Narasimha Perumal 
ஆன்மிகம்

நாளை என்பதே இல்லாத நரசிம்ம பெருமாள்!

ரேவதி பாலு

பொதுவாக, ஸ்ரீமஹாவிஷ்ணு எடுத்த அனைத்து அவதாரங்களும் அசுரர்களை அழித்து, தர்மத்தைக் காக்கவும், அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்டி பக்தர்களை துன்பங்களிலிருந்து காத்து ரட்சிக்கவும் எடுத்தவையே ஆகும். ஆனால், பெருமாள் எடுத்த அவதாரங்களிலேயே மிகவும் சிறப்புக்குரிய அவதாரமாக எல்லோராலும் போற்றப்படுவது நான்காவது அவதாரமாகிய நரசிம்ம அவதாரம் ஆகும். ஏனென்றால், மற்ற அவதாரங்கள் அனைத்திலும் அவதாரம் எடுத்து சிறிது காலம் பொறுத்து, நேரம் காலம் பார்த்து, போர் செய்து அதற்கு பிறகுதான் தர்மம் நிலைநாட்டப்பட்டது, பக்தர்கள் காப்பாற்றப்பட்டனர்.

ஆனால், நரசிம்ம அவதாரம் அப்படியில்லை. ‘நாளை என்பதே அறியாதவர் நரசிம்மர்’ என்பார்கள். தானே கடவுள் என்னும் கர்வத்துடன் இருந்தவன் இரண்யன்.  அவனுடைய ஐந்து வயது புதல்வன் பிரகலாதன் சிறுவயது முதலே நாராயண பக்தனாக இருக்கிறான். அதனால் கோபமுற்று அவன் தந்தையாகிய இரண்யன் அவனை பலமுறை கொல்ல முயற்சி செய்து தோல்வி அடைகிறான்.

கடைசியாக, "இத்தனை ஆண்டுகளாக நான் பார்க்காத கடவுளை, அவர் இருப்பதாக உறுதியாக சொல்கிறாயே, அப்படியானால் அவரை எனக்குக் காட்டு!" என்று புதல்வனிடம் கர்ஜிக்கிறான்.

"அவர் எங்கும் இருப்பார்! தூணிலும் இருப்பார்! துரும்பிலும் இருப்பார்!" என்று பிரகலாதன் சொல்கிறான்.

இரண்யன் ஒரு தூணை சுட்டிக்காட்டி, "அந்தக் கடவுள் இந்தத் தூணில் இருப்பானா?" என்று கேட்க, பிரகலாதன் "இருப்பார்" என்று சொல்கிறான். இரண்யன் அந்தத் தூணை தனது கதாயுதத்தால் பிளக்கும் நேரத்தில், அந்த நிமிடம், அந்த நொடியே பக்தனை காப்பதற்காக அவன் சுட்டிக்காட்டிய தூணிலேயே அவதாரம் எடுத்து எழுந்தருளியவர் நரசிம்ம  பெருமாள்.

மனித உடலும், சிங்கத் தலையும் கொண்டு ஆக்ரோஷமாக கர்ஜித்தவாறே பிரசன்னமானார். இரண்யன் வரம் பெற்றதைப் போலவே மனிதனும் இல்லாமல், மிருகமும் இல்லாத உருவம், மேலேயும் இல்லாமல், கீழேயும் இல்லாமல், இரவும் இல்லாமல் பகலும் இல்லாமல், ஆயுதம் இல்லாமல்  வெறு கைகளாலேயே இரண்யனை வதம் செய்தார்.

யோக நரசிம்மர், வீர நரசிம்மர், உக்கிர நரசிமர், லட்சுமி நரசிம்மர், கோப நரசிம்மர், சுதர்சன நரசிம்மர், அகோர நரசிம்மர், விலம்ப நரசிம்மர், குரோத நரசிம்மர் என்று நரசிம்மரின் ஒன்பது முக்கியமான தோற்றங்கள் கோயில்களில் காணப்படுகின்றன.  அநேகமாக எல்லா பெருமாள் கோயில்களிலும் நரசிம்மருக்கு ஒரு சன்னிதி அமைந்திருப்பதைக் காணலாம்.

சித்திரை மாதம் சதுர்த்தசி திதி சுவாதி நட்சத்திரம் கூடிய புண்ய தினத்தில் பிரதோஷ காலத்தில் அவதரித்த ஸ்ரீ நரசிம்ம மூர்த்தியின் அவதார இன்று. இந்த நாளில் விரதமிருந்து நரசிம்மர் ஸ்தோத்திரங்களை சொல்லி வழிபாடு செய்தால் மிக சிறந்த பலன்களைப் பெறலாம். மோட்சத்தையே சுலபமாகத் தரக்கூடிய ஸ்ரீ நரசிம்ம மூர்த்தி, பக்தர்கள் வேண்டும் அனைத்து பலன்களையும் தாமதமின்றி உடனே அளிக்கக்கூடியவர். தனது பக்தன் பிரகலாதன் பிரார்த்தித்த நொடியே பிரசன்னமானதால் அவர், ‘நாளையே இல்லாத நரசிம்மர்’ எனப் போற்றப்படுகிறார்.

பூச்சிகளின் கூட்டுக்கண்கள் பற்றி தெரியுமா? 

செம்பட்டை முடி கருகருன்னு மாறணுமா? வறண்ட கூந்தல் வளம் பெறணுமா? இதை ட்ரை பண்ணுங்க..!

சிறுகதை: என்னவள்... terms and conditions!

சென்னை அரசு மருத்துவமனையில் ஆன்மீகவாதியின் படம் வந்தக் கதை தெரியுமா?

பச்சை நிற ஏரி, யானைப் பாறை, வெந்நீர் ஊற்று - மிரள வைக்கும் அழகைக் கொண்ட 3 இடங்கள்!

SCROLL FOR NEXT