வள்ளி, தெய்வானை சமேத முருகப்பெருமான் 
ஆன்மிகம்

முக்கோடி கிருத்திகையின் விரத பலன்கள்!

கே.எஸ்.கிருஷ்ணவேனி

‘ஆடி கிருத்திகையில் ஆறுமுகனை வழிபட தேடி வரும் நன்மை’ என்பது ஆன்றோர் வாக்கு. கிழமைகளில் செவ்வாயும், திதிகளில் சஷ்டியும், நட்சத்திரங்களில் கிருத்திகையும் முருகனுக்கு மிகவும் உகந்தவை. தட்சிணாயன துவக்கமான ஆடி மாதத்தில் வரும் ஆடி கிருத்திகை மிகவும் சிறப்பு வாய்ந்தது. இன்று பழனி, திருச்செந்தூர், திருத்தணி போன்ற அறுபடை வீடுகளிலும், மலேசியா, இலங்கை போன்ற முருகன் கோயில்களில் வெகு விமர்சையாகவும், விசேஷமாகவும் இத்திருநாள் கொண்டாடப்படுகிறது.

திருத்தணி முருகன் கோயிலில் இந்நாளில் உலகெங்கிலும் இருந்து பக்தர்கள் வந்து பொய்கையில் நீராடி விரதம் இருந்து கோயிலில் நடைபெறும் மூன்று நாட்கள் தெப்ப உத்ஸவம் கண்டு களிப்பார்கள். காவடி எடுப்பதும், பால்குடம் எடுப்பதும், முடி காணிக்கை செலுத்துவதும் ஆடி கிருத்திகையில் நிகழும்.

விரதம் இருப்பவர்கள் அதிகாலையில் எழுந்து புண்ணிய தீர்த்தங்களில் நீராடி வீட்டை தூய்மைப்படுத்தி காலை உணவு எதுவும் எடுத்துக் கொள்ளாமல் ஒருவேளை அதுவும் மதியம் உப்பில்லா உணவை முருகனுக்குப் படைத்து அதை உண்டு இரவு பால் பழத்துடன் விரதத்தை முடிக்க வேண்டும்.

இன்றைய தினம் இறை சிந்தனையோடு கந்த சஷ்டி கவசம், கந்தர் அலங்காரம், திருப்புகழ், பாம்பன் சுவாமிகளின் சண்முக கவசம், கந்த குரு கவசம், வேல்மாறல் பாராயணம் போன்றவற்றை பாராயணம் செய்து கோயிலில் நடைபெறும் அபிஷேக ஆராதனைகளைக் கண்டு வருவதும் சிறப்பாகக் கூறப்படுகிறது. மாலை 6 மணிக்கு பூஜை அறையில், ‘ஓம் சரவணபவ’ என்ற எழுத்துக்களை எழுதி நட்சத்திர கோலம் போட்டு கோலத்தைச் சுற்றிலும் 6 மண் அகல் தீபத்தை வைத்து முருகனை வழிபடுவது சிறப்பு. முருகனுக்கு பால், பழங்களை நிவேதித்து தூப, தீப, கற்பூர ஆராதனை காட்டி பூஜையை நிறைவு செய்ய வேண்டும்.

மாதந்தோறும் வரும் கிருத்திகையில் விரதம் இருக்க முடியாதவர்கள் வருடத்திற்கு 3 கிருத்திகை தினத்தில் விரதம் இருந்து வழிபட அனைத்து கிருத்திகையிலும் விரதம் இருந்த பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். ஆடிக் கிருத்திகை, கார்த்திகை மாதத்தில் வரும் கிருத்திகை மற்றும் தை கிருத்திகை என்ற இந்த மூன்று கிருத்திகைகளை ‘முக்கோடி கிருத்திகை’ என்று அழைப்பார்கள்.

விரத பலன்கள்:

ஆடி கிருத்திகையில் விரதம் இருக்க ஞானம், சக்தி, ஆரோக்கியம், வெற்றி, வாழ்வில் செழிப்பு ஆகியவை உண்டாகும். வழக்குகள், சட்ட சிக்கல்களிலிருந்து விடுபட முருகப்பெருமானை வணங்கி விரதம் இருக்க பிரச்னைகள் தீரும். திருமணத்தடை, பிள்ளைப்பேறு உண்டாவதில் ஏற்படும் தடைகள் நீங்கி வாழ்வில் வேண்டியது கிட்டும்.

ஜாதகத்தில் செவ்வாய் கிரகத்தின் தாக்கம் இருக்க, முருகனை ஆடிக்கிருத்திகை அன்று விரதம் இருந்து வழிபட தீமைகள் அகலும். கடன் தொல்லைகள் நீங்கும். நோய் நொடி இன்றி ஆரோக்கியமாக இருக்கலாம். ஆடி கிருத்திகை விரதம் சகல தோஷங்களையும் நிவர்த்தி செய்யும். கர்ம வினைகள் நீங்கும். வீடு, வாகன வசதி, தொழில் அபிவிருத்தி போன்றவை சித்திக்கும் என்று கூறப்படுகிறது.

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

இவர்களைத் தெரியும்; இந்தத் தகவல்கள் தெரியுமா?

SCROLL FOR NEXT