sri ganapathi  
ஆன்மிகம்

மஹத்துவம் மிக்க  மஹா சங்கடஹர சதுர்த்தி!

ரேவதி பாலு

மக்கு ஆடி மாதம் தட்சிணாயன புண்யகாலம் ஆரம்பித்து விடுகிறது. பிறகு ஆறு மாதங்கள் வரிசையாக பண்டிகைகள்தான். அதில் முழுமுதல் கடவுள் பிள்ளையாருக்கு எடுக்கும் விழாதான் பிள்ளையார் சதுர்த்தி. மாதந்தோறும் சுக்ல பட்சத்தில், அதாவது வளர்பிறையில் அமாவாசை கழிந்த நான்காம் நாள் சதுர்த்தி திதி வரும். ஆவணி மாதத்தில் வரும் வளர்பிறை சதுர்த்தியை நாம் விநாயகர் பிறந்த நாளாக, விநாயக சதுர்த்தியாக கோலாகலமாக விமரிசையாக வழிபடுகிறோம். மாதந்தோறும் வளர்பிறை சதுர்த்தியன்று கோயில்களில் காலை நேரங்களில் கணபதி ஹோமம் செய்யப்படும்.

அதேபோல, மாதாமாதம் தேய்பிறை சதுர்த்தியும் சங்கடஹர சதுர்த்தியாக விநாயகர் வழிபாடு செய்யப்படுகிறது. கோயில்களில் மாலை நேரத்தில் விநாயகருக்கு அபிஷேகம், கோயிலுக்குள்ளேயே சுவாமி பிரதட்சணம் வருவது என்று விசேஷ வழிபாடுகள் நடைபெறும்.

தேய்பிறை சதுர்த்தியை சங்கடஹர சதுர்த்தி, அதாவது நமக்கு ஏற்படக்கூடிய சங்கடங்கள் அனைத்தையும் போக்கும் சதுர்த்தி என்று போற்றுகின்றன புராணங்கள். அன்றைக்கு நாம் செய்யும் விநாயகர் வழிபாடு நம்முடைய சங்கடங்கள் அனைத்தையும் போக்கும் என்பது நம்பிக்கை. சங்கடஹர சதுர்த்திகளில் முதன்மையானது மஹா சங்கடஹர சதுர்த்தி. விநாயகர் சதுர்த்திக்கு முன்பாக வரும் தேய்பிறை சதுர்த்தியையே நாம் மஹா சங்கடஹர சதுர்த்தி என்று அழைக்கிறோம்.

இந்த தேய்பிறை சதுர்த்தியைக் கொண்டாடும் பழக்கம் எப்படி வந்தது என்பதற்கு புராணத்தில் ஒரு கதை இருக்கிறது. ஒருமுறை வானத்தில் பிரகாசமாக ஒளி வீசிக்கொண்டு உலா வந்து கொண்டிருந்த சந்திர பகவான் விநாயகர் தனது பெரிய தொப்பையுடன் மூஷிகத்தின் மேல் வந்து கொண்டிருந்த காட்சியைப் பார்த்து கிண்டலாக சிரிக்க, கோபம் கொண்ட விநாயகர், "உன் ஒளி மங்கட்டும்!" என்று சாபம் இட்டாராம். சந்திர பகவான் நடுநடுங்கிப் போனார். பூமிக்கு சூரிய ஒளியைப் போல சந்திரனின் ஒளியும் மிகவும் அவசியமாயிற்றே? அதனால் விநாயகரே தனது சாபத்தை தளர்த்தி, "வளர்பிறை சதுர்த்தியில் உன்னைக் காண்பவர்கள் அபவாதம் அடையட்டும்" என்றார்.  அந்த அபவாதமும் ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தியான பிள்ளையார் சதுர்த்தியில் அவரை பூஜித்தால் தீர்ந்து விடும் என்றும் வரம் அருளினார்.

ஆனால், தேய்பிறை சதுர்த்தியில் சந்திர உதயமாகும் இரவு நேரத்தில் அவரை பூஜித்து பின் சந்திர தரிசனமும் செய்பவர்களுக்கு அவர்கள் மன சங்கடங்களையெல்லாம் தீர்த்து எல்லா நலங்களையும் வழங்குகிறார். எனவேதான், இந்த தேய்பிறை சதுர்த்தி சங்கடஹர சதுர்த்தி என்னும் பெயரால் வழங்கப்படுகிறது. சங்கடஹர சதுர்த்தி நாளில் சந்திர உதய நேரத்தில் விநாயகப் பெருமானை வழிபட்டு, பின்பு சந்திர தரிசனம் செய்தால் சகல தோஷங்களும் நீங்கும். வாழ்வில் சங்கடங்கள் தீரும்.

சங்கடஹர சதுர்த்தி அன்று விநாயகரைக் கட்டாயம் வழிபட வேண்டும். ஓராண்டு முழுவதும் வரும் 11 சங்கடஹர சதுர்த்தி அன்று வழிபாடு செய்ய இயலாதவர்கள், இந்த மஹா சங்கடஹர சதுர்த்தி அன்று விரதம் இருப்பது விசேஷம். அவ்வாறு விரதம் இருந்து மாலையில் விநாயகரை வழிபட்டால் ஓராண்டு முழுவதும் சங்கடஹர சதுர்த்தி விரதம் இருந்த பலன் கிடைக்கும். காலையிலிருந்து வெறும் பழம், பால் மட்டும் சாப்பிட்டு விட்டு விரதமாக இருந்து, மாலை கோயிலில் விநாயகர் அபிஷேகம், பிரதட்சணம் ஆகிய வழிபாடுகளை காணலாம். அல்லது நாமே வீட்டில் விநாயகர் படத்துக்கு எருக்க மாலை அணிவித்து, அஷ்டோத்திர அர்ச்சனை செய்து மோதகம், சுண்டல், அவல், பொரி, பழங்கள் போன்ற பிரசாதங்களை நைவேத்தியமாக படைத்து நமது கோரிக்கைகளை அவர் முன் வைத்து மன சங்கடங்கள் விலக மனமார வேண்டி வழிபடலாம். பிறகு சந்திர தரிசனம் செய்து விரதத்தை முடிக்க வேண்டும்.

விநாயகரை வணங்காமல் எந்த ஒரு காரியமும் ஆரம்பிக்கப்பட மாட்டாது. பூஜைகள், ஹோமங்கள், யாகங்கள் எல்லாவற்றுக்கும் ஆரம்பம் விநாயகர் வழிபாடுதான். முழுமுதற் கடவுளான விநாயகருக்கு உகந்த மஹா சங்கடஹர சதுர்த்தி விரதத்தை இன்று (3,9.2023) அனுசரிக்க வேண்டும். எல்லா இடங்களிலும் மிக விமரிசையாகக் கொண்டாடப்படும் இந்த மஹா சங்கடஹர சதுர்த்தியன்று நாமும் விநாயகரை வழிபட்டு நமது மன சங்கடங்களிலிருந்து விடுபட்டு  சகல சௌபாக்கியங்களையும் பெறுவோம்.

இந்தியாவில் நடக்கும் மிகப்பெரிய மோசடி… ஜாக்கிரதை மக்களே!

இது மட்டும் தெரிஞ்சா அதிக நேரம் கழிவறையில் இருக்க மாட்டீங்க! 

விளையாட்டு வீரரைப் போர் வீரராக மாற்றிய கம்பீர்… என்னாவா இருக்கும்???

மணக்கும் சுக்குட்டிக் கீரை மசியலும் புடலங்காய் பொரியலும்!

உங்கள் வீட்டு நாய் ஆரோக்கியமாக இருக்க என்னென்ன உணவுகள் கொடுக்கலாம்? கால்நடை மருத்துவர் டாக்டர். பிரியா விளக்கம்!

SCROLL FOR NEXT