மே மாதம் 12ம் தேதி நமக்கெல்லாம் உய்ய வழிக்காட்டி கொண்டிருக்கும் ஸ்வாமி இராமானுஜரின் 1007வது திரு நட்சத்திரத்தை கொண்டாடப் போகிறோம். ஆதிசேஷனின் அம்சமாக சித்திரை மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் பூதபுரி என்றழைக்கப்படும் ஸ்ரீபெரும்பூதூரில் திருஅவதாரம் செய்தவர் இளையாழ்வார் என்றே இனிமையாய் அழைக்கப்பட்ட ஸ்வாமி இராமானுஜர்.
ஸ்வாமி இராமானுஜரின் திரு உருவச் சிலையை எங்கே பார்த்தாலும் நம் மெய் ஒரு நிமிடம் அப்படியே சிலிர்த்துதான் போகும். அவரது கருணை ததும்பும் அந்த இரு விழிகளும், புன்னகையை மட்டுமே சிந்தி நம் துயர் துடைத்து நமக்குள்ளும் புன்னகையை விதைத்திடும் அவரது திருவாய் அழகும்…. இப்படி எம்பெருமானார் என்றே போற்றப்படும் அந்த ஜகதாச்சார்யனின் வடிவழகை என்னவென்று சொல்வது?
‘கற்பகமே விழி கருணை பொழிந்திடு கமலக்கண்ணழகும்,
காரிசுதன் கழல்சூடிய முடியும் கன நற்சிகையழகும்
எப்பொழுதும் எதிராசன் வடிவழகு என் இதயத்துளதால்
இல்லை எனக்கெதிர் இல்லை எனக்கெதிர் இல்லை எனக்கெதிரே’
என்று எம்பார் உருகி உருகி எம்பெருமானாரான ஸ்வாமி இராமானுஜர் மீது அருளிய பாசுரம் இது. கருணையே உருவமாக, இன்றளவும் தன்னை நினைப்பவர்களது துயர்களை அறவே நீக்கி கொண்டிருப்பவர் ஸ்வாமி இராமானுஜர்.
இவ்வுலக மக்களுக்கு நல்வழி காட்ட வேண்டும் என்ற ஒரே நோக்கோடு இவ்வுலகத்திற்கு ஸ்வாமி ராமானுஜரை திருமாலே பரிசாகக் கொடுத்தார் என்றால் அது மிகையாகாது.
இராமானுஜர் ஸ்ரீ பெரும்பூதூர் என்றழைக்கப்படும் பூதபுரியில் திரு அவதாரம் செய்ய வேண்டும் என்பதே பகவானின் சங்கல்பம். இந்த சங்கல்பம் இறைவனுக்கு எப்போது தோன்றியது என்றால் ஸ்வாமி இராமானுஜர் திருவவதாரம் செய்வதற்கு பல பல வருடங்கள் முன்பே தோன்றியது.
ஒரு சமயம் சிவபெருமானின் ருத்ர கணங்கள் சிவபெருமானை பார்த்து, ஏதோ தெரியாமல் பரிகாசம் செய்தபோது, கோபம் கொண்ட சிவபெருமான் அந்த பூத கணங்களை கயிலாயத்தை விட்டு பூலோகத்திற்கு செல்லும்படி சாபம் கொடுக்க நேர்ந்தது. பூலோகத்திற்கு வந்த பூத கணங்கள், சிவபெருமானை நோக்கி வேண்டி நின்று சிவபெருமானே நாங்கள் தெரியாமல் தவறு செய்து விட்டோம். எங்களை மன்னித்து விடுங்கள் என்று மன்றாடி நிற்க, சிவபெருமான், “நாராயணனை நோக்கி தவம் செய்யுங்கள். நாராயணனின் திருவருளால் உங்களுக்கு நன்மை கிடைக்கும்” என்று பணித்தார்.
அவ்வண்ணமே அந்த பூத கணங்கள் கேசவனை துதிக்க, பூத கணங்களின் தூய்மையான பக்தியை மெச்சி, ஆதிகேசவனாய் திருமால் தோன்றிய இடமே பூதபுரி எனும் ஸ்ரீபெரும்பூதூர். தாங்கள் பெற்ற சாபத்திற்கும் தாங்கள் செய்த பாவத்திற்கும் என்ன விமோசனம்? எப்படி? எப்போது விமோசனம் கிடைக்கும் என அந்த பூத கணங்கள் பெருமாளை பார்த்து கேட்டனர். உடனே பெருமாள், ஆதிசேஷனை அழைத்து ஒரு பெரிய குளத்தை உருவாக்கி அந்த குளத்தில், நீராட சொல்லி, பூத கணங்களைப் பணிக்க, அந்தக் குளத்தில் நீராடி தங்களது பாவங்களை நீக்கி கொண்டார்களாம் பூத கணங்கள்.
அன்று ஆதிசேஷனால் (அனந்தனால்) உருவாக்கப்பட்ட குளமே அனந்த சரஸ் என்ற பெயரோடு இன்றும் ஸ்ரீபெரும்பூதூரில் நம்மை வரவேற்கிறது. அன்று பூத கணங்கள் எல்லாம் ஆதிகேசவனை கேட்டு கொண்டதற்கிணங்க, ஆதிகேசவன் அர்ச்சா மூர்த்தியாய் நின்ற இடமே பூதபுரி. அந்த ஆதிகேசவனுக்கு பூத கணங்கள் எல்லாம் சேர்த்து எழுப்பிய கோயிலில்தான் ஆதிகேசவ பெருமாள் அன்று முதல் இன்று வரை சேவை சாதித்து கொண்டிருக்கிறார்.
இந்த ஆதிகேசவ பெருமாளின் ஆசியோடு பிறந்தவரே ஸ்வாமி இராமானுஜர். ஆதிகேசவப் பெருமாள் கோயிலில், ஸ்வாமி இராமானுஜரும் தானுகந்த திருமேனியராய், தனிச் சன்னிதியில் தன்னை நாடி வரும் பக்தர்களின் வாழ்வில் ஆனந்தத்தை மட்டுமே பரிசாகத் தந்து கொண்டிருக்கும் ஒரு இடமே ஸ்ரீபெரும்பூதூர் எனும் பூதபுரி. ‘ஸ்ரீமதே ராமானுஜாய நம:’ என்றே தியானிப்போம். ஸ்வாமி இராமானுஜரின் அருளால் நிச்சயம் அனைத்து நன்மையும் நம்மை தானாகவே நாடி வரும் அதிசயத்தைப் பார்ப்போம்.