திருப்பாற்கடலை கடைந்தபோது வெளிவந்த ஆலகால விஷத்தை உலகைக் காக்கும் பொருட்டு சிவபெருமான் அருந்தி விட, பார்வதி தேவி சிபெருமானின் தொண்டையிலே அந்த விஷத்தை தடுத்து நிறுத்தி விடுகிறார். அதனால் விஷம் சிவபெருமானின் தொண்டையிலேயே தங்கிவிடுகிறது. இதனால் ஈசனின் தொண்டை நீலநிறமாகக் காட்சி தருகிறது. அதிலிருந்து சிவபெருமான் நீலகண்டர் என்று அழைக்கப்படுகிறார். மகாசிவராத்திரி கொண்டாடப்படுவதற்கு இதுவும் ஒரு காரணம்.
தஞ்சாவூர் மாவட்டம், திருநீலக்குடியில் அமைந்திருக்கிறது அருள்மிகு நீலகண்டேஸ்வரர் திருக்கோவில். இக்கோயில் மூலவர் நீலகண்டேஸ்வரர் என்றும் பார்வதி தேவி ஒப்பிலாமுலையாள் என்றும் அழைக்கிறார்கள். இந்தக் கோயில் இரண்டாயிரம் வருடங்கள் பழைமையானது. சோழர்கள் இந்தக் கோயிலைக் கட்டியதாகக் கூறப்படுகிறது. 275 பாடல்கள் பெற்ற தலங்களின் வரிசையில் இக்கோயிலும் உள்ளது. திருஞானசம்பந்தர் இக்கோயிலை போற்றி பாடி உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஒரு சமயம் தேவர்களும், அசுரர்களும் பாற்கடலைக் கடையும்போது அதிலிருந்து வந்த ஆலகால விஷத்தை சிவபெருமான் அருந்தி நீலகண்டர் என்ற பெயர் பெற்றார். அதன் விளைவாக ஏற்பட்ட வலியினைப் போக்க பார்வதி தேவி சிவனுக்கு இங்கே எண்ணெய் அபிஷேகம் செய்து அந்த வலியினை போக்கியதாக வரலாறு.
இத்தலத்தில் சிவனுக்கான எண்ணெய் அபிஷேகம் இன்றும் தொடர்ந்து நடைபெறுகிறது. அப்படி சிவபெருமான் மீது அபிஷேகம் செய்யப்படும் நல்லெண்ணெய் அனைத்தையும் மூலவர் சிவலிங்கம் உறிஞ்சி விடுகிறது என்று கூறப்படுகிறது. அது மட்டுமில்லாமல், அடுத்த நாள் வந்து பார்த்தால், லிங்கத்தின் மீது ஒரு துளி எண்ணெய் கூட இல்லாமல் காய்ந்துபோனது போல இருப்பது ஆச்சரியம்.
இக்கோயில் சிவலிங்கத்தை பிரம்ம தேவன் தனது செய்த பாவம் தீர வணங்கி வழிபட்டதாகக் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி, மார்கண்டேயன் இங்குள்ள சிவபெருமானை நீண்ட ஆயுளுக்காக வழிபட்டதாகவும் சொல்லப்படுகிறது. இவர்கள் தவிர, காமதேனு, வசிஷ்டரிடம் பெற்ற சாபத்தை போக்குவதற்காக நீலகண்டேஸ்வரரை வழிபட்டது என்பதும் வரலாறு.
இக்கோயிலில் இருக்கும் சிவலிங்கம் 2 அடி உயரம் கொண்டது. சித்திரை திருவிழாவில் செய்யப்படும் நல்லெண்ணெய் அபிஷேகத்தை சிவலிங்கம் உறிஞ்சி கொள்கிறதாம். இக்கோயிலின் தல விருட்சம் பஞ்ச வில்வ மரம் என்பது இக்கோயிலுக்கு கூடுதல் சிறப்பு.