Gajendra Varadhar who blessed the elephant Picasa
ஆன்மிகம்

யானைக்கு வரமளித்த கஜேந்திர வரதர்!

ஆர்.ஜெயலட்சுமி

திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூர் அருகே உள்ளது அத்தாள நல்லூர் கஜேந்திர வரதப் பெருமாள் திருக்கோயில். இக்கோயில், கஜேந்திரன் என்ற யானைக்கு மகாவிஷ்ணு வரம் அளித்த கோயிலாகத் திகழ்கிறது.

இந்திரத்துய்மன் என்ற மன்னன் அகஸ்தியரின் சாபத்தால் யானை வடிவம் பெற்றான். அந்த யானை கஜேந்திரன் என்ற பெயருடன் யானைகளுக்கு எல்லாம் தலைமை தாங்கியது. இந்த கஜேந்திரன் பொதிகை மலைக்குச் சென்று அங்கு தீர்த்தத்தில் நீராடி சூரியனை வணங்கி, குற்றாலத்திற்கு சென்று சிவமது கங்கையில் நீராடி திருக்குற்றாலநாதரை வணங்கிய பின் மகாவிஷ்ணுவை வணங்குவதற்காக அத்தாள நல்லூருக்கு வந்தது.

அத்தாள நல்லூரில் உள்ள தாமரை குளத்தில் நீராடி தாமரை பூக்களை பறித்து திருமாலுக்கு சூட்ட எண்ணியது. தாமரை பறிக்கும்போது நாரத முனிவரின் சாபத்தால் முதலை வடிவம் கொண்ட ஊர்த்துவன் என்கிற கந்தர்வன் கஜேந்திர யானையின் காலை பிடித்துக் கொண்டான். யானை எவ்வளவோ முயன்றும் முதலை தனது பிடியை விடவில்லை. யானை துதிக்கையில் தாமரையை வைத்து, ‘ஆதி மூலமே’ என்று அழைத்தது.

அடுத்த நொடி மகாவிஷ்ணு கருட வாகனத்தில் வந்து தனது சக்கராயுதத்தால் முதலையை வதைத்து யானைக்கு அருள்பாலித்தார். இதன் காரணமாக இந்தத் தலம் யானைக்கு அருள்செய்த தலம், யானையைக் காத்த தலம் என்று அழைக்கப்படுகிறது.

தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ள இந்தத் திருத்தலம், பரிகாரத் தலமும் கூட. இந்தத் திருக்கோயிலின் மேற்கே தாமிரபரணி தெற்கு வடக்காகப் பாய்கிறது. இதனால் இந்தத் தீர்த்தக்கட்டம் கங்கைக்கு நிகரானது. நின்ற கோலத்தில் காட்சி தரும் இக்கோயில் பெருமாளை வழிபடுவதால் திருப்பதி ஏழுமலையானை வழிபட்ட பலன் கிடைக்கும்.

கோயிலின் பின்பகுதியில் தாமிரபரணி நதி உள்ளதால் ஒரு தூணில் நரசிம்ம அவதாரம் நிகழ்ந்ததாகக் கருதப்பட்டு அந்தத் தூணையே நரசிம்மராகக் கருதி  வழிபடப்படுகிறது. இந்தத் தலத்தின் தீர்த்தம் விஷ்ணு பாத தீர்த்தமாகும். தல விருட்சம் நெல்லி மரமாகும். இறைவன் அருள்மிகு கஜேந்திர வரதர், இறைவி அருள்தரும் ஸ்ரீதேவி, பூதேவி ஆவர்.

வீரவநல்லூரில் இருந்து முக்கூடல் செல்லும் சாலையில் அமைந்துள்ள இந்தக் கோயிலுக்கு முக்கூடலில் இருந்தும் பஸ் வசதி உள்ளது.

முள்ளங்கி ஜூஸின் ஆரோக்கிய பலன் தெரிஞ்சா குடிக்காம விடவே மாட்டீங்க!

அன்றாட சிறு சிறு உடல் பிரச்னைகளைப் போக்கும் எளிய உணவு மருத்துவம்!

இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்தால் இந்தியர்களுக்கு என்ன நன்மை? வாங்க தெரிஞ்சுக்கலாம்! 

உணவில் ருசிக்காக சேர்க்கப்படும் தக்காளியில் இத்தனை சத்துக்களா?

உலகிலேயே மிக பெரிய ரூபிக்ஸ் க்யூப் (Rubik’s Cube) எங்கு உள்ளது, அதன் எடை என்ன தெரியுமா?

SCROLL FOR NEXT