Do you know why Brahma Muhurtham time is special? https://makkalosai.com
ஆன்மிகம்

பிரம்ம முகூர்த்த நேரம் ஏன் விசேஷம் தெரியுமா?

கே.எஸ்.கிருஷ்ணவேனி

பிரம்ம முகூர்த்தம் என்பது அதிகாலை 4 மணி முதல் 6.30 மணி வரை உள்ள நேரத்தைக் குறிப்பதாகும். திருமணம், கிரகப்பிரவேசம் போன்ற அனைத்து சுப நிகழ்ச்சிகளுக்கும் உகந்த நேரமாக இந்த பிரம்ம முகூர்த்தம் கருதப்படுகிறது. இந்த நேரத்திற்கு, ‘சரஸ்வதி யாமம்’ எனப் பெயர்.

உலக உயிர்களைப் படைக்கக்கூடிய பிரம்ம தேவனின் மனைவி சரஸ்வதி தேவி கண் விழித்துச் செயல்படும் நேரமாக இது கருதப்படுகிறது. மேலும், இறை சிந்தனையை மனதில் நிறுத்தி நம் மனச்சிக்கல்களை நீக்க உதவும் நேரமாக இது கூறப்படுகிறது.

சூரியன் உதிப்பதற்கு 48 நிமிடங்களுக்கு முன்பு பிரம்ம முகூர்த்த நேரம் ஆரம்பிக்கிறது‌. இந்த நேரத்தில் கண் விழித்து குளித்து நினைத்த காரியங்களை தொடங்க, அவை வெற்றியில் முடியும்.

பிரம்மதேவன் சிவபெருமானை இந்த நேரத்தில்தான் வழிபட்டதாகவும், அதன் பலனாய் பல வரங்களைப் பெற்றதாகவும் அதனாலேயே இதற்கு, ‘பிரம்ம முகூர்த்தம்’ எனப் பெயர் வந்ததாகவும் புராணங்கள் கூறுகின்றன.

இந்த பிரம்ம முகூர்த்த நேரத்தில் தினமும் பூஜை அறையில் விளக்கேற்றி வழிபட, சகல செல்வங்களும் பெறலாம். அதுமட்டுமின்றி, இந்த நேரத்தில் தியானம் செய்வது, கல்வி கற்பது போன்றவற்றால் மனம் ஒருநிலைப்படும், ஞாபக சக்தி அதிகரிக்கும்.

இனி, எந்தெந்த கிழமைகளில் பிரம்ம முகூர்த்த வழிபாடுகளை செய்ய, என்ன பலன் கிடைக்கும் என்பதைப் பார்ப்போம்.

ஞாயிற்றுக்கிழமை: இன்றைய பிரம்ம முகூர்த்த நேரத்தில் விளக்கேற்றி சத்திய நாராயண பூஜை செய்ய பித்ரு தோஷம் நீங்கும்.

திங்கட்கிழமை: இந்த பிரம்ம முகூர்த்த நேரத்தில் விளக்கேற்றி அம்பாளை வழிபட, பயம் நீங்கும், ஞானம் பெருகும்.

செவ்வாய்கிழமை: இன்றைய பிரம்ம முகூர்த்தத்தில் விளக்கேற்றி முருகனை வழிபட, வியாதிகள் தீரும், கண் திருஷ்டி விலகும்.

புதன்கிழமை: இன்று பிரம்ம முகூர்த்த நேரத்தில் விளக்கேற்றி பெருமாளுக்கு துளசி சாத்தி விஷ்ணு சஹஸ்ரநாமம் பாராயணம் செய்ய, கல்வியில் சிறந்து விளங்கலாம், சகல கலைகளும் விருத்தியாகும்.

வியாழக்கிழமை: இன்று அதிகாலை பிரம்ம முகூர்த்தத்தில் விளக்கேற்றி சித்தர்கள் அல்லது மகான்களை வழிபட, சகல செல்வங்களும் கிடைக்கும்.

வெள்ளிக்கிழமை: இன்றைய பிரம்ம முகூர்த்த வேளையில் விளக்கேற்றி மகாலட்சுமியை வழிபட, செல்வ வரவு அதிகரிக்கும். கடன் தொல்லைகள் இராது. வாழ்க்கை வசதிகள் மேம்படும்.

சனிக்கிழமை: இன்று நல்லெண்ணெய் கொண்டு பிரம்ம முகூர்த்தத்தில் விளக்கேற்றி சிவபெருமானை வழிபட, சனி தோஷம் நீங்கும்.

இப்படி ஒவ்வொரு கிழமையிலும் செய்யப்படும் பிரம்ம முகூர்த்த வழிபாட்டிற்கு ஒரு பலன் உண்டு என்று சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது.

மன அமைதி தரும் பாத்ரூம் - ஆய்வு கூறும் செய்தி! தவறுதலாக நினைக்க வேண்டாம்...

WhatsApp-ல் திருமண அழைப்பிதழ் வந்தால் தெரியாமல் கூட திறந்துடாதீங்க! 

ஆண்களின் Sperm Count அதிகரிக்க சாப்பிட வேண்டிய உணவுகள்!

சோயா பனீர் பிரியாணி செய்யலாம் வாங்க! 

காஃபின் கலந்திருக்கும் காபி தெரியும்; ‘டீகாஃப்’ என்றால் என்ன தெரியுமா?

SCROLL FOR NEXT