நம் தமிழ்நாட்டில் உள்ள ஒரு கோயிலில் 3000 ஆண்டுகள் பழைமையான இலந்தை மரம் இன்று வரை உயிர்ப்புடன் இருக்கிறது என்று சொன்னால் ஆச்சரியமாக உள்ளது அல்லவா? அதைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
தமிழ்நாட்டில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள உத்தரகோசமங்கை திருத்தலத்தில்தான் இந்த அதிசய மரம் உள்ளது. உலகிலேயே முதன்முதலில் தோன்றிய கோயில் என்ற பெருமை மிக்கது உத்தரகோசமங்கை புனிதத் தலம். சிவபெருமானின் அடி முடியை எப்படி அறிய முடியாதோ, அப்படித்தான் இந்த கோயிலின் சிறப்பும், பெருமையும் என்று சொல்லப்படுகிறது. இந்தக் கோயிலில்தான் முதன் முதலில் ‘ஆருத்ரா தரிசனம்’ கொண்டாடப்பட்டது.
இந்தத் தலத்தின் மூலவர் மங்களநாதர் சுயம்புவாக இலந்தை மரத்தடியில் தோன்றியவராவார். இக்கோயில் ஆருத்ரா தரிசனத்திற்கு மிகவும் புகழ் பெற்ற கோயிலாகும். பார்வதி தேவி காண்பதற்காகவே இறைவன் நடனமாடிய தலம். இக்கோயிலில் சிவபெருமானை ‘மங்களநாதர்’ என்றும் பார்வதி தேவியை ‘மங்களாம்பிகை’ என்றும் பக்தர்கள் அழைக்கிறார்கள்.
இந்தக் கோயிலின் முதல் அதிசயம் மரகத நடராஜர் சிலை என்று சொன்னால். இரண்டாவது அதிசயம் இந்த இலந்தை மரம்தான். இந்த இலந்தை மரம்தான் மாணிக்க வாசகர் அமர நிழல் தந்தது. இந்த மரத்திற்கு அடியில்தான் மாணிக்கவாசகருக்கு இறைவன் வித்தகன் வேடத்தைக் காட்டி அருளினார்.
இந்த மரத்திற்கு அடியில்தான் வியாசரும், பராசரரும் தவம் இருந்தார்கள். இந்த இலந்தை மரம் பல தலைமுறைகளை கடந்தது. பல மாமுனிவர்கள் தனது அடியில் தாங்கியும், பல சிவ பக்தர்களுக்கு நிழல் தந்தும் தானும் மரணமின்றி இத்தனை காலமும் வாழ்கிறது. பதஞ்சலி, வியாக்ரபாத முனிவர்கள் கூட இந்த மரத்தின் அடியிலே தவம் செய்ததாகக் கூறப்படுகிறது.
இந்த இலந்தை மரத்தடியில் மாணிக்கவாசகர் அமர்ந்திருப்பதாக நம்பிக்கை நிலவுகிறது. இந்த இலந்தை மரத்தைத் தொட்டு வணங்குவது அந்த மாணிக்கவாசாகரையே தொட்டு வணங்குவதற்கு சமமாகும். இந்தக் கோயிலின் தல விருட்சமே இந்த இலந்தை மரம்தான் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று வரை இக்கோயிலில் கனிகளையும், நிழலையும் பக்தர்களுக்கு தந்து இம்மரம் சாகா வரம் பெற்று நிற்கிறது என்றே சொல்ல வேண்டும்.