பெருமாளின் திருவடிவமாகக் கருதப்படுவது சாளக்ராமக் கல். இது நேபாளம் நாட்டில் உள்ள கந்தக ஆற்றிலிருந்து கிடைக்கிறது. இந்தக் கல்லை வைணவர்கள் மிகவும் புனிதமாகக் கருதுவார்கள். அதேபோல, சிவபெருமானின் மறு வடிவமாக இயற்கையாக உருவான கல் ஏதேனும் இருக்கிறதா என்று கேட்டால், நிச்சயமாக இருக்கிறது. அதுதான் நர்மதா நதிக்கரையிலே சுயம்புவாக உருவாகும் நர்மதேஸ்வரர் சிவலிங்கம். இந்த சுயம்பு லிங்கமானது புராண காலத்திலிருந்தே நர்மதை நதிக்கரையில் உருவாகிக் கொண்டிருக்கிறது. இதற்கு பாணலிங்கம் என்ற பெயரும் உண்டு. அதாவது தோஷமில்லாத லிங்கம் என்று பொருள். இது கருப்பு, வெள்ளை, பிரவுன் நிறங்களில் கிடைக்கிறது. சுண்டு விரல் அளவு முதல் ஒரு அடி வரை இந்த லிங்கம் இருக்கிறது.
நர்மதேஸ்வரர் லிங்கம் உருவான கதை. பாணன் என்னும் அசுரன் சிவபெருமானை நோக்கிக் கடும் தவம் புரிந்தான். அவனின் தவத்தை கண்டு சிவபெருமான் மகிழ்ந்து அவன் முன் காட்சியளித்து, ‘என்ன வரம் வேண்டும்’ என்று கேட்டார். அதற்கு அவன் ‘தங்களை பூஜை செய்ய எனக்கு ஆயிரம் தலைகள், இரண்டாயிரம் கைகள் மற்றும் சிவலிங்கங்கள் வேண்டும்’ என்று வரம் கேட்டான். சிவபெருமானும் அவனுக்கு ஆயிரம் தலைகளும், இரண்டாயிரம் கைகளும், 14 கோடி சிவலிங்கமும் வழங்கி அருள் புரிந்தார். அசுரன் பாணன் வழிபட்ட லிங்கமே பாணலிங்கம் என்று கருதப்படுகிறது.
இந்த நர்மதேஸ்வரர் சிவலிங்கம் சிவபெருமானுக்கு மிகவும் உகந்ததாகக் கருதப்படுகிறது. யோகிகளும், முனிவர்களும் நர்மதேஷ்வர் சிவலிங்கத்தை விரும்பி வணங்கி அதற்கு பாலபிஷேகம் செய்து வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் சிவபெருமானின் பரிபூரண அருள் கிடைக்கும் என்று அவர்கள் நம்பினர்.
நர்மதேஸ்வரர் சிவலிங்கத்தை வழிபட்டால், எப்பேர்ப்பட்ட கிரக பிரச்னையாக இருந்தாலும் அது நீங்கிவிடும். சனி மகாதிசை, ஏழரை சனி, அஷ்டமத்து சனி என்று துன்பப்படுவோர் அனைவருக்கும் இந்த நர்மதேஸ்வரர் லிங்கத்தை வைத்து வழிபட்டால் கஷ்டங்கள் குறையும். ஜாதகத்திலிருக்கும் கிரகக் கோளாறுகளையும் இந்த நர்மதேஸ்வரர் சிவலிங்கம் நீக்கி விடும். கணவன், மனைவிக்குள் இருக்கும் பிரச்னைகள் நீங்கும், பணப்பிரச்னை, வீட்டில் உள்ள வாஸ்து கோளாறு, திருமணம் தள்ளிப்போவது, குழந்தையின்மை, நோய்வாய்ப்பட்டு இருப்பது போன்ற எல்லா பிரச்னைகளையும் விலக்கி நன்மையை தரும். இதை வைத்து வழிபடும் பொழுது ஞாபக சக்தி கூடும், கவனச்சிதறல் ஏற்படாது. அதனால்தான் முனிவர்கள் தங்கள் வழிபாட்டு இடங்களில் இந்த நர்மதேஸ்வரர் லிங்கத்தை வைத்து வழிபட்டனர். இது இருக்கும் இடத்திலே நேர்மறை ஆற்றல் உண்டாகும்.
சில கோயில்களில் நர்மதேஸ்வரர் சிவலிங்கத்தை விரும்பி வைப்பார்கள். அதிக மக்கள் கூடும் இடத்தில் அதிக சக்தி இருக்க வேண்டும், பாசிட்டிவ் வைப்ரேஷன் இருக்க வேண்டும் என்று இந்த லிங்கத்தை வைத்திருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
நர்மதேஸ்வரர் சிவலிங்கத்தை வீட்டில் தாராளமாக வைத்து வழிபடலாம். அதுமட்டுமின்றி, தொழில் செய்யும் இடங்களிலும் வைத்து வழிபடலாம். திங்கட்கிழமை அல்லது பௌர்ணமியன்று இந்த சிவலிங்கத்துக்கு பாலபிஷேகம் அல்லது கங்கா ஜல அபிஷேகம் செய்தாலே போதுமானதாகும்.