இந்தியாவில் பல அதிசயமான மற்றும் அழகான கோயில்களைப் பற்றி பார்த்திருப்போம். ஆனால், சாபம் பெற்ற ஒரு கோயிலைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? ஆமாம், இந்தக் கோயிலுக்கு இரவில் சென்றால், மனிதர்கள் கல்லாக மாறிவிடுவார்களாம். இப்படி மக்களிடையே ஒரு நம்பிக்கை இருப்பதால், யாரும் இந்தக் கோயிலுக்கு இரவானால் செல்வதில்லை. இது உண்மையா? பொய்யா? என்பது இன்னொரு பக்கம் இருக்கட்டும். ஆனால், இதுவரை யாரும் இதை முயற்சித்துப் பார்க்க முன்வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலம், பர்மர் மாவட்டத்தில் அமைந்துள்ளதுதான் கிராடு கோயில். கிராடு, தார் பாலைவனத்தில் இருக்கிறது. இங்குள்ள சிதைந்த ஐந்து கோயில்களில், சிவன் கோயிலான சோமேஸ்வரர் கோயிலே நன்றாக பராமரிக்கப்பட்டு வருகிறது. இக்கோயில் 12ம் நூற்றாண்டு சாலுக்கியர்களால் கட்டப்பட்டது.
கிராடு கோயிலில் உள்ள சுவர்களும், தூண்களும் அழகிய சிற்ப வேலைப்பாடுகளைக் கொண்டது. இக்கோயிலை ராஜஸ்தானின், ‘கஜுரஹோ' என்று அழைக்கிறார்கள். இக்கோயிலின் கட்டடக்கலை, மரு - குஜராத்தி கலையை போன்று இருக்கிறது.
பரமர் குலத்தைச் சேர்ந்த அரசன் சோமேஸ்வரன் போருக்குப் பிறகு தனது நாடு இழந்த செல்வ செழிப்பை மீட்டெடுப்பதற்காக துறவி ஒருவரை தனது நாட்டுக்கு அழைத்தார். அந்தத் துறவி தன்னுடன் வந்த சிஷ்யனை அந்நாட்டில் விட்டு விட்டு செல்கிறார். பிறகு நாடும் செல்வச் செழிப்பு பெறுகிறது. ஆனால், அந்த சிஷ்யரை மக்கள் கவனிக்க மறந்து விடுகின்றனர். அதனால் சிஷ்யர் நோய்வாய்ப்படுகிறார். அந்த ஊரில் இருந்த பானை செய்பவர் ஒருவரின் மனைவி மட்டுமே அந்த சிஷ்யரை கவனித்துக்கொள்கிறார்.
திரும்பி அந்த நாட்டிற்கு சிஷ்யரை காண வந்த துறவி அங்கு நடந்ததை கேட்டு மிகவும் கோபம் அடைகிறார். இதனால் அவர் அந்த நாட்டையே கல்லாக போகும்படி சபித்துவிடுகிறார். ஆனால், பானை செய்பவரின் மனைவியை மட்டும் இரவிற்குள் அந்த ஊரை விட்டு சென்றுவிடச் சொல்கிறார். அங்கிருந்து செல்லும்போது திரும்பிப் பார்க்காமல் செல்லச் சொல்லி எச்சரித்து அனுப்புகிறார். ஆனால், அந்தப் பெண்ணோ ஆர்வக்கோளாறில் கடைசியாக ஊரை ஒருமுறை திரும்பிப் பார்க்க, அவளும் கல்லாக மாறுகிறாள். இப்பொழுதும் அந்த பெண்ணின் சிலை அந்த ஊரில் இருப்பதாகக் கூறப்படுகிறது. கோயிலில் இருந்து சற்று தள்ளி அந்தப் பெண் சிலை இருப்பதாகக் கூறப்படுகிறது.
இக்கோயில் சுற்றுலா பயணிகளுக்கு, காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்திருக்கும். இங்கே செல்வதற்கு ரூபாய் 50 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதிசயிக்கும் கலைநயம், அமைதியான இடம், வியத்தகு வடிவமைப்புகள் இந்த கோயிலின் அழகைக் கூட்டினாலும், இரவானால் இக்கோயிலில் இருக்கக் கூடாது என்று இங்கிருக்கும் மக்கள் கூறுகிறார்கள். அப்படி யாரேனும் தங்கினால் அடுத்த நாள் கல்லாக அவர்கள் மாறிவிடுவார்கள் என்று நம்பப்படுகிறது. இதை நிரூபிக்க எந்த ஒரு ஆதாரமும் இல்லையென்றாலும், இதுவரை இங்கே தங்கி யாருமே முயற்சித்துப் பார்த்ததில்லை. சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு மக்கள் நடமாட்டமின்றி இக்கோயில் பாலைவனமாய் வெறிச்சோடி போய் கிடக்கிறது.
கண்டிப்பாக இக்கோயில் சாகச விரும்பிகளின் ஆர்வத்திற்கு தீனி போடுவதற்கு சரியான இடமாக இருக்கும் என்று தோன்றுகிறது. எனவே, இக்கோயிலுக்கு சென்று திரில்லிங்கான உணர்வை அனுபவித்து விட்டு வருவது புதுவிதமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.