Motchathukku Vazhikaattum Vaikunda vaasal 
ஆன்மிகம்

மோட்சத்துக்கு வழிகாட்டும் வைகுண்ட வாசல்!

மும்பை மீனலதா

மார்கழி மாத வளர்பிறை காலத்தில் வரும் ஏகாதசி மோட்ச, பெரிய மற்றும் வைகுண்ட ஏகாதசி எனக் கூறப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறை பதினொன்றாவதாக வருவது ஏகாதசி திதியாகும். மாதம் இரண்டு என வருடத்திற்கு 24 ஏகாதசிகள் வருகின்றன.

போதுமான அவகாசம் உள்ளவர்கள் 24 ஏகாதசி விரதங்களையும் அனுஷ்டிக்கலாம். அவ்வாறு இயலாதவர்கள், வைகுண்ட ஏகாதசி அன்று விரதமிருந்தால் வைகுண்ட பதவி கிடைக்குமெனவும், அன்றைய தினம் இயற்கையாக மரணமடைபவர்கள் வைகுண்டம் செல்வர் எனவும் சொல்லப்படுகிறது.

ஏகாதசி விரத விபரங்கள்:

இன்று அதிகாலையில் எழுந்து அன்று செய்ய வேண்டிய நியமங்களை விதிப்படி செய்ய வேண்டும். ஏகாதசி தினம் துளசியை செடியிலிருந்து பறிக்கக்கூடாதென்பதால், முதல்நாளே பறித்து வைத்துக்கொள்ள வேண்டும். இன்று துளசி தீர்த்தம் மட்டுமே அருந்துவது சிறப்பாகும். முடியாதவர்கள் நிவேதனம் செய்த பழங்கள் மற்றும் பால் சாப்பிடலாம். பகலில் உறங்கக்கூடாது. விஷ்ணு சஹஸ்ரநாமம் மற்றும் பகவான் குறித்த நூல்களைப் படிக்கலாம். இரவில் பஜனைப் பாடல்களைப் பாடி இறைவனைத் தொழலாம். ஏகாதசி விரதம் பாவங்களை நீக்கும். உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

சொர்க்கவாசல்: வைகுண்ட ஏகாதசியன்றுதான் வைணவ ஆலயங்களில் சொர்க்கவாசல் எனப்படும் கதவுகள் திறக்கப்பட்டு, பக்தர்கள் அதன் வழியே சென்று தரிசனம் செய்வது வழக்கம். இதன் பின்னணியில் கூறப்படும் சில கதைகளில், முக்கியமான கதை ஒன்று பின்வருமாறு:

முற்காலத்தில் பிரம்மதேவனுக்கு ஏற்பட்ட அகங்காரத்தை ஒடுக்க நினைத்த மகாவிஷ்ணு, தன்னுடைய காதுகளிலிருந்து மது - கைடபர்கள் என்ற இரு அசுரர்களை வெளிபடச் செய்தார். அவர்கள் பிரம்மதேவனைக் கொல்ல முயல்கையில் மகாவிஷ்ணு அவர்களைத் தடுத்து, பிரம்மாவை விட்டு விடும்படியாகவும் அவர்கள் கேட்கும் வரத்தை அளிப்பதாகவும் கூறினார்.

அதற்கு அந்த அசுரர்கள் மகாவிஷ்ணுவிற்கு வேண்டுமானால் தாங்கள் வரம் தருவதாகக் கூறுகையில், மகாவிஷ்ணு தன்னால் அவர்கள் வதம் செய்யப்பட வேண்டுமென்ற வரத்தைக் கேட்டார்.

திடுக்கிட்டுப்போன அசுரர்கள் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற எண்ணி, தங்களை சமாளித்துக்கொண்டு, “தாங்கள் ஒரு மாத காலம் எங்களுடன் யுத்தம் செய்த பிறகே நாங்கள் ஸித்தி பெற வேண்டும்” என வேண்டினர். விஷ்ணுவும் அவ்வாறே வரம் அளித்து ஒரு மாத காலத்திற்குப் பின் அவர்களை வீழ்த்தினார். பகவானின் பரமபதத்தில் நித்தியவாசம் செய்ய வேண்டுமென்ற வரத்தினை மது - கைடபர்கள் கேட்டனர்.

அவ்வாறே மார்கழி மாத வளர்பிறை ஏகாதசியன்று பரமபதத்தின் வடக்கு வாசலை, அதாவது சொர்க்க வாசலை திறந்து, அதன் வழியாக அசுரர்களை வரச்செய்து பரமபதத்தில் சேர்த்துக்கொண்டார் மகாவிஷ்ணு.

தாங்கள் பெற்ற பேரின்பத்தை அனைவரும் பெற வேண்டுமென விரும்பிய அசுரர்கள், “எங்களுக்கு அருளிய இந்த அனுக்கிரகத்தை ஓர் உத்ஸவமாகக் கடைப்பிடித்தால் பக்தர்களும் அருள்பெறுவார்கள்” என பகவானிடம் விண்ணப்பிக்க, அவர்கள் கேட்டபடியே பகவானும் வரமருளினார்.

இதன்பொருட்டே, விஷ்ணு ஆலயங்களில் சொர்க்கவாசல் கதவு இன்றும் திறக்கப்பட்டு வைகுண்ட ஏகாதசி நாளில் மோட்சத்திற்கு வழிகாட்டுகிறார் பெருமாள்.

மகாவிஷ்ணு ஸ்தோத்திரம்:

‘ஸங்க சக்ரம் ஸகிரீட குண்டலம்

ஸவிதே வஸ்த்ரம் ஸரஸீரு ஹேக்ஷணம்

ஸஹார வக்ஷஸ்த்தல கெளஸ்துப ஸ்ரியம்

நமாமி விஷ்ணு ஸிரஸா சதுர்புஜம்!’

முள்ளங்கி ஜூஸின் ஆரோக்கிய பலன் தெரிஞ்சா குடிக்காம விடவே மாட்டீங்க!

அன்றாட சிறு சிறு உடல் பிரச்னைகளைப் போக்கும் எளிய உணவு மருத்துவம்!

இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்தால் இந்தியர்களுக்கு என்ன நன்மை? வாங்க தெரிஞ்சுக்கலாம்! 

உணவில் ருசிக்காக சேர்க்கப்படும் தக்காளியில் இத்தனை சத்துக்களா?

உலகிலேயே மிக பெரிய ரூபிக்ஸ் க்யூப் (Rubik’s Cube) எங்கு உள்ளது, அதன் எடை என்ன தெரியுமா?

SCROLL FOR NEXT