மகா கணபதி 
ஆன்மிகம்

கணபதியின் பன்னிரு அவதாரங்களும் நோக்கமும்!

கலைமதி சிவகுரு

லக சிருஷ்டியின் ஆதியில் தோன்றிய வஸ்துக்களில், ‘பிருதிவி’ எனப்படும் மண்ணும், கடலும் முக்கியமானவை. விநாயகரே ஆதிதேவராக இருப்பதால் இவரை பிருதிவியால் (களி மண்ணால்) உருவாக்கி  விநாயகர் சதுர்த்தி அன்று பூஜிக்கிறோம். மண்ணில் பிறந்தவை மண்ணிலேயே மறையும். ஆனால், ஆத்மாவுக்கு அழிவு என்பது இல்லை. இந்தத் தத்துவத்தை உணர்த்தவே விநாயக சதுர்த்தி அன்று பூஜித்த பிள்ளையாரின் பிம்பத்தை  தண்ணீரில் விடுகின்றோம். விநாயகரே விண்ணுக்கும், மண்ணுக்கும் தலைவராக இருக்கின்றார்.

இந்து புராணங்களின்படி விநாயகர் சிவபெருமான் மற்றும் பார்வதி தேவியின் மூத்த மகனாக அறியப்பட்டவர். விநாயகப்பெருமான் 12 அவதாரங்கள் எடுத்ததாக விநாயகப் புராணம் கூறுகிறது. விநாயகரை வணங்கும்போது இவரது 12 பெயர்களைக் கூறி வழிபட்டால் கணபதியின் 12 அவதாரங்களின் பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை. கணபதியின் பன்னிரு அவதாரங்களையும் அவற்றின் நோக்கங்களையும் இந்தப் பதிவில் அறிவோம்.

1. வக்ரதுண்ட கணபதி: இவர் உலகம் ஒவ்வொரு முறையும் அழியும்போது தோன்றி மீண்டும் உலகத்தைப் படைப்பதற்கான வழிமுறைகளை பெருமாள், பிரம்மா, ருத்திரன் (சிவ வடிவம்) ஆகியோருக்கு அருளுவார். மட்சராசுரன் என்ற பொறாமையின் அடையாளமான அரக்கனை வதம் செய்தவர். வக்ரதுண்டா என்பதற்கு பொறாமையின் அழிவு சக்தியை அழித்து வெல்லும் கடவுள் எனப் பொருள்.

2. சிந்தாமணி கணபதி: கபிலர் என்ற முனிவரிடம் இருந்த சிந்தாமணி என்ற அற்புதப் பொருளை கனகராஜன் என்பவன் திருடி சென்றான். உயிர் காக்கும் இந்த சிந்தாமணியை அவனிடமிருந்து கணபதி மீட்டுத் தந்து அருளியதால் அவருக்கு இந்தப் பெயர்.

3. கஜானனான கணபதி: பார்வதி, பரமேஸ்வரனுக்கு மகனாக ஆவணி சுக்லபட்ச சதுர்த்தியன்று அவதரித்தார் கணபதி. பின்னர் கஜமுகாசுரனை வதைத்தார். யானை முகத்தை உடையவர் என்பதால் கஜானனன் என இவருக்குப் பெயரானது.

ஸ்ரீ விநாயகப் பெருமான்

4. விக்ன கணபதி: பொன்னிற மேனியராக சங்கு, கரும்பு வில், புஷ்ப பாணம், கோடரி, பாசம், சக்கரம், கொம்பு, மாலை, பூங்கொத்து, பாணம் முதலியவற்றை தமது திருக்கரங்களில் ஏந்தி இந்த கணபதி விளங்குகிறார். காலரூபன் என்ற அரக்கனை வதைப்பதற்காக பிறந்தவர். விக்னங்கள் எனப்படும் கஷ்டங்களை நீக்குவதால் இவர், ‘விக்ன விநாயகர்’ என்று போற்றப்படுகிறார்.

5. மயூரேச கணபதி: பிரம்மாவிடமிருந்து வேதங்களை கமலாசுரன் என்ற அசுரன் திருடிச் சென்றபோது மயில் வாகனத்தில் சென்று அவனை வென்று வேதங்களை மீட்டதால் இந்த கணபதிக்கு இந்தத் திருநாமம் ஏற்பட்டது.

6. தூமகேது கணபதி: புகை வடிவில் வந்த அசுரனை வதைத்து, ‘தூமகேது’ என்ற பெயர் பெற்றார் இந்த விநாயகர். புகையாலேயே புகை வடிவினனான அரக்கனை இவர் கொன்றார்.

7. பாலசந்திரர் கணபதி: ‘அனலாசுரன்’ என்பவன் செய்த கொடுமைகளை தடுத்து, தேவர்கள் குறையை போக்குவதற்கு சிறிய வடிவம் எடுத்து அசுரனை விழுங்கி விட்டார். இதனால் வயிற்றினுள் ஏற்பட்ட வெப்பத்தைப் போக்க குளிர்ச்சி பொருந்திய சந்திரனது கலைகளை விநாயகரின் தலையில் தேவர்கள் வைத்தனர். அதனால் இந்த கணபதிக்கு ‘பாலசந்திரர்’ என்ற பெயர் ஏற்பட்டது.

8. வல்லப கணபதி: மரீசி முனிவருக்கு யமுனை ஆற்றில் ஒரு தாமரை மலரில் கிடைத்த சக்தியின் வடிவமே வல்லபை. இவளை ஒரு தேவியாக விநாயகப் பெருமான் ஏற்றதால் வல்லப கணபதி எனப் பெயர் பெற்றார்.

9. மகோற்கட கணபதி: காசிராஜன் என்ற புகழ் பெற்ற அரசனுக்கு நராந்தகன், தேவாந்தன் என்ற கொடியவர்கள் துன்பம் செய்து வந்தனர். இதனால் உலகத்தில் தர்மம் அழிந்தது. அவர்களை நாசம் செய்ய அவதரித்தவர்தான் மகோற்கட கணபதி.

10. தும்பி கணபதி: துராசதன் என்ற அசுரனை வென்றதால் விநாயகப் பெருமான் இந்தத் திருநாமத்தைப் பெற்றார்.

11. கணேசர்: தேவர்களை பலி என்ற அசுரன் துன்புறுத்தியபோது 5 முகத்துடன் தோன்றி அவனை அழித்தவர் கணேசர்.

12. கணாதிபதி: விநாயகரை சிவபெருமான் தனது கணங்களின் தலைவராக நியமித்தார். இதனால் கணாதிபதி என்ற திருப்பெயர் இவருக்குக் கிடைத்தது.

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

இவர்களைத் தெரியும்; இந்தத் தகவல்கள் தெரியுமா?

SCROLL FOR NEXT