Vaseeswarar Temple 
ஆன்மிகம்

திருப்பதி ஏழுமலையானே தனது கடன் பிரச்னை நீங்க வழிபட்ட திருத்தலம் எது தெரியுமா?

நான்சி மலர்

வ்வளவுதான் சம்பாதித்தாலும் இன்றைய காலக்கட்டத்தில் காசு, பணம் நம்மிடம் தங்குவதில்லை. பணம் எந்த வேகத்தில் நம் கைக்கு வருகிறதோ, அதே வேகத்தில் நம் கையை விட்டு சென்று விடுகிறது. இதற்கு திருப்பதி ஏழுமலையான் மட்டும் என்ன விதிவிலக்கா? ஏழுமலையான் தனது திருமணத்துக்காக வாங்கிய கடன் தொல்லையால் தவித்தபோது, அந்தப் பிரச்னை தீர வழிபட்ட ஒரு திருக்கோயிலைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.

திருவள்ளூர் மாவட்டம், திருப்பாசூர்தான் அந்த சக்தி வாய்ந்த திருத்தலமாகும். இக்கோயிலை சோழ மன்னன் கரிகால பெருவளத்தான் கட்டியதாகக் கூறப்படுகிறது. இச்சிவாலயத்தின் மூலவர் வாசீஸ்வரர், அம்பாள் தங்காதலி. திருப்பாசூர் வாசீஸ்வரர் கோயில் அப்பர், சுந்தரர், சம்பந்தர் ஆகிய மூவராலும் பாடல் பெற்ற தலமாகும்.

முன்னொரு காலத்தில் இந்தக் கோயில் அமையப்பெற்றிருக்கும் இடத்தை சுற்றி குரும்பன் என்றொரு சிற்றரசன் ஆட்சிபுரிந்து வந்தான். அவன் ஒரு நாள் திடீரென்று கரிகாலனுக்கு கப்பம் கட்ட மறுத்து விட்டான். இதனால் கோபம் கொண்ட கரிகாலன் குரும்பனுடம் போர் புரிய தன்னுடைய படைவீரர்களை அனுப்பினான்.

குரும்பனோ தன்னுடைய குலதெய்வமான காளியை உதவிக்கு கூப்பிடுகிறான். காளி தேவியும் குரும்பனுக்கு உதவி புரிகிறாள். கரிகாலனின் வீரர்களை வானிலிருந்து அம்பெய்தி கொல்கிறாள் காளி தேவி. இதையறிந்த கரிகாலன் தனது படையைத் திரட்டி கொண்டு அங்கே விரைந்தான். ஒரு சிற்றரசனுக்கு தனது பெரும் படையை தோற்கடிக்கும் ஆற்றல் எப்படி வந்தது என்று நினைத்து சிவபெருமானை வேண்டினான்.

அப்போது ஒரு அசரீரி ஒலித்தது. ‘சிற்றரசனுக்கு அவனது குலதெய்வமான காளி உதவி புரிகிறாள். நான் சொன்னதும் நீ போர் புரியத் தொடங்கு’ என்று சிவபெருமான் கூறினார். பின்பு இரண்டு தங்க சங்கிலியை நந்தியிடம் கொடுத்து காளி தேவியின் கால்களில் கட்டிவிட்டு வரும்படி அனுப்பினார் சிவபெருமான். நந்தியும் காளி தேவியிடம் சண்டையிட்டு வெற்றி பெற்று காளியின் கால்களில் சங்கிலியை கட்டி விட்டு வந்தது. சிவபெருமானும், ‘இப்போது போரைத் தொடங்கு’ என்று கூற, குரும்பனை தோற்கடித்து வெற்றி பெற்றான் கரிகாலன்.

பிறகு அங்கே இருக்கும் மூங்கில் காடுகளில் சிவனின் லிங்கத்தை தேடிக்கொண்டிருந்தான். அங்கிருந்த காட்டுவாசிகளிடம் லிங்கத்தைப் பற்றி கேட்டான். அவர்களோ, ‘லிங்கத்தை பற்றி எங்களுக்குத் தெரியாது. ஆனால், இங்கிருக்கும் பசு மூங்கில் காட்டுக்குள் சென்று வர மூங்கிலும் விலகி அதற்கு வழிவிடும்’ என்று கூறினர்.

அதைத் தொடர்ந்து மூங்கில் வெட்டும் அரிவாள் வாசியால் வெட்டிக்கொண்டேயிருந்தான் மன்னன். அப்போது திடீரென்று ஓரிடத்தில் இரத்தம் பீறிட்டு அடித்தது. அங்கிருந்த சிவலிங்கத்தின் மீது அரிவாள் பட்டு இரத்தம் வழிந்தது. இதனால் கரிகாலன் மனமுருகி சிவனிடம் மன்னிப்பு கேட்க, இரத்தம் வருவது நின்றுவிட்டது. அந்த இடத்திலேயே சிவபெருமானுக்கு ஒரு கோயிலை கட்டினான் கரிகாலன். இந்த சிவபெருமான், வாசி என்னும் அரிவாளால் வெட்டப்பட்டதால்,  வாசீஸ்வரர் என்ற திருப்பெயரால் அழைக்கப்படுகிறார்.

ஒரு சமயம் திருப்பதி வேங்கடாஜலபதி தனது திருமணத்திற்காக குபேரனிடம் வாங்கிய கடனை அடைக்க முடியாமல் கஷ்டப்பட்டார். இதை சரி செய்வதற்காக சிவபெருமானை வழிபட்டார் பெருமாள். அவரது வேண்டுதலை ஏற்ற ஈசன், பெருமாளிடம், ‘திருமணத்தின்போது 16ம் பெற்று பெருவாழ்வு வாழ்க’ என்று வாழ்த்துவார்கள். அந்த 16 என்பது 16 செல்வங்களைக் குறிக்கும். அசுரர்கள் இருவர் பிரம்மாவின் வேதத்தை திருடிச்சென்று கடலுக்கு அடியில் வைத்ததால் படைக்கும் தொழில் நின்றுபோனது. இதனால் பெருமாள் மச்ச அவதாரம் எடுத்து வேதத்தை மீட்டு வந்தார். அப்போது அவருக்கு தோஷம் பிடித்ததால் அவரிடமிருந்த 11 செல்வங்கள் போய்விட்டன.

பெருமாள் தாம் இழந்த செல்வங்களை திரும்பப் பெற திருப்பாசூரில் உள்ள வலம்புரி விநாயகர் சபையிலுள்ள விநாயகருக்கு 11 தேங்காய் மாலை, 11 வாழைப்பழ மாலை, 11 அருகம்புல் மாலை, 11 நெய் தீபம் ஏற்றி வேண்டிக்கொண்டதால் மூன்று மாதங்களில் இழந்த செல்வங்கள் அனைத்தையும் திரும்பப் பெற்றார். இதேபோல் யார் ஒருவர் இத்தலத்தில் வழிபாடு மேற்கொள்கிறார்களோ அவர்களது கடன் பிரச்னை தீரும் என்று கூறி அருள்பாலிக்கிறார். மேலும், இதனால் கடனை அடைக்கவும் வழி கிடைக்கும் என்று கூறினார். அதுபோலவே  பெருமாள் செய்யவே கடனை அடைக்க வழி கிடைத்ததாம். பக்தர்களும் இங்குள்ள விநாயகரை வணங்கினால் கடன் தொல்லை நீங்கும், வியாபாரம் பெருகும், செல்வ செழிப்பு கிட்டும் என்று நம்புகிறார்கள்.

முகத்துக்கு நீராவி பிடிங்க… கரும்புள்ளிகள் எல்லாம் காணாமல் போகும்! 

பார்ப்பதற்கும் கவனிப்பதற்கும் உள்ள வித்தியாசத்தை உணர்த்திய துரோணாச்சாரியார்!

வயதாகும் வேகத்தைக் குறைக்க விபரீத முடிவெடுத்த தொழிலதிபர்!

நடிகர் முரளி அம்மாவுக்கு இப்படி ஒரு மரணமா? கனவில் கூட யாருக்கும் இப்படி நடக்கக்கூடாதப்பா!

மழைக்காலத்தில் உடலை நீரேற்றத்துடன் வைத்துக்கொள்ள அருந்த வேண்டிய 4 பானங்கள்!

SCROLL FOR NEXT