- தா. சரவணா
மன அழுத்தத்தைக் குறைப்பதற்கு பெரும்பாலோர் உடனடியாக தேர்வு செய்யும் முதல் விஷயம், மது. இது உடலுக்கும் கேடு, குடும்பத்துக்கும் கேடு. ஆனாலும் அது அளிக்கும் 3 மணி நேர போதைக்காக பலரும் இதை நாடிச் செல்கின்றனர். ஆனால், அது முழுக்க, முழுக்க தவறானது ஆகும். இந்த மிகத் தவறான பழக்கத்துக்கு ஆளாகாமல், மனக்கவலையையும் மன அழுத்தத்தையும் போக்க யோகா, தியானம் பக்கம் கவனத்தைச் செலுத்தினால், உடலும், உள்ளமும் மேம்படும்.
வேலுார் மாவட்டம் வேலுார் அடுத்த செங்காநத்தம் என்ற அழகிய மலைக்கிராமத்தில் ஜெயராமன் குருஜி என்பவர் தான் கற்றுத் தேர்ந்த வாசி யோகா என்பதை மக்களுக்கு கற்றுத் தந்து வருகிறார். இதற்காக அங்கேயே கைலாஷ் தபோவனம் என்ற அழகிய தியான மண்டபத்தை, எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் கட்டி முடித்து, வாரம்தோறும் ஞாயிற்றுக் கிழமை ஒரு நாள் மட்டும் பயிற்சி அளித்து வருகிறார். உள்ளூர் மக்கள் மட்டுமின்றி, வெளி மாவட்ட, மாநில மக்களும் அதிகம் வந்து வாசி யோகா பயிற்சி பெற்றுச் செல்கின்றனர். அதன் பின்னர் அது குறித்த சந்தேகம் எழும்போது, குருஜியிடம் போனில் சந்தேகம் கேட்டு தெளிவடைகின்றனர். உள்ளூர் மக்களாக இருக்கும் பட்சத்தில் நேரடியாகச் சென்று தங்களின் சந்தேகங்கைள நிவர்த்தி செய்துகொள்கின்றனர்.
இந்தத் தியான மண்டபம் உள்ளே நுழைந்ததும், மனதுக்கும், கண்ணுக்கும் குளிர்ச்சியாக மரங்களும், பூச் செடிகளும் நம்மை வரவேற்கின்றன. அந்த இடத்தில் காணப்படும் அமைதியான சூழலே, நம் மனதை புத்துணர்ச்சியாக்குகிறது. கைலாஷ் தபோவனம் ஜெயராமன் குருஜி சொல்வது என்ன? “நம்மை பற்றி நாம் முதலில் தெரிந்துகொள்ள வேண்டும். அதைத்தான் வாசி யோகம் மூலமாக கற்றுத்தருகிறோம். உடல் ஆரோக்கியம் பெறுகிறது. ஆன்மீக ரீதியாக உடல் சுத்தம் செய்யப்படுகிறது. அதேபோல தியானம் செய்யும்போது, நம்மைப் பற்றித் தெரிந்து கொள்கிறோம். தியானம், யோகா செய்வதால், நம் உடல் இலகுவாகும். இதை நான் மகாதேவ மலையைச் சேர்ந்த ஏகாம்பர சாமி என்பவரிடம் கற்றுக்கொண்டேன். அவர்தான் எனக்கு குரு நாதர். இதைக் கற்றுக் கொண்ட பின்னர் எனக்குள் பல மாற்றங்கள் ஏற்பட்டன. அதை மக்களுக்கு இலவசமாக கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கில், இதைக் கற்றுத் தருகிறேன். ஆஸ்பத்திரி, மருந்து, மாத்திரை என ஓடுவதற்குப் பதிலாக, மக்கள் இது போன்ற தியானம், யோகா ஆகியவற்றைக் கற்றுக்கொண்டால், நம் உடலும் மனமும் திடமாகி விடும். நம் மனம் என்ற கோயிலை திறக்கும் மந்திர சாவிகளாக யோகா, தியானம் ஆகியவை உள்ளன” என்கிறார் குருஜி.