நம் பெரும்பாலானோர் வீடுகளில் தவறாமல் இருக்கும் ஜீவன்களில் ஒன்று பல்லி. ஏனோ அந்தக் காலத்தில் இருந்து இந்தக் காலம் வரை பல்லிகள் மீதான சகுன பயம் மட்டும் இன்னும் நம்மிடம் தெளியவில்லை.
பல்லி விழுந்தாலும் அல்லது சத்தம் போட்டாலும் பல்வேறு பலன்கள் உள்ளதாக நம்புகின்றோம். இதற்கு கடவுளுடனும் கலாசாரத்துடனும் ஆதிகாலத்தில் இருந்தே பல்லிகளுக்கு இருக்கும் தொடர்பும் காரணமாக இருக்கலாம். உதாரணமாக, பல்லிகள் மகாலட்சுமியின் அம்சமாகக் கருதப்படுவதால் சிலர் வருமானம் பெருக பூஜை அறையில் வெள்ளியில் பல்லி செய்து வைத்து வணங்குவதும் உண்டு.
சமயங்களில் பல்லிகள் சொடுக்கி விட்டது போன்ற ஒருவித சப்தம் போடும். இந்த சத்தத்தை கவுளி சத்தம் என்றும் கூறுவார்கள். பல்லிகள் சப்தம் போடுவதற்கான பொதுவான பலன்களை திசைகள் வாரியாக ஜோதிடத்தில் ஆய்வு செய்து பஞ்சாங்கத்தில் குறிப்பிட்டுள்ளனர்.
நல்ல காரியத்திற்குச் செல்லும்போதோ அல்லது சுப காரியம் பற்றி நினைக்கும்போதே பல்லி சத்தம் போட்டால் அந்தக் காரியம் கண்டிப்பாக வெற்றி பெறும் என்ற நம்பிக்கை பலருக்கும் உள்ளது. சில நேரங்களில் அமைதியாக இருக்கும். இரவு நேரத்தில் ஒருவித சத்தத்தை எழுப்பியபடி அச்சம் தரும். நிறைய பேருக்கு இரவு நேரத்தில் பல்லி சப்தம் போட்டால் ஏதேனும் தவறாக நடக்குமா? எனும் அச்சம் உள்ளது. உண்மையில் இது தேவையற்ற அச்சம் மட்டுமே என்கின்றனர் பெரியவர்கள்.
கிராமக் கோயில்கள் சிலவற்றில் நாம் மனதில் நினைத்த காரியத்தைச் செய்யலாமா? வேண்டாமா? என்ற குழப்பம் தீர இறைவனை வேண்டி கோயில் வாசலில் உட்கார்ந்து பதில் வேண்டி காத்திருக்கையில் இந்த கவுளி எந்தப் பக்கமிருந்து கத்துகிறது என்று பார்த்து ஜோதிடம் ரீதியாக தீர்மானிக்கும் வழக்கம் உள்ளது. இறைவன் குடியிருக்கும் கோயிலில் மட்டுமே பல்லிகள் இறைவனின் உத்தரவு கூறும் சகுனம் சொல்லும் பிராணியாகும்.
ஆனால், வீடுகளில் நம்முடன் வசிக்கும் பல்லிகள் சப்தம் தருவதற்கு தனது இணையை அழைத்தல் அல்லது இரையைக் கண்ட உற்சாகம் ஆகியவையும் காரணமாக இருக்கலாம். பல்லி ஒரு சாதாரண பிராணி. நமது உரையாடல் போல் இதன் சப்தத்துக்கான அர்த்தங்களையும் இவை கொண்டிருக்கலாம்.
சிலர் பல்லியின் தோற்றம் பிடிக்காமல் கொல்ல நினைப்பார்கள். பொதுவாகவே, எந்த உயிரினத்தையும் கொல்வது பாவம். நம் வீட்டில் அடைக்கலமாகி நமக்கு தீங்கு தரும் பூச்சிகளை உண்டு நன்மை செய்யும் பல்லியைக் கொல்வது பெரும் பாவம் என்று கூறப்படுகிறது. பல்லியைக் கொன்றால் அந்த தோஷம் வாழ்நாள் முழுவதும் நீடிக்கும் என்கிறது பல்லி அறிவியல். எனவே, பல்லியைக் கொல்லக் கூடாது என்பது ஐதீகம்.
சில வேளைகளில் பல்லி பிடிமானம் தவறி தனக்கு நேரும் ஆபத்தை அறியாமல் நமது உணவில் விழுந்து விடுவதுண்டு. அப்படி விழுந்து விட்டால் அதன் உடல் மீது இருக்கும் தீமை பயக்கும் நுண்ணுயிர்கள் உணவில் பரவிப் பெருகி உண்பவருக்கு ஃபுட் பாய்சன் ஏற்பட்டு உடல் நலன் பாதிக்க சில சமயம் வாய்ப்பு உண்டு என்பதால் உணவு வகைகளை மூடி வைத்து எச்சரிக்கையாக இருப்பது நல்லது.
பல்லிகள் இரவு, பகல் எந்த நேரத்தில் சப்தமிட்டாலும் தேவையற்ற அச்சத்தை தவிர்த்து நேர்மறை எண்ணங்களோடு வாழ்ந்தால் அனைத்தும் நன்மையே தரும்.