலில் தேவியோடு அருளும் விநாயகப் பெருமானை தரிசனம் செய்பவர்களுக்கு நிச்சயம் புத்திரப் பேறு ஏற்படுகிறது என்று சொல்கிறார்கள். அது மட்டுமல்ல, விநாயகர் தனது தேவியுடன் அருள்பாலிப்பதால் இங்கு வந்து வேண்டிக் கொண்டால் கணவன் மனைவி ஒற்றுமை மேம்படும், திருமணத்தடைகள் நீங்கும், பிரிந்த தம்பதியர் ஒன்று சேருவர் என்றும் கூறப்படுகிறது.

இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தியையொட்டி பத்து நாட்கள் உத்ஸவம் நடைபெறும். இந்த நேரத்தில் உச்சிஷ்ட கணபதியை வணங்கி வழிபட்டால் சகல செல்வங்களும் சேரும், சகல விதமான நன்மைகளும் ஏற்படும் என்பது நம்பிக்கை.

முதிர் பெண்களின் மன அழுத்தம் போக்கும் எளிய வழிகள்!

புரட்டாசி முதல் சனிக்கிழமை பெருமாளுக்கு தளிகை செய்வது எப்படி?

வெறும் வயிற்றில் அத்திப்பழ தண்ணீர் குடிப்பதால் உண்டாகும் 10 நன்மைகள்!

உங்கள் குழந்தைகளுக்கும் இந்த 7 ரகசியங்களைக் கற்றுத் தரலாமே!  

திரைப்பட ஒளிப்பதிவில் மலைக்க வைத்த மந்திர வித்தகர் மாருதிராவ்!

SCROLL FOR NEXT