sri krishna https://onling.goodscansm.best
ஆன்மிகம்

புதிர் போட்டு விளையாடிய ஸ்ரீகிருஷ்ணர்!

மாலதி சந்திரசேகரன்

புதிர் விளையாட்டு என்பது ஒரு சுவாரஸ்யமான பொழுதுபோக்குதான். புதிர் கேட்பவர்கள் சுலபமாகக் கேட்டு விடுவார்கள். பதில் சொல்பவர்களுக்குத்தான் சில சந்தேகங்கள் வரும். சில சமயம் புதிரே தவறாகக் கேட்கிறார்களோ என்கிற எண்ணம் கூடத் தோன்றும். இப்படி ஒரு சிக்கலான சூழ்நிலைதான் ஒரு சமயம் பாண்டவர்களுக்கும் ஏற்பட்டது.

ஒரு நாள் சகாதேவன் சந்தைக்கு சென்று கொண்டிருந்தார். வழியில் ஒரு அழகான குதிரையை கண்டார். அதைக் கண்டவுடன் வாங்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது.  அருகில் இருந்த குதிரை வியாபாரியிடம், “இந்த குதிரை என்ன விலை?” என்று கேட்டார்.

“இதை விலைக்கு தரப்போவதில்லை. நான் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலைச் சொன்னால் இனாமாகவே இந்த குதிரையை தந்து விடுவேன்” என்றான் வியாபாரி.

“அப்படியா? நானும் அந்தக் கேள்வியைத் தெரிந்துகொள்ள ஆவலாக இருக்கிறேன்” என்றார் சகாதேவன்.

“இரு. நான் கூறுவதை கவனமாகக் கேட்டுக்கொள். ஒரு பெரிய கிணறு உள்ளது. அதை சுற்றிலும் ஏழு சிறிய கிணறுகள் உள்ளன. பெரிய கிணறின் நீரை எடுத்து ஏழு சிறிய கிணறுகளை நிரப்ப முடியும். ஆனால், ஏழு கிணறுகளில் இருக்கும் நீரால் பெரிய கிணற்றை நிரப்ப முடியாது. ஏன் அப்படி?” என்பதே அந்தக் கேள்வி.

சகாதேவன் விடை தெரியாமல் யோசித்தபடியே அங்கேயே அமர்ந்து விட்டார். அடுத்து நகுலன் அந்தச் சந்தைக்கு வந்தார். அவரும் அந்த குதிரையைக் கண்டு, வாங்க வேண்டும் என்று பிரியப்பட்டு, குதிரை வியாபாரியிடம் விலையைக் கேட்டபொழுது, சகாதேவனுக்குச் சொன்ன அதே நிபந்தனையை  நகுலனிடமும் வியாபாரி சொன்னான்.

“சரி கேள்வியைக் கேளுங்கள்” என்றார் நகுலன். ஒரு ஊசியின் காது வழியாக ஒரு யானை நுழைந்து மறுபக்கம் செல்ல முடிந்தது. ஆனால், அதன் வால் மட்டும் மாட்டிக்கொண்டது. எதனால்?” என்றான் அவன்.

விடை கூற முடியாமல், நகுலனும் சகாதேவனுடன் சேர்ந்து அமர்ந்து கொண்டார். அடுத்தது, அர்ஜுனன் அங்க வந்தார். அவரும் அந்தக் குதிரையைப் பற்றிக் கேட்க, அவரிடமும் வியாபாரி ஒரு புதிரை விடுத்தான்.

“வேலி போடப்பட்ட ஒரு வயலில் விளைச்சல் நன்றாக இருந்தது. அறுவடை செய்யும் நேரத்தில் விளைந்த தானியங்கள் எதுவுமே காணப்படவில்லை.வேலியும் அப்படியே இருந்தது. யார் எடுத்திருப்பார்கள்?” என்று கேட்டான். விடை தெரியாமல் அர்ஜுனனும் நகுலன் மற்றும் சகாதேவனுடன் அமர்ந்து கொண்டார்.

மூன்று தம்பிகளையும் வெகு நேரம் காணாமல், பீமனை கூப்பிட்டு அவர்களைத் தேடி கண்டு வரும்படி கூறி அனுப்பினார் தருமர். பல இடங்களில் தேடி கடைசியாக சந்தையில் மூவரும் அமர்ந்து இருந்ததைப் பார்த்து, விபரங்களை அறிந்து கொண்டார். “குதிரையும் வேண்டாம் ஒன்றும் வேண்டாம். அண்ணன் உங்களைக் காணாமல் மிகுந்த கவலையோடு இருக்கிறார்.  எல்லோரும் என்னுடன் கிளம்புங்கள்” என்று கூட்டிக்கொண்டு போனார். தம்பிமார்களை கண்ட தருமர், அவர்கள் சந்தைக்கு போன விபரத்தையும், வியாபாரி விடுத்த புதிர்களையும் கேட்டு தெரிந்து கொண்டார்.

“நீங்கள் நினைப்பது போல் அங்கு இருந்தவர் குதிரை வியாபாரி அல்ல. ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவேதான். ஏனென்றால், இந்தப் புதிர்களுக்கு உண்டான விடைகளை சூசகமாக எல்லோரும் அறிந்து கொள்வதற்காகத்தான் உங்களிடம் கேட்டிருக்கிறார். அந்த விடைகளை நான் கூறுகிறேன். முதலில் கூறிய பெரிய கிணறு என்பது பெற்றோர். சிறிய கிணறுகள் குழந்தைகள். பெற்றோர் எத்தனை குழந்தைகள் பிறந்தாலும் அவர்களை பேணிக்காப்பார்கள். ஆனால், குழந்தைகள் பெற்றோரை கவனிக்கத் தவறி விடுவார்கள் என்பதுதான் அதன் விடை. இரண்டாவதாகக் கூறிய ஊசியின் காது வழியே யானை போனது. வால் போக முடியவில்லை என்பது கெட்ட விஷயங்கள் சீக்கிரமாக மனிதரிடையே ஊடுருவி பரவி விடும்.  நல்ல விஷயம் என்பது எளிதில் ஒருவரையும் சென்று அடையாது என்பதுதான். மூன்றாவதாகக் கூறிய விளைந்த நிலம் என்பது மக்கள். வேலி என்பது அதிகாரி. அதிகாரிகள் மக்களின் நலனில் அக்கறை கொண்டு அவர்களை பாதுகாக்காமல் அவர்களே மக்களிடம் சுரண்டி அவர்களை ஓட்டாண்டி ஆக்கி விடுவார்கள் என்பதுதான். புதிர்களின் பொருள் புரிகிறதா தம்பிகளா?” என்றார் தருமர்.

புரிகிறது என்பது போல் நால்வரும் தலையை அசைத்தார்கள். ஆம், ஐயாயிரம் வருடங்களுக்கு முன்பாகவே இன்று என்ன நடக்கப்போகிறது என்பதை ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா  கூறிவிட்டார்.

முள்ளங்கி ஜூஸின் ஆரோக்கிய பலன் தெரிஞ்சா குடிக்காம விடவே மாட்டீங்க!

அன்றாட சிறு சிறு உடல் பிரச்னைகளைப் போக்கும் எளிய உணவு மருத்துவம்!

இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்தால் இந்தியர்களுக்கு என்ன நன்மை? வாங்க தெரிஞ்சுக்கலாம்! 

உணவில் ருசிக்காக சேர்க்கப்படும் தக்காளியில் இத்தனை சத்துக்களா?

உலகிலேயே மிக பெரிய ரூபிக்ஸ் க்யூப் (Rubik’s Cube) எங்கு உள்ளது, அதன் எடை என்ன தெரியுமா?

SCROLL FOR NEXT