பீஷ்மர் தன்னிலை விளக்கம் 
ஆன்மிகம்

புத்தியையும் செயலையும் நிர்வகிக்கும் உணவு குறித்து பிதாமகர் பீஷ்மரின் விளக்கம்!

சேலம் சுபா

குருக்ஷேத்ர யுத்தம் முடிந்த பிறகு தருமர் சக்கரவர்த்தியாக முடிசூட்டப்பட்டு ஆட்சியில் அமர்ந்தார். அம்புப் படுக்கையில் இருந்த பீஷ்மர், சூரியன் வடதிசை நோக்கி பயணிக்கும் உத்ராயண புண்ணிய காலத்தை எதிர்பார்த்து தம் உயிரை விடுவதற்காகக் காத்திருந்தார்.  

ஒரு நாள் தருமர் தனது தம்பிகளுடனும் திரௌபதியோடும் பீஷ்மரைக் காண குருக்ஷேத்ரத்துக்குப் புறப்பட்டார். அனைவரும் பீஷ்மரைக் கண்டு வணங்கி அமர்ந்தனர். பீஷ்மர் தனது உரையாடலில் வர்ணம், ஆசிரமம், மக்களின் கடமை, அரசரின் கடமை போன்ற பல விஷயங்களைப் பற்றிக் கூறினார். இந்த உரையாடலின் இடையில் திடீரென்று திரௌபதியின் சிரிப்பு ஒலி கேட்டது.

சிரிப்பு சத்தத்தைக் கேட்ட அனைவரும் ஆச்சரியத்துடன் பார்க்க, பீஷ்மர் தன்னுடைய தர்மோபதேசத்தை நிறுத்தி, திரௌபதியை நோக்கி, "மகளே, ஏனம்மா சிரித்தாய்?" என்று கேட்டார்.

திரௌபதிக்கோ நாணமாகப் போய்விட்டது. "என்னை மன்னித்து விடுங்கள் பிதாமகரே. ஏதோ அறியாமல் சிரித்து விட்டேன்" என்றாள். ஆனால், பீஷ்மர் இந்த பதிலால் திருப்தி அடையவில்லை. அவர், "குழந்தாய் எந்தப் பெண்மணியும் பெரியவர்கள் கூடிய இடத்தில் இப்படி சப்தமாக சிரிக்க மாட்டார்கள். மேலும் நீ சிறந்த குணவதி. அப்படிப்பட்ட உனக்கு காரணம் இன்றி எதற்காக சிரிப்பு வந்திருக்கும்? எனவே, வெட்கப்படாமல் சிரித்ததற்கான காரணத்தைச் சொல்" என்று கனிவுடன் கேட்டார்.

திரௌபதி கண்களில் நீர் ததும்பு, தனது கைகளை கூப்பி பீஷ்மரை வணங்கி "பெரியவரே, இது மிகவும் சிறிய விஷயம்தான். இருப்பினும் தாங்கள் கேட்டதால் கூறுகிறேன். நான் சொல்வதைக் கேட்டு தயவு கூர்ந்து என் மீது கோபப்படாதீர்கள். தாங்கள் இப்போது தர்மம் பற்றி இவ்வளவு உபதேசங்கள் சொல்கிறீர்கள். அதைக் கேட்டதும் திடீரென்று என் மனதில் இது தோன்றியது. இன்று தர்மத்திற்கு இத்தனை சிறந்த விளக்கத்தை கொடுக்கும் இதே பிதாமகர் கௌரவர் சபையில் துச்சாதனன் என்னை மானபங்கப்படுத்த முயன்று கொண்டிருந்தபோது வாய் மூடி  மௌனமாகத்தானே பார்த்துக் கொண்டிருந்தார்? ஒருவேளை இவர் இந்த தர்ம விஷயங்களை பிறகுதான்  கற்றாரோ என்று எல்லாம் மனதில் நினைத்தேன். உடனே எனக்கு சிரிப்பு வந்து விட்டது. என்னை மன்னியுங்கள்" என்றாள்.

பிதாமகர் பீஷ்மர் சாட்டையடி பட்டது போல வேதனையுடன் அவளைப் பார்த்தார். பிறகு அமைதியாக அவளுக்கு பதில் கூறினார். "குழந்தாய், உனது கேள்வி நியாயமானதுதான். இதில் உன்னை நான் மன்னிப்பதற்கு என்னம்மா இருக்கிறது? துரியோதனன் சபையில் நான் இருந்த அந்த சமயத்திலும் பல விஷயங்களைப் பற்றிய அறிவு எனக்கு இருக்கத்தான் செய்தது. ஆனால், துஷ்டனான துரியோதனனின் உணவை அல்லவா நான் சாப்பிட்டு வந்தேன். அது காரணமாக எனது அறிவு மழுங்கி, நன்மை, தீமைகளை பற்றி யோசிக்க முடியாமல் போய்விட்டது. தீயவர்கள் போடும் உணவை சாப்பிட்டால் சாப்பிடுபவனின் மனமும் உடலும் கெட்டுப் போய்விடுகிறது என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.

இப்போது, அர்ஜுனன் போரில் என் மீது வீசிய அம்புகளால்  கெட்ட உணவை சாப்பிட்டதனால்  உண்டான  இரத்தம் எல்லாம் என்னுடலில் இருந்து வெளியாகிவிட்டது.  ரத்தம் ஒரு சொட்டு விடாமல் உடலை விட்டு நீங்கியதால் என் புத்தி தெளிந்துவிட்டது. அதனால்தான் இப்போது இந்த அளவுக்கு தர்மத்தின் தத்துவங்களை சரியாக எடுத்துச் சொல்ல முடிந்தது" என்றார் பீஷ்மர்.

ஒருவர் உண்ணும் உணவு கூட எந்தளவுக்கு அவரின் உடலையும் மனதையும் செய்யும் செயலையும் நிர்ணயிக்கிறது என்பதை பீஷ்மரின் இந்த விளக்கம் அங்கிருந்தவர்கள் அனைவருக்கும் விளக்கியது. அதைக்கேட்டு தருமர் முதலான அங்கிருந்தவர்கள் அனைவரும் பீஷ்மரை வணங்கினர்.

திப்பு சுல்தானை ஆங்கிலேயரிடமிருந்து காத்த திண்டுக்கல் மலைக்கோட்டை பெருமை தெரியுமா?

இவள் இருட்டில் மட்டுமே வருவாள்! 

புரதம் நிறைந்த சோயா கீமா செய்யலாம் வாங்க! 

மாதச் சம்பளம் வாங்குபவர்கள் செய்யும் 6 நிதித் தவறுகள்! 

ஆரஞ்சு Vs சாத்துக்குடி: எது சிறந்தது?

SCROLL FOR NEXT