Avvaiyar Amman Temple 
ஆன்மிகம்

தமிழ் மூதாட்டி 'ஔவையார் அம்மன்' கோயில் எங்கிருக்கிறது தெரியுமா?

நான்சி மலர்

மிழையும் தமிழ் மூதாட்டி ஔவையாரையும் பிரித்துப் பார்க்க முடியாது. தமிழை வளர்ப்பதற்காக பல பாடல்களை இயற்றியவர் ஔவையார். அதியமானுக்காக நெல்லிக்கனியை வழங்கியவர். முருகப்பெருமான் இவரிடம் ‘சுட்டப் பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா?’ என்று விளையாடிய கதை உண்டு. அத்தகைய ஔவையாருக்கு கன்னியாகுமரி மாவட்டத்தில் மக்கள் கோயில் கட்டி வழிபட்டு வருகிறார்கள் என்று சொன்னால் நம்ப முடிகிறதா? அதைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.

ஔவையார் அம்மன் கோயில் சுமார் 500 ஆண்டுகள் பழைமை வாய்ந்ததாகும். இந்தக் கோவில் கருங்கற்களால் கட்டப்பட்டுள்ளது. இக்கோயில் ஆரல்வாய்மொழியை அடுத்துள்ள தாழக்குடி - பூதப்பாண்டி செல்லும் வழியில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் பழைய பெயர் 'நெல்லிமடம் ஔவையாரம்மன்' என்பதாகும்.

ஔவையார் அம்மன் கோயிலில் நடைபெறும் ஆடி பூஜை மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். ஆடி மாதத்தில் வரும் செவ்வாய்க்கிழமையன்று இக்கோயிலுக்கு பெண்கள் கூட்டம் அலைமோதும். ஔவையார் அம்மனுக்கு பெண்கள் விரதமிருந்து கொழுக்கட்டை படைத்து வழிபடுவது இங்கே பிரசித்திப் பெற்றதாகும். இக்கோயிலுக்கு தமிழ்நாட்டில் இருந்து மட்டுமில்லாமல், கேரளாவிலிருந்தும் பெண்கள் வந்து வழிபட்டுச் செல்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பச்சரிசி மாவு, சர்க்கரை, தேங்காய், ஏலக்காய் ஆகியவற்றை வைத்து கொழுக்கடை தயாரிக்கிறார்கள்.

குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் இக்கோயிலுக்கு வந்து கொழுக்கட்டை செய்து அம்மனுக்குப் படைத்தால், விரைவில் குழந்தை பிறக்கும் என்பது நம்பிக்கை. மேலும், திருமணத்தடை, குடும்பப் பிரச்னை, நினைத்த காரியம் நிறைவேறுதல் போன்றவற்றுக்காகவும் வேண்டிக்கொண்டு எண்ணற்ற பக்தர்கள் இக்கோயிலுக்கு வருகின்றனர்.

சுடலை மாடன் கதையில் வரும் வீரப்புலையனுக்கு குழந்தை இல்லாதபோது ஔவையாரம்மனை வேண்டியதால் குழந்தை பாக்கியம் கிட்டியதாகச் சொல்லப்படுகிறது. கன்னியாகுமரி சுற்று வட்டாரத்தில் இன்றும் குழந்தைகளுக்கு 'ஔவையார்' என்று பெயர் வைக்கும் வழக்கமுள்ளது.

மேலும், இக்கோயிலில் ஔவையார் அம்மன், அகத்தியர், சுடலை மாடன், முருகப்பெருமான், விநாயகர் ஆகியோர் பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். முருகப்பெருமான் ஔவையாரிடம் ‘சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா?’ என்று கேட்டு விளையாடிய இடம் இதுவென்றும் ஒருசிலரால் கூறப்படுகிறது.

இந்த நிகழ்விற்கு அடையாளமாக இக்கோயிலுக்கு அருகே குளமும், நாவல்பழ மரமும் இருக்கிறது. சற்று மேலே குன்றில் முருகப்பெருமான் அருள்பாலிப்பது, இந்த நிகழ்வை உணர்த்துவதாக உள்ளது. எனவே, இக்கோயிலுக்கு வாழ்வில் ஒருமுறையாவது சென்று வருவது சிறப்பாகும்.

நவம்பர் 26 - 75 வருடங்கள் நிறைவு செய்யும் இந்திய அரசியலமைப்பு தினம்!

Jeff Bezos-ஐ கோடீஸ்வரன் ஆக்கிய விதி என்ன தெரியுமா? 

முகத்தை மூடித் தூங்குபவரா நீங்கள்? அச்சச்சோ போச்சு!

குளிர்காலத்தில் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் உணவுகள்!

முகம் ஒரு ஓவியம் என்றால், உதடுகள் அதன் இதயம்!

SCROLL FOR NEXT