குருவாயூரப்பன் 
ஆன்மிகம்

பரசுராம க்ஷேத்திரத்தில் பகவான் ஸ்ரீ உன்னி கிருஷ்ணன்!

மாலதி சந்திரசேகரன்

கேரள மாநிலம், திருச்சூர் மாவட்டத்தில் அமைந்திருக்கும் ஸ்ரீ குருவாயூரப்பன் கோயிலைப் பற்றி எல்லோருமே அறிந்திருப்போம். இங்கு வழிபடப்படும் அர்ச்சாவதார மூர்த்தியானவர், பாதாள அஞ்சனம் என்னும் சிறப்புக் கலவையால் வடிவமைக்கப்பட்டவராவார். குழந்தை கிருஷ்ணனாக (பாலகிருஷ்ணன்), சங்கு, சக்கரம், கௌமோதகி, தாமரைப் புஷ்பம் ஆகியவற்றைத் தாங்கி நான்கு திருக்கரங்களுடன் பக்தர்களுக்கு அருளாசி வழங்குகிறார்.

குருவாயூர் க்ஷேத்திரத்தில் இருக்கும் இந்தச் சிலை ஸ்ரீ மகாவிஷ்ணுவால் வணங்கப்பட்டு வந்த சிலை. அதாவது மகாவிஷ்ணு தன்னைத்தானே வணங்கிக் கொண்டது போல் அறிகிறோம். சரி, இந்த க்ஷேத்திரம் எப்படி இங்கு அமைந்தது? இந்தச் சிலை இந்த க்ஷேத்திரத்திற்கு எப்படி வந்தது என்பதற்கு ஒரு பின்னணி புராணக் கதையும் உண்டு அதை என்னவென்று பார்ப்போம்.

முன்னொரு காலத்தில், பூலோகத்தில், சுதபா என்கிற பெயரில் கிருஷ்ண பக்தர் ஒருவர் வாழ்ந்து வந்தார். சதாசர்வ காலமும் கிருஷ்ணன் நாமத்தையே ஜபித்துக் கொண்டிருந்தார். எத்தனையோ செல்வங்கள் அவருக்கு இருந்தாலும், குழந்தை செல்வம் மட்டும் இல்லாமல்போனதால், மிகுந்த துக்கம் அவரை வாட்டி வதைத்தது. அவரும், அவர் மனைவியும் தங்களுக்கு ஒரு குழந்தை செல்வம் வேண்டுமென்று மகாவிஷ்ணுவை வேண்டி நின்றனர்.

தனது பக்தனுக்கு குறை எதுவும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் அக்கறை கொண்ட ஸ்ரீ மகாவிஷ்ணு பிரம்மாவை அழைத்து, அவரிடம் தான் வணங்கி வந்த கிருஷ்ணன் சிலையை கொடுத்து, "இதை பூலோகத்தில் இருக்கும் என் பக்தனிடம் சேர்த்து விடு.  அவனிடம் நான் முக்கிய மூன்று அவதாரங்களை எடுக்கப்போகிறேன். எல்லாவற்றிலும் சுதபாவும்  அவன் மனைவியும்தான் எனக்கு தந்தை தாய். அவர்களுக்கு நான் மகனாகப் பிறப்பேன் என்று சொல்" என்று கூறி அனுப்பினார். பிரம்மாவும் அவர் கூறியபடியே செய்தார்.

பிரம்மா கூறியபடி ஸ்ரீ மகாவிஷ்ணு கொடுத்த சிலையை வைத்து தினசரி பூஜித்து வந்தார்கள் அந்த பெற்றோர். நாளடைவில் சுதபாவின் மனைவி பிரஷ்ணி கருவுற்று, பிரஷ்ணிகர்பன் என்கிற ஒரு ஆண் மகவைப் பெற்றெடுத்தாள். கிருஷ்ணரின் இந்த முதல் அவதாரம் எதற்காக என்றால்,  பிரம்மச்சரியத்தின் முக்கியத்துவத்தையும், பின்பற்றவேண்டிய வழிமுறைகளையும் உலகிற்கு எடுத்துரைப்பதற்காக எடுத்த அவதாரமாகும். அடுத்த பிறவியில், இரண்டாவதாக காஷ்யபருக்கும், அதிதிக்கும் வாமனனாக அவதாரம் செய்தார். அடுத்த பிறவியில் மூன்றாவதாக வசுதேவருக்கும் தேவகிக்கும் கிருஷ்ணனாக அவதாரம் செய்தார்.

குருவாயூர் கோயில்

ஸ்ரீ கிருஷ்ணர் பூலோகத்தில் அவதாரம் செய்த நோக்கம் முடிவடையும் தருணத்தில், உத்தவரை அழைத்து, எல்லா அவதாரங்களிலும் பகவானே வழிபட்டு வந்த அந்தச் சிலையை அவரிடம் கொடுத்து, "நான் வைகுண்டம் ஏகுகிறேன். விரைவில் கலியுகம் தொடங்கப்போகிறது.  மக்கள் அனைவரும் மிகவும் அவதிக்கு உள்ளாவார்கள். பல துன்பங்களுக்கு இரையாவார்கள். அதனால் இந்தச் சிலையை மக்கள் வழிபாட்டிற்காக  நல்லபடியாக பத்திரமாக பாதுகாப்பாக ஓரிடத்தில் சேர்த்துவிடு" என்று கூறிச் சென்றார்.

உத்தவரும் பகவான் எல்லா பிறவிகளிலும் பூஜித்து வந்த அந்த சிலையை துவாரகாவில் பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தார். திடீரென்று உண்டான வெள்ளப்பெருக்கால் பிரதிஷ்டை செய்த சிலையானது வெள்ளத்தில் தத்தளித்து மிதந்து வந்தது. அதைக் கண்ட குரு பகவான்,  தன்னுடைய முதன்மை சிஷ்யனான வாயு பகவானின் உதவியுடன் அதை எடுத்து பிரதிஷ்டை செய்ய சரியான ஸ்தலத்தை தேடிக் கொண்டு வரும்பொழுது பாலக்காட்டில் பரசுராமரை சந்தித்தார்.

பரசுராமர் அச்சிலையைப் பெற்றுக் கொண்டு இயற்கை சூழல் உள்ள நல்ல ஒரு இடத்தை தேடிக்கொண்டு போகும்பொழுது,  ஒரு இடத்தில் ஏதோ ஒரு சக்தி அவரை தடுத்து நிறுத்துவது போல் உணர்ந்தார். அந்த இடத்தில்தான் சிலையை பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்கிற எண்ணம் அவருக்குள் ஆழமாக இருந்தது. அப்பொழுது அருகில் ருத்ர தீர்த்தத்தில் பல காலங்களாக தவம் மேற்கொண்டு வந்த சிவபெருமான், பார்வதி தேவியுடன் அவர்கள் மூவருக்கும் காட்சி கொடுத்தார். "இந்த இடமே சிலையைப் பிரதிஷ்டை செய்வதற்கு நல்ல ஒரு ஸ்தலமாகும். குருவும் வாயுவும் ஆகிய நீங்கள் இருவரும் இந்தச் சிலையை பாதுகாப்பாகக் கொண்டு வந்து இங்கு சேர்த்ததால், இந்த ஸ்தலம் இனிமேல் குருவாயூர் என்கிற பெயரில் வழங்கப்படும். இங்கேயே பிரதிஷ்டை செய்யவும்" என்று அருளாசி கூறிவிட்டு, அருகில் இருக்கும் மம்மியூர் என்கிற ஸ்தலத்திற்கு நித்திய வாசம் மேற்கொள்ள தேவியுடன் சென்று விட்டார்.

குருவாயூரப்பனை தரிசனம் செய்யச் செல்பவர்கள் தரிசனத்தை முடித்த கையோடு மம்மியூர் சென்று மகாதேவரை வணங்கினால்தான் அதற்கு உண்டான பூரண பலம் கிட்டும் என்று கூறப்படுகிறது. மேலும் ருத்ர தீர்த்தத்தில் (தற்பொழுது தாமரைக் குளம் என்று சொல்லுகிறார்கள்)  நீராடினால் சகலவிதமான ரோகங்களும் நிவர்த்தியாகும் என்று கூறப்படுகிறது. பரீட்சித்து மகாராஜா நாகம் தீண்டி மாண்டு போனதால், அவருடைய புத்திரனான ஜனமேஜெயன் சகல நாகங்களையும் அக்னிக்கு இறையாக்கினான். அந்தப் பாவத்திற்காக குஷ்டரோகம் பீடித்து அவதிப்பட்டான். இந்த க்ஷேத்திரத்திற்கு வந்து, வழிபட்ட பிறகு அவனுடைய ரோகம் நிவர்த்தியானது.

குருவாயூர் க்ஷேத்திரத்தைப் பற்றிய மகிமையை,  நாராயண பட்டத்திரி,  நாராயணீயம் என்கிற பெயரில் சமஸ்கிருதத்திலும், பூந்தானை என்னும் மகான்,  ஞானப்பானை என்கிற பெயரில் மலையாளத்திலும் எழுதியிருக்கிறார்கள்.

உளவியல் விஞ்ஞானிகளுக்கு ஆன்மிகத்தின் அதிசயத்தை உணர்த்திய ஸ்ரீ சத்ய சாயி பாபா!

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

SCROLL FOR NEXT