ஸ்ரீராமரின் தீவிர பக்தராக இருக்கும் வீர ஆஞ்சநேயருக்கு இந்தியா முழுக்க பல்வேறு இடங்களில் கோயில்கள் உள்ளன. அவ்வகையில், தமிழக ஆந்திரா எல்லையில் வீற்றிருக்கும் ஸ்ரீ பிரசன்ன ஆஞ்சநேயர் திருத்தலம் குறித்த தகவல்களை இந்தப் பதிவில் காண்போம்.
ஆன்மீகத் தலங்களுக்கு செல்வது என்றால் பலருக்கும் பிடிக்குமல்லவா! அதிலும் பலம் வாய்ந்த வீர ஆஞ்சநேயர் திருத்தலங்களுக்கு பலரும் விரும்பிச் செல்வார்கள். சென்னையில் இருந்து திருப்பதி நோக்கி செல்லும் வழியில் கும்முடிபூண்டி மற்றும் எளாவூரை அடுத்து சுமார் 5கிமீ தொலைவில் பனங்காடு எனும் ஊரில் மிக உயரமாக காட்சியளித்து வருகிறார் ஸ்ரீ பிரசன்ன ஆஞ்சநேயர். சரியாக தமிழக ஆந்திர எல்லையில் இத்திருக்கோயில் அமைந்துள்ளதால், ஆந்திர மற்றும் தமிழக பக்தர்கள் ஆஞ்சநேயரைத் தரிசிக்க வருகை புரிகின்றனர். பக்தர்களுக்கு பிரசாதமாக கற்கண்டு வழங்கப்படுவது இத்தலத்தின் சிறப்பாகும். ஆஞ்சநேயர் என்றாலே செந்தூரம் தான் மிகச் சிறப்பு. இந்தத் திருத்தலத்திலும் செந்தூரத்துடன் குங்குமமும் வழங்கப்படுகிறது.
திருப்பதி நோக்கி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து இடதுபுறமாக பார்த்தால் 26 அடி உயரம் கொண்ட ஆஞ்சநேயர் சிலையைக் கண்டு ரசிக்கலாம். இக்கோயிலைப் பற்றி அறியாதவர்கள் கூட சாலையில் இருந்து உயரமான ஆஞ்சநேயர் சிலையைப் பார்த்து விட்டு, கோயிலுக்குள் வந்து வழிபடுகின்றனர். இடது கையில் கதையை ஏந்தியவாறு, வலது கையில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார் ஸ்ரீ பிரசன்ன ஆஞ்சநேயர். ஆஞ்சநேயரை மனதில் நிலைநிறுத்தி சிலை முன்பு பக்தர்கள் சிலர் தியானமும் மேற்கொள்கின்றனர். தமிழக ஆந்திர எல்லையில் கம்பீரமாக ஆஞ்சநேயர் வீற்றிருப்பதால், இவரை இங்குள்ள மக்கள் எல்லைச்சாமி என்றும் அழைக்கின்றனர்.
வார இறுதி நாளான சனிக்கிழமை ஆஞ்சநேயருக்கு உகந்த நாள் என்பதால், வாரந்தோறும் இந்நாளில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருக்கும். மேலும் விஷேச நாட்களிலும், விடுமுறை நாட்களிலும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் காணப்படும். கோயிலுக்குள் நுழைந்தவுடன் மூலவரான ஸ்ரீ பிரசன்ன ஆஞ்சநேயரை தரிசித்து விட்டு, கோபுரத்திற்கு வலப்புறம் சென்றால் இயற்கை எழில் கொஞ்சும் மரங்களும் செடிகளும் அதிகளவில் இருப்பதைக் காண முடியும். இதனைக் கடந்து 2 நிமிடங்கள் நடந்து சென்றால் தலை நிமிர்ந்து பார்க்கும் அளவிற்கு உயரமான ஆஞ்சநேயர் சிலையைக் காணலாம். சிலைக்குப் பின்புறம் நாகாத்தம்மன் சிலை இருக்கிறது. அங்கிருந்து திரும்பி கோபுரத்தை நோக்கி வந்தால் நவகிரக தரிசனம் கிடைக்கும்.
தொடர்ந்து 11 வாரம் சனிக்கிழமைகளில் ஸ்ரீ பிரசன்ன ஆஞ்சநேயரை வழிபட்டால் வேண்டியது நடக்கும் என்கின்றனர் பக்தர்கள். புதிதாய் பிறந்த குழந்தைக்கு ஆஞ்சநேயர் உருவம் பொறித்த வெள்ளி டாலரை வாங்கி, இக்கோயில் மூலவர் பாதத்தில் வைத்து பிரதிஷ்டை செய்து அணிவித்தால் எந்தத் தீய சக்திகளும் குழந்தைகளை அண்டாது.
கோயிலுக்குப் பின்புறம் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை காலி நிலமாகக் கிடக்கிறது. இவ்வழியே திருப்பதிக்கு செல்லும் பக்தர்கள் நிச்சயமாக ஆஞ்சநேயரைக் காணாது செல்லவே மாட்டார்கள். நேரம் கிடைத்தால், நீங்களும் ஒருநாள் ஸ்ரீ பிரசன்ன ஆஞ்சநேயரை தரிசித்து வாருங்கள்.