மத்திய பிரதேசம், இந்தூரில் அருளும் கஜ்ரான விநாயகர் மிகவும் பிரபலமானவர். சுயம்பு மூர்த்தமான இவர், பக்தர்களின் விருப்பங்களை விரைவில் நிறைவேற்றுவதாகக் கூறப்படுகிறது. இக்கோயிலில் ஒவ்வொரு புதன்கிழமை தோறும் விநாயகருக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. விநாயகருக்கு நிவேதனமாக லட்டுகளை படைத்து தங்கள் விருப்பங்களை தெரிவிக்கும் பக்தர்கள் அநேகம்.
இக்கோயிலில் வினோதமான ஒரு பழக்கம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. விநாயகருக்கு பின்புறம் உள்ள சுவரில் ஸ்வஸ்திக் சின்னத்தை தலைகீழாக வரைந்து தங்கள் விருப்பங்கள் தெரிவிக்கிறார்கள். அந்த விருப்பங்கள் நிறைவேறியதும் மீண்டும் வந்து ஸ்வஸ்திக் சின்னத்தை சரியாக வரைகிறார்கள். இப்படி செய்வதன் மூலம் தங்கள் விருப்பங்கள் விரைவில் நிறைவேறுவதாக இப்பகுதி மக்களிடையே ஒரு நம்பிக்கை நிலவுகிறது.
இக்கோயில் 1735ல் ஹோல்கர் வம்சத்தின் ராணி அஹில்யா பாயால் கட்டப்பட்டது. ஔரங்கசீப் ஆட்சிக் காலத்தில் இந்து கோயில்களை இடிக்கும்போது இக்கோயில் விநாயகர் சிலை மறைத்து வைக்கப்பட்டு முகலாயப் போருக்குப் பின்னர் வெளிக்கொணரப்பட்டது.
ஆரம்ப காலங்களில் சிறு குடிசையில் அமைக்கப்பட்டிருந்த இக்கோயில், நாளடைவில் பெரிய அளவில் கட்டப்பட்டு மிகச் சிறப்பாக வழிபாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
இக்கோயில் விநாயகரின் கண்கள் வைரக் கற்களால் அமைக்கப்பட்டு இருக்கிறது. வேண்டும் வேண்டுதல்கள் வேண்டியபடி கிடைக்க அருள்புரியும் இந்த விநாயகர் கோயில் இந்தூர் ரயில் நிலையத்திலிருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.