பகவான் மகாவிஷ்ணு எடுத்த தசாவதாரங்களில் முதன்மையான அவதாரம் மத்ஸ்ய அவதாரம்தான். நான்கு வேதங்களையும் அசுரர்களின் பிடியில் இருந்து காப்பதற்காகவும், ஜலப் பிரளயத்தில் இருந்து மனுவைக் காப்பதற்காகவும் திருமால் எடுத்த அவதாரமே மத்ஸ்ய அவதாரம் என்று விஷ்ணு புராணம் குறிப்பிடுகிறது. பரீட்சித் மஹாராஜா சுகப்ரஹ்ம மஹரிஷியிடம் மத்ஸ்ய அவதாரத்தின் பெருமைகளை கூறும்படி கேட்க, அதற்கு சுக ப்ரஹ்ம மஹரிஷி இந்த அவதாரத்தின் பெருமையை கூறுவதை ஸ்ரீமத் பாகவதம் நமக்கு அழகாய் எடுத்துக் காட்டுகிறது.
“பெருமாள் ஏன் (அற்பமான) மீனாக அவதாரம் எடுத்தார்” என்று பரீட்சித் கேட்க, அதற்கு சுக பிரஹ்மம், “திருமால், பசு, அந்தணர்கள், வேதம், தேவதைகளை காப்பதற்காகவே பற்பல அவதாரங்களை அவ்வப்போது எடுப்பார். ஒவ்வொரு அவதாரத்தின்போதும் வெவ்வேறு சரீரங்களை பெருமாள் எடுத்துக்கொண்ட போதும், வாயு (காற்று)வானது எப்படி எல்லாவற்றிற்குள்ளும் புகுந்து கொண்டாலும், சஞ்சரித்தாலும் காற்றின் தன்மை என்பது எப்படி மாறாமல் அப்படியே இருக்குமோ அப்படித்தான் பகவான் வெவ்வேறு சரீரங்களை, ரூபங்களை எடுத்துக்கொண்டாலும், பகவத் தன்மை என்பது மாறாமல் அப்படியே இருக்கிறார்.”
நைமித்திக ப்ரளயம், மஹா ப்ரளயம் என்று இரண்டு ப்ரளயங்கள் உண்டு. ஒரு முறை ப்ருஹ்மா உறங்கிக் கொண்டிருந்தபோது நைமித்திக பிரளயம் ஏற்பட, அச்சமயம் எங்கே பார்த்தாலும் தண்ணீர் பிரவாகம் எடுத்து ஓட, ப்ருஹ்மாவின் முகத்தில் இருந்து நான்கு வேதங்களும் வெளியேறி விட, அந்த சமயத்தில் ஹயக்ரீவர் ரூபம் கொண்ட ஒரு அசுரன் அந்த வேதங்களை அபகரித்துக் கொண்டு சென்று விட்டான். அந்த அசுரனிடமிருந்து வேதங்களை மீட்க பெருமாள் எடுத்த அவதாரமே மத்ஸ்ய அவதாரம்.
அப்படி மத்ஸ்ய அவதாரம் எடுத்த பெருமாள் மத்ஸ்ய நாராயணராக வேத நாராயணராக, சித்தூர் மாவட்டம், நாகலாபுரத்தில் அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார். மத்ஸ்யத்தோடு காட்சி கொடுக்கும் நாராயணரை தரிசிப்பது மிகவும் விசேஷம். இழந்த செல்வம், கல்வி, வேலை வாய்ப்பு என அனைத்தையும் நமக்காக மீட்டுத் தர இங்கே பிரயோக சக்கரத்தோடு நாராயணர் காத்துக் கொண்டிருக்கிறார். உலகிற்கே ஒளி வழங்கும் சூரிய பகவான் இப்பெருமானை திருவடி முதல் திருமுடி வரை வந்து தம் கதிர்களால் நமஸ்கரித்து விட்டு செல்லும் அதிசயத்தை என்னவென்று சொல்வது?
ஆம். ஒவ்வொரு ஆண்டும் பங்குணி மாதத்தில் சுக்ல துவாதசி, திரயோதசி மற்றும் சதுர்த்தசி கூடிய மூன்று நாட்களில், சூரிய கதிர்கள் தாமாகவே கருவறைக்குள் நுழைந்து முதல் நாள் பெருமாளின் திருவடியை தொழுவதையும், இரண்டாம் நாள் பெருமாளின் நாபியையும் நமஸ்கரித்து, மூன்றாம் நாள் பெருமாளின் திருமுடியில் வணங்கி விட்டுச் செல்லும் அதிசயம் இக்கோயிலில் அரங்கேறுகிறது.
இந்த சூரிய பூஜையை காண்பதற்காகவே பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அந்த சமயத்தில் இக்கோயிலுக்கு வருவார்கள். மத்ஸ்ய ஜயந்தி திருநாளான இன்று (ஏப்ரல் 11) மத்ஸ்ய நாராயண பெருமாளை நம் மனதில் நிறுத்தி பூஜிப்போம். நல்மதியும், நிம்மதியும் தர வேத நாராயண பெருமாள், மத்ஸ்ய நாராயணனாகக் காத்துக் கொண்டிருக்கிறார்.