ராமநாதபுரம் அருகே உத்தரகோசமங்கையில் 3 ஆயிரத்து 100 ஆண்டுகள் பழைமையான அருள்மிகு மங்களேஸ்வரி அம்மன் உடனுறை மங்களநாதர் திருக்கோயில் உள்ளது. இந்த சிவன் கோயில், ‘ஆதி சிதம்பரம்’ என அழைக்கப்படுகிறது. இங்குள்ள ஒற்றை பச்சை நிற மரகதக் கல்லால் ஆன நடராஜருக்கு ஆண்டுக்கு ஒருமுறை நடக்கக்கூடிய சந்தனம் காப்பு மற்றும் ஆருத்ரா தரிசனம் உலகப் புகழ்பெற்றது. இக்கோயிலுக்கு நாள்தோறும் சுற்றுவட்டார மக்கள் மட்டுமின்றி, தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வெளி மாநிலங்களைச் சேர்ந்த ஏராளமான ஆன்மிக பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
புராணமும், புராதனமும் பின்னிப்பிணைந்த அற்புதமான இக்கோயிலில் பல அதிசயங்களும் நிறைந்து காணப்படுகின்றன. அந்த வகையில், பல நூற்றாண்டுகளாக வற்றாமல் இருக்கிறது, இக்கோயில் பகுதியில் அமைந்துள்ள ஆதிகங்கை என்ற அக்னி தீர்த்த தெப்பக்குளம். சுமார் 20 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இக்கோயிலுக்கு பல்வேறு காலக்கட்டங்களில் மன்னர்கள் திருப்பணிகள் செய்துள்ளனர். திருவிளையாடல் புராணத்தில் வரும், வலைவீசும் படலத்தில் சாபத்தால் மீனவப் பெண்ணாக இருந்த பார்வதி தேவியை சிவபெருமான் வலை வீசி மீன் (திமிங்கலம்) பிடித்து, மனதில் புகுந்து ஆட்கொண்ட நிகழ்வு நடந்த திருத்தலம் இதுவென வரலாற்று ஆய்வுகளில் கூறப்படுகிறது.
அந்த வகையில், இங்கு கடல் இருந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன. இவற்றின் எச்சமாக மழை தண்ணீருடன், கடல் தண்ணீர் நிறைந்த தெப்பக்குளம் இன்றும் இங்குள்ளது. பொதுவாக, கோயில் தெப்பக்குளங்களில் நல்ல தண்ணீர் இருப்பது வழக்கம். ஆனால் இங்கு கடலில் உள்ள உப்புத் தன்மையுடன் கூடிய உப்புத் தண்ணீரே உள்ளது. மழை பெய்து குளம் பெருகினாலும் உப்பு தன்மையுடனேயே இக்குள இருக்கிறது. இந்தத் தெப்பக்குளம் ஆதிகங்கை என்றழைக்கப்பட்டுள்ளது.
இங்குள்ள தெப்பக்குளத்து கரையில் அமைந்துள்ள 3,100 ஆண்டு பழைமையான இலந்தை மரத்தடியில் சமயக் குரவர்கள் நால்வரில் ஒருவரான திருவாசகத்தை இயற்றிய மாணிக்கவாசகர் உள்ளிட்ட 1000 முனிவர்கள் தவம் இருந்தனர். அப்போது குளத்தில் அக்னி பிழம்பாக சிவபெருமான் தோன்றியதாகவும், அதில் மாணிக்கவாசகரைத் தவிர்த்து மற்ற 999 முனிவர்களும் தீயில் சேர்ந்து, சிவபெருமானுடன் முக்தியடைந்ததால் ஆதிகங்கை, அக்னி தீர்த்தமாக மாறியதாக தல புராணம் கூறுகிறது.
இந்தத் தெப்பக்குளம் ராமேஸ்வரம், காசிக்கு நிகரான புனிதமான தீர்த்தமாக கருதப்படுகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் அவ்வப்போது பருவமழை பொய்த்து போய் வறட்சி ஏற்படுவது வழக்கம். சில ஆண்டுகள் தொடர் வறட்சியும் ஏற்பட்டது. இத்தகைய சூழ்நிலையில் தண்ணீர் வற்றி அளவு குறைந்து காணப்படும். ஆனால் ஒருமுறை கூட இக்குளத்து தண்ணீர் முழுமையாக வற்றியது கிடையாது என்கின்றனர். இந்தத் தெப்பக்குளத்தில் வாழக்கூடிய மீன்கள், நல்ல தண்ணீர் மற்றும் கடலில் வாழும் தன்மை கொண்டதாக இருப்பது ஆச்சரித்தைத் தருகிறது.
பாண்டியர் கால கட்டடக்கலை: இக்கோயில் தெப்பக்குளம் 4 ஏக்கரில் அமைந்துள்ளது. வாயிலில் சிற்பங்களுடன் கூடிய மண்டபம் உள்ளது. 16 பாறை படிகளால் அமைக்கப்பட்டு 40 அடி ஆழம் கொண்ட இந்தத் தெப்பக்குளம் 230 கன அடி கொள்ளளவைக் கொண்டது. பெரும்பாலும் தெப்பக்குளங்களின் தரைப்பகுதி மண் பரப்பில் மட்டமாக இருப்பது வழக்கம். ஆனால், இந்தத் தெப்பக்குளம் வற்றி விடக்கூடாது என்பதற்காக கிணறு போன்று இயற்கையாகவே தண்ணீர் ஊற்றுகள் அமைக்கப்பட்டுள்ளன. சிறந்த கட்டடக் கலைக்கு உதாரணமாக இது விளங்குகிறது. ஊற்றுகளை சுற்றி கபாறைகள் போடப்பட்டு, மீன்களின் இருப்பிட வசதிக்காக வட்ட வடிவிலான சிறிய பள்ளங்கள் ஆயிரக்கணக்கில் அமைக்கப்பட்டுள்ளன. சிறப்பு வாய்ந்த இந்தத் தெப்பக்குளம் பாண்டியர் கால கட்டடக்கலைக்கு எடுத்துக்காட்டாக விளக்குகிறது.