Srirangam temple mystery Image Credits: Wikipedia
ஆன்மிகம்

ஸ்ரீரங்கம் கோயிலின் மர்மங்களும்; ரகசியங்களும்!

நான்சி மலர்

நூற்றியெட்டு திவ்யத் தலங்களில் முதன்மையானது, 'பூலோக வைகுண்டம்' என்று அழைக்கப்படுவது, தென்னிந்தியாவிலேயே உயர்ந்த ராஜகோபுரம் கொண்டது, பதினொரு ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்த தலம் எனும் சிறப்புப் பெற்றது, கவிச்சக்கரவர்த்தி கம்பர் தாம் இயற்றிய கம்ப ராமாயணத்தை அரங்கேற்றிய தலம் என பல்வேறு பெருமைகளைக் கொண்டது ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்கநாதர் திருக்கோயில்.

ஸ்ரீரங்கத்திற்கு இன்னொரு பெயர் திருவரங்கம். ‘அரங்கம்’ என்றால் தீவு என்று பொருள். காவிரி ஆற்றுக்கு நடுவே இருக்கும் தீவாகிய அரங்கத்தில் இறைவன் குடியிருப்பதால் இதை, ‘ஸ்ரீரங்கம்’ என்றும், இத்தலத்தில் அருளும் பெருமாளை ஸ்ரீரங்கநாதன் எனவும், தாயாரை ரங்கநாயகி என்றும் அழைக்கிறார்கள்.

அசுரன் ராவண வதத்திற்குப் பிறகு, அயோத்தி மன்னனாக ஸ்ரீராமர் முடிசூடிக் கொள்கிறார். அந்த விழாவில் விபீஷணன் கலந்துக் கொள்கிறார். நாராயணனின் சிறிய சிலையை விபீஷணனுக்கு ஸ்ரீராமர் பரிசளிக்கிறார். அதைப் பெற்றுக்கொண்டு இலங்கைக்குத் திரும்பும் வழியில் தினசரி செய்யவேண்டிய கர்மானுஷ்டானங்களைச் செய்ய எண்ணினார் விபீஷணர்.

அப்போது சிறுவன் உருவில் வந்த விநாயகப் பெருமானிடம் அந்தச் சிலையை கொடுத்துவிட்டு, ‘எக்காரணம் கொண்டும் இதை கீழே வைக்கக்கூடாது’ என்று சொல்லிவிட்டு சென்றார். விபீஷணன் வருவதற்கு நேரம் ஆனதால் விநாயகர் அந்தச் சிலையை கீழே வைத்துவிட்டு சென்றுவிட்டார். விபீஷணன் வந்து பார்க்கும்போது நாராயணன் சிலை பெரிதாக வளர்ந்திருப்பதைக் கண்டு ஆச்சர்யமடைகிறார். அதை எவ்வளவு எடுக்க முயற்சித்தும் முடியவில்லை. இதனால் விபீஷணன் கலக்கம் அடைந்தார். அப்போது ஒரு அசரீரி கேட்டது. ‘இந்த இடத்திலேயே சிலை இருக்கட்டும். நான் இங்கிருந்தே இலங்கை இருக்கும் திசையை பார்த்தவாறே வீற்றிருக்கிறேன்’ என அந்த அசரீரி கூறியது. இப்படித்தான் ஸ்ரீரங்கம் கோயில் உருவானது.

வளரும் நெற்குதிர்கள்: இக்கோயிலில் 20 அடி விட்டமும், 30 அடி உயரமும் கொண்ட நெற்குதிர்கள் சக்கரத்தாழ்வார் சன்னிதிக்கு அருகில் இருக்கின்றது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் அமைந்த இந்த நெல் சேமிப்பு கிடங்குகள் வட்ட வடிவம் கொண்டவை. மொத்தமாக 1500 டன் எடை கொண்ட நெல்லை இதில் சேமிக்க முடியும். இதில் எந்த காலத்திலு நெல் குறைந்து. பற்றாக்குறை ஏற்பட்டதில்லை. அதேபோல, எவ்வளவு நெல் கொட்டினாலும் அதை ஏற்றுக்கொள்ளும் தன்மையை உடையது இந்த நெற்குதிர்கள்.

அசையும் கொடிமரம்: எல்லா கோயில்களிலும் உள்ள கொடிமரங்கள் கல் மற்றும் மரத்தால் செய்யப்பட்டிருப்பதால் அசையாது. ஆனால். ஸ்ரீரங்கத்தில் உள்ள ரங்கவிலாஸ் மண்டபத்தின் அருகில் இருக்கும் கொடிமரத்தை வணங்கிவிட்டு மேலே பார்த்தால் அசையும் தோற்றம் தெரியும் என்கின்றனர். அப்படி அசைவது போலத் தோன்றினால், நாம் வேண்டியது நிச்சயம் நிறைவேறும் என்று சொல்லப்படுகிறது.

ஸ்ரீராமானுஜர் திருமேனி: ஸ்ரீராமானுஜர் தனது 120வது வயதில் பரமபதம் எய்தினார். பொதுவாக, வைணவ சம்பிரதாயப்படி வைணவ பதவி அடைந்த துறவிகளை எரியூட்ட மாட்டார்கள். அதற்கு பதில் உடல் பள்ளியூட்டப்படும். அதாவது. சமாதியில் அமரவைத்து மூடப்படும். அதேபோல. ராமனுஜரின் உடல்  ஸ்ரீரங்கத்தின் வசந்த மண்டபத்தில் பள்ளிப்படுத்தப்பட்டுள்ளது. அங்கே இருக்கும் ஸ்ரீராமானுஜரின் உடல் இன்றும் உயிரோட்டத்துடன் காட்சியளிக்கிறது. ராமானுஜரின் உடல் பச்சைக்கற்பூரம் மற்றும் குங்குமத்தால் செய்யப்பட்ட கலவையால் மூடப்பட்டுள்ளது. 900 ஆண்டுகள் கடந்தும் ராமானுஜரின் உடல் அப்படியே காட்சித்தருவது அதிசயமாகும்.

தேயும் செருப்புகள்: திருவரங்கத்தில் பள்ளிக்கொண்டிருக்கும் பெருமாள் அணிந்திருக்கும் காலணிகள் தேய்மானத்திற்குப் பிறகு ஸ்ரீரங்கம் திருக்கொட்டாரம் என்னும் இடத்தில் தூணில் மாட்டி வைத்திருப்பதைக் காணலாம். இந்த செருப்பை செய்வதற்கெனவே தொண்டர்கள் இருக்கிறார்கள். இரண்டு செருப்பையும் தனித் தனியாக வெவ்வேறு இடத்தில் செய்வார்கள். இருப்பினும் இரண்டுமே ஒன்றுபோலவே இருக்கும் என்பது அதிசயம்.

பெருமாளின் ஜொலிக்கும் கண்கள்: பெருமாளின் கண்கள் கோகினூர் வைரங்களை விட விலை மதிப்பற்ற வைரங்களால் உருவானவை என்றும், அது ஆங்கிலேயர் காலத்தில் திருடுபோய் விட்டது என்றும் சொல்கிறார்கள். அதை விபீஷணர் ஸ்ரீரங்கம் பெருமாளுக்கு வழங்கினார் என்றும் கூறப்படுகிறது.

ஐந்து குழி மூன்று வாசல்: ஸ்ரீரங்கம் கோயிலில் தாயார் சன்னிதிக்கு அருகில் உள்ள ஐந்து குழி மூன்று வாசல் அதிசயம் நிறைந்தது. இங்கிருக்கும் ஐந்து குழிகளிலும், ஐந்து விரல்களை விட்டு பார்க்கும்போது பரமபத வாசல் தெரியும். இப்படித்தான் தாயார் பெருமாளை வணங்குகிறார் என்பது ஐதீகம். அர்த்தபஞ்சக ஞானத்தை குறிப்பது ஐந்து புள்ளியாகும். மூன்று வாசல் என்பது பிரம்மத்தின் ஞானம் என்றும் கூறப்படுகிறது.

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

இவர்களைத் தெரியும்; இந்தத் தகவல்கள் தெரியுமா?

SCROLL FOR NEXT