Do you know where there is a temple where only blessings grow? http://www.templeyatra.com
ஆன்மிகம்

புண்ணியங்கள் மட்டுமே வளரும் கோயில் எங்குள்ளது தெரியுமா?

ஆர்.ஜெயலட்சுமி

ருசமயம் மகாலட்சுமி தாயார், மகாவிஷ்ணுவிடம் கோபம் கொண்டு பிரிந்து சென்றாள். திருமகள் இல்லாததால் வைகுண்டம் விட்டு பூலோகம் வந்தார் மகாவிஷ்ணு. சந்தன மரக்காடுகள் நிறைந்த பகுதியில் சிவலிங்கம் ஒன்றைக் கண்டு அதற்கு பூஜை செய்து வழிபட்டார். இதையடுத்து ஈசன் மகாலட்சுமியை அழைத்து வரச் செய்து மகாவிஷ்ணுவுடன் சேர்த்து வைத்தார்.

ஸ்ரீ என்று அழைக்கப்படும் திருமகளை மகாவிஷ்ணு வாஞ்சையால் விரும்பிச் சேர்ந்த இடம் என்பதால் அந்தத் திருத்தலம் திருவாஞ்சியம் என்று பெயர் பெற்றது. கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்திருக்கும் கணவன், மனைவி இங்கு வந்து இறைவனை வழிபட்டால் ஒற்றுமை பலப்படும் என்பது நம்பிக்கை.

துவாபர யுகம் முடிந்து, கலி யுகம் தொடங்கியதும் சரஸ்வதி நதிக்கரையில் தவம் செய்து வந்த ஸர்வா என்ற முனிவருக்கு, ‘கலி யுகத்தில் தர்மம் அழிந்து விடுமோ’ என்ற கவலை வருத்தியது. அப்போது திருவாஞ்சியம் என்ற வார்த்தை அசரீரியாக ஒலித்தது. இதையடுத்து முனிவர் திருவாஞ்சியம் கோயிலை நோக்கி ஓடினார். அவரை கலி துரத்திக் கொண்டிருந்தது.

இதனால் முனிவர், ‘சிவாய நம, திருவாஞ்சியம் அபயம்’ என்று கூறியபடியே சென்றார். பக்தனின் குரல் கேட்டு வாஞ்சிநாதசுவாமி அங்கு தோன்றி, முனிவரை துரத்தி வந்த கலியை திருவாஞ்சியத்தின் சற்று தொலைவிலேயே தடுத்து நிறுத்தினார்.

கோயில் பிராகாரம்

ஈசன் கலியை தடுத்து நிறுத்திய இடம் தற்போது கலிமங்கலம் என்று வழங்கப்படுகிறது. கலி யுகத்தில் நமக்கு ஏற்படும் சகல தோஷங்களையும் கிரக பீடைகளையும் களையும் திருத்தலம் திருவாஞ்சியம் ஆகும். காசியில் வழங்கப்படுவது போல் திருவாஞ்சியத்திலும் காசிக் கயிறு எனும் கருப்பு கயிறு வழங்கப்படுகிறது.

காசியில் பாவமும் புண்ணியமும் சேர்ந்தே வளர்கின்றன. அதனால் நம் பாவங்களுக்கு காசியில் பைரவர் தண்டனை வழங்குகிறார். ஆனால், திருவாஞ்சியத்தில் புண்ணியம் மட்டுமே வளர்கிறது. அதனால் பைரவரின் தண்டனை இங்கு இல்லை. இத்தல பைரவர் தண்டத்தைக் கீழே வைத்துவிட்டு தியான நிலையில் யோக பைரவராக மேற்கு நோக்கி எழுந்தருளி இருக்கிறார். அவருடன் நாய் வாகனமும் இல்லை. இவரை ஆசன பைரவர் என்று அழைக்கிறார்கள். திருவாஞ்சியத்தில் பைரவர் தவமிருந்து பொன்வண்டு வடிவில் ஈசனை வழிபட்டதாக தல புராணம் கூறுகிறது.

சந்தன மரத்தை தல விருட்சமாகக் கொண்ட திருவாஞ்சியம் கோயில், கிழக்கு நோக்கி ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் கம்பீரமாகக் காட்சியளிக்கிறது. இந்தத் தலத்திற்கு வரும் பக்தர்கள் முதலில் குப்த கங்கையில் நீராடி அருகே உள்ள கங்கை கரை விநாயகரை வழிபட வேண்டும். பின்பு தனிச் சன்னிதியில் உள்ள எமதர்மராஜனை வழிபட்டு பின்னர் அனுக்கிரக விநாயகர், பாலமுருகனை வழிபட வேண்டும். அதன் பிறகே மூலவர் வாஞ்சிநாத சுவாமியையும் மங்களாம்பிகையையும் தரிசனம் செய்ய வேண்டும். இத்தலம் கும்பகோணத்திலிருந்து நன்னிலம் செல்லும் சாலையில் அச்சுதமங்கலத்தில் இருந்து 1 கி.மீ. தொலைவில் உள்ளது.

மூங்கிலில் ஒளிந்திருக்கும் அற்புதங்கள்..!

ஊரின் சமவெளிகளில் நடத்தப்படும் கர்நாடக மாநில நாட்டுப்புறக் கலை 'பயலாட்டம்'

ஜப்பான் நாட்டுக் கதை - மனம் திருந்திய மன்னர்

இந்த மாதம் மீன்கள் உண்பதை தவிர்க்கவும்... எந்த மாதம்? ஏன்?

'என்னால் முடியும்' தம்பி! உன்னால்?

SCROLL FOR NEXT