கோமதி சக்கரம் என்பது சங்கு போன்று உருண்டையாக இருக்கக்கூடிய இயற்கையாகவே ஆற்றில் இருந்து கிடைக்கக்கூடிய பொருளாகும். கோமதி சக்கரத்தை வடநாடுகளில் அதிகமாகப் பயன்படுத்துகிறார்கள். கோமதி சக்கரம் இருக்கும் இடத்தில் நிச்சயமாக மகாலட்சுமி வாசம் செய்வார் என்று சொல்லப்படுகிறது. இது குஜராத் மாநிலத்தில் துவாரகாவில் கோமதி ஆற்றின் கரையோரங்களில் இருந்து கிடைக்கக் கூடியதாகும். இதைப் பயன்படுத்துவதால் தடைகளைப் போக்கும், கடன் தொல்லை நீங்கும், பணவரவு அதிகரிக்கும், கெட்ட சக்திகள் விலகும் என்று நம்பப்படுகிறது. இந்த கோமதி சக்கரத்தை கிருஷ்ணரின் சுதர்சன சக்கரத்திற்கு இணையாக ஒப்பிட்டுக் கூறுகிறார்கள்.
ராகு - கேது தோஷம், நாகதோஷம் இருந்தால் கோமதி சக்கரத்தை அணியலாம். மகாலட்சுமியின் அடையாளமாகக் கருதப்படும் கோமதி சக்கரம் வீட்டில் நல்ல பாசிட்டிவ் எனர்ஜியை உருவாக்கும், எடுத்த காரியங்களில் வெற்றியடையச் செய்யும், குழந்தைப்பேறு கிட்டும், மனநிம்மதியை கொடுக்கும்.
கோமதி சக்கரம் பார்ப்பதற்கு வெள்ளையாக மேலே சுருள் வடிவம் போல் அமைந்திருக்கும். இது அதிக எடை கொண்டாத இல்லாமல், வழுவழுப்பான தன்மையை கொண்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. கோமதி சக்கரம் இயற்கையாகவே பணத்தை ஈர்க்கக்கூடியது என்பதால் வீட்டில் பணப்பெட்டி அல்லது பூஜையறையில் வைக்கலாம். இதை 11 அல்லது 21 என்ற கணக்கில் வைப்பது சிறந்ததாகும். கோமதி சக்கரம் வைத்திருப்பது தொழில் ரீதியாக வெற்றியை தரும்.
கோமதி சக்கரத்தை வாங்கி பூஜையறையில் அப்படியே வைத்து விடக் கூடாது. அதற்கான அபிஷேகங்களை வாரத்திற்கு ஒருமுறை செய்ய வேண்டியது அவசியமாகும். கோமதி சக்கரத்திற்கு வெள்ளி, செவ்வாய்க்கிழமைகளில் பால் அபிஷேகம் செய்து பின்பு நீரில் சுத்தம் செய்து மஞ்சள், குங்குமம் பொட்டு வைத்து தீப தூபம் காட்டி வழிபட வேண்டும்.
தொழில் வளர்ச்சியடைய ஐந்து கோமதி சக்கரத்தை வைத்து வழிபட வேண்டும். குடும்பப் பிரச்னை, சண்டை சச்சரவு நீங்க ஆறு கோமதி சக்கரத்தை பயன்படுத்த வேண்டும். திருமணத்தடை, குழந்தை பாக்கியம் கிடைக்க மூன்று கோமதி சக்கரத்தை வழிபட வேண்டும். வீட்டு வாசலில் ஏழு கோமதி சக்கரத்தை கட்டுவது எதிர்மறை சக்தியை வீட்டில் வரவிடாமல் தடுக்கும்.
கோமதி சக்கரத்தை மோதிரமாக செய்து விரல்களில் போட்டுக்கொள்வது மிகவும் நல்லதாகும். கோமதி சக்கரத்தை சிலர் பர்சில் 3, 5, 7 என்று வைத்துக்கொள்வது வழக்கம். இது தொடங்கிய காரியத்தை நிறைவேற்றித் தரும் என்ற நம்பிக்கை உண்டு.